Sunday, August 10, 2014

சயனம்

ஈரோடு புத்தகக் கண்காட்சியும், அதையொட்டி நடுகல் பதிப்பகம் சார்பில் நடந்த ’குருத்தோலை’ வெளியீட்டு நிகழ்வும் அருமையோ அருமை. நாவலைப் பற்றி பெருமாள் முருகன் அருமையாகப் பேசினார். அதைப் பற்றி தனியாக எழுதலாம். நண்பர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள். கிடைத்ததும் யூடியூப்பில்  ஏற்றிட வேண்டியதுதான்.

வியாழக் கிழமை ஒரே கொண்டாட்டம், திண்டாட்டம். அப்படியும் ஒரு சில புத்தகங்களை வாங்க முடிந்தது. அதில் ஒன்றுதான் எதிர் வெளியீட்டு அரங்கில் வாங்கிய சயனம் நாவல்.


வெள்ளிக் கிழமை மதியம் கையில் எடுத்தேன். ஆடி மாதக் காற்று. முகிலோடும் வானம். தென்னை மரத்துக்கடியில் கட்டிலைப் போட்டு வழக்கமாக இடையூறுகள், தொலைபேசி அழைப்புகள், ஃபேஸ்புக் ஏதுமின்றி புத்தகம் படிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பக்கத்தில் தட்டம் நிறைய முறுக்கு மட்டும் இருந்தால் சரி. அப்படித்தான் சயனத்தில் ஆழ்ந்தேன். சனிக்கிழமை மதியத்துக்குள் வீட்டில் சுட்ட முறுக்கில் பாதியும், சயனமும் தீர்ந்தது.

வழக்கமாக முன்னூறு பக்கத்துக்கு மேலுள்ள நாவல்களை வாசித்தால் சலிப்பு உண்டாகி விடும். ஒரு சில படைப்புகளை வாசித்தால் நாலு நாளுக்கு ஆய் வராது. முடிப்பதற்கு அவ்வளவு முக்க வேண்டியிருக்கும். சயனமும் கொஞ்சம் பெரிய புக். முக்கவெல்லாம் வேண்டியிருக்கவில்லை. உள்ளே தானாக இழுத்துக்கொண்டு போனது.

வா.மு.கோமு நல்ல எழுத்தாளர். இடுப்புக்கு மேலே சிறப்பாக எழுதக் கூடியவர். இடுப்புக்குக் கீழே அடடா இன்னுஞ்சிறப்பு! வழக்கமாக அவரது கதைகளில் மேