Thursday, July 31, 2014

ஷேர் மார்க்கெட் புத்தகம் - இழக்காதே - அணிந்துரை

ஒவ்வொரு மனிதனுக்கும் மனதுக்கு நெருக்கமான விஷயம் இருக்கும். எனக்கு ‘இழக்காதே’புத்தகம்.

இன்று முதல் உலகமெங்கும் ஆன்லைனில்

மற்றும் நாளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஈரோடு புத்தகக் கண்காட்சியில்..

இதற்கு சென்னை பங்குச் சந்தையின் இயக்குனர் திரு.நாகப்பன் எழுதிய அணிந்துரை:

“Any intelligent fool can make things bigger, more complex, and more violent. It takes a touch of genius — and a lot of courage to move in the opposite direction.”
― E.F. Schumacher, British Economist & Statistician.
பங்குச் சந்தைகளின் உலகம் பரவமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent  fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது.

பங்கு முதலீடு குறித்து பிலாக்கில் எழுதுகிறவர் - இப்படித்தான் செல்லமுத்து குப்புசாமியை நான் ஆரம்ப நாட்களில் அறிந்திருந்தேன். அவற்றில் சிலவற்றை வாசித்த போது அவற்றோடு லயித்துப் போனேன். அப்போது இவர் மென்பொருள் துறையைச் சார்ந்தவர் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பாரம்பரியம் மிக்க சென்னை பங்குச் சந்தையில் நடக்கும் மாதாந்திர முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டமொன்றில் உரையாற்ற அவரை அழைத்த சமயத்தில்தான் எனக்கே அது தெரிந்தது. பார்வையாளர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தும் போது உண்மையிலேயே நான் ஆச்சரியமடைந்தேன். ஒரு technology geek எப்படி பங்குச் சந்தையில் ஆர்வமடைந்தார் என்ற வியப்பையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, பார்வையாளர்களை தன் உரையில் வசப்படுத்தினார்.

நான் ஆச்சரியமடைந்ததற்குக் காரணம் இல்லாமலில்லை. ஐடி துறை இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் செலவு செய்வதற்குக் கணிசமான உபரிப் பணத்தை அளித்திருக்கிறது. அந்த உபரியை சிக்கனமாகச் சேமிப்பது குறித்தும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது குறித்தும் அவர்கள் அறிந்திருக்க வேண்டியது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அது அவர்களது தனிப்பட்ட நலனுக்கும், எதிர்கால இந்தியாவின் நலனுக்கும் உகந்தது. ஆனால் முப்பத்தைந்து வயதுக்குள்ளான இந்த ஐடி துறை ஆட்களிடம் பேசிப் பாருங்கள். இன்வெஸ்ட்மெண்ட் பிளானிங் அல்லது ஃபினான்சியல் பிளானிங் பற்றிப் பேசினாலே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதிலும் குறிப்பாக பங்குச் சந்தை பற்றியெல்லாம் பேசினால் கேட்கவே வேண்டாம். உங்கள் ஃபிரண்ட்ஷிப்பையே கட் செய்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அதற்காக அவர்களையும் குறை கூற இயலாது. அவர்கள் வாசிக்கின்ற மொழியில், அவர்களுக்கு இலகுவாகப் புரிகிற வகையில் மிகக் குறைவான புத்தகங்களே எழுதப்பட்டுள்ளன.

செல்லமுத்து குப்புசாமியின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது அவர் தினசரி வாழ்வில் கடந்து வரும் மனிதர்களிடன் சந்திக்கும் இந்த நடைமுறைப் பிரச்சினையை உணர்ந்தே பங்குச் சந்தை குறித்து ஆழமாக இதை எழுதத் தீர்மானித்திருக்கிறார் எனப் புரிகிறது. ஆழமாக என்பதோடு கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் நபரின் அணுகுமுறையை இதில் காண்கிறேன்.

லியானார்டோ டா வின்சி சொன்னார்: “Simplicity is the ultimate sophistication.“ இந்தப் புத்தகம் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஏராளமான நிகழ்கால உதாரணங்கள், உபயொகமான குறிப்புகள், பயனுள்ள டிப்ஸ் முதலியவற்றை நெடுகிலும் கொட்டி வைத்திருக்கிறார். இதெல்லாம் கற்பதை சந்தோஷமானதாக ஆக்குமென்பது நிச்சயம்.

இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம் இது இந்தியக் கண்ணோட்டத்தோடு, இந்தியப் பங்குச் சந்தையின் உதாரணங்களோடு வந்திருப்பதுதான். அந்த மாதிரி எழுதப்பட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய புத்தகங்களில் முக்கியமான ஒன்றாக இது திகழும். பங்கு முதலீட்டின் போது நாம் செய்யும் வழக்கமான தவறுகள், அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்களை விளக்க சமகால நடைமுறை உதாரணங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார். குழந்தையைக் கையைப் பிடித்து நடை பழக்கி விடுவது போல புத்தகம் நெடுகிலும் நம்மை அழைத்துச் செல்கிறார். திருவாளர்கள் காசப்பன், திருவாளர் சந்தை ஆகிய கற்பனைப் பாத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன.

ஃபண்டமெண்டல் அனாலிசிஸ், டெக்னிகல் அனாலிசிஸ் முதலிய அடிப்படையான விஷயங்களோடு பணவீக்கம், EPS, PE விகிதம், புத்தக மதிப்பு etc சங்கதிகளையும் பங்குச் சந்தையில் புழங்கும் கோட்பாடுகளையும், டெக்னிக்குகளையும் கற்றுக்கொள்ளும் கருவியாக ஸ்போர்ட்ஸ் & சயின்ஸை இவர் பயன்படுத்தியிருப்பது நம்மை வசீகரிக்கிறது. ராகுல் திராவிட் பேட்டிங் செய்வதை வைத்து முதலீட்டுக் கொள்கையை உருவாக்க முடியுமென்பதைத் தெளிவாக விளக்குகிறார். ஆனானப்பட்ட நியூட்டனே பங்குச் சந்தையில் சறுக்கினார் என்பதையும் நமக்குக் கோடி காட்டும் செல்லமுத்து குப்புசாமி அளவான எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்வதன் அவசியத்தை வலுயிறுத்துகிறார். ஒரு விஞ்ஞானியிடமும், கிரிக்கெட் வீரரிடமும் பங்குச் சந்தை குறித்துக் கற்க முடியுமென்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

இந்தப் புத்தகம் சரியான சமயத்தில் வெளிவந்திருக்கிறது. முன்னெப்போதையும் விட இன்றைக்கு மிகவும் பொருத்தமான ஆவணமாக இது திகழும். இந்திய அரசாங்கம் இரண்டாம் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. கடந்த கால நிகழ்வுகளைக் கவனிக்கும் போது இந்திய சந்தைகளின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கூடியிருக்கிறது. இந்தியப் பங்குகளில் தமது குதலீடுகளைக் குவிக்கிறார்கள். இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்த ப்ராசஸில் கலந்து கொண்டு பயனடைவது அவசியம். அதற்குரிய அவசியமான கையேடாக இந்த நூல் அமையும் என்பது நிச்சயம்.

நீண்டகால நோக்கில் அணுகினால் பணவீக்கத்தை விடக் கூடுதலாக இலாபமீட்டுவதற்கு உகந்த இடம் பங்குச் சந்தையாகும். நிரந்தர வேலைக்கான உத்தரவாதமோ, மேலை நாடுகளைப் போல சோசியல் செக்யூரிட்டோ இல்லாத நம் நாட்டில் இந்தத் தலைமுறையினர் புத்திசாலித்தனமாக முதலீடுகளை மேற்கொண்டு கணிசமான இலாபத்தை ஈட்ட வேண்டியது முக்கியம்.

தனிப்பட்ட முறையில், பர்சனல் ஃபைனான்ஸ் & முதலீட்டுத் துறையில் ஆறு புத்தகங்களையும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் எழுதிய எனக்கே இந்தப் புத்தகத்தை வாசிப்பது சுகானுபவமாக அமைந்தது. பல விஷயங்களை மறுபடியும் கற்றுக்கொண்டது போலிருந்தது.

தினவர்த்தகம் செய்வோர், பங்குத் தரகர்கள், பங்கு ஆய்வாளர்கள், வல்லுனர்கள், பரிந்துரை செய்வோர் ஆகியோருக்காக ஓவர்லோட் ஆன தகவல்களோடு தான் பெரும்பாலான புத்தகங்கள் பொதுவாக எழுதப்படுகின்றன. இவையெல்லாம் பங்குச் சந்தையை ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள ஆசைப்படும் வெளியாட்களைக் குழப்புவதாகவும், சங்கடத்தில் ஆழ்த்துவதாகவும் முடிவதுண்டு. மாறாக, உங்கள் கையிலிருக்கும் இந்தப் புத்தகம் தொடர்ச்சியாகக் கற்கும் வேட்கையுள்ள ஒரு நிபுணரால் கற்றுக்கொள்ள விரும்புவோரையும், வல்லுனர்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள விஷயங்களை உள்வாங்குவதன் மூலம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வலுவான பங்கு முதலீட்டுக் கொள்கைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து, அதன் மூலம் நிம்மதியான எதிர்காலத்துக்கும், நிதிச் சிக்கல்களிலிருந்து முழுமையான விடுதலைக்கும் வழி வகுக்கும். இன்றைக்கு தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக எண்ணற்ற சாத்தியங்கள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைனில் பங்குப் பரிவர்த்தனை செய்யலாம். நின்ற இடத்திலேயே மொபைலில் செய்யலாம். சட்டையை மடித்து விட்டு ரெடி ஜூட் என்று குதித்து விடுங்கள்.

வாழ்த்துக்கள்!

2 comments:

Thamizh VS said...

All the best Sir, i have started my market journey from this book, of-course previous version. Wish you success.

Jaikumar said...

"ethirveliyedu" online store is not available. It says domain expired, please look into it.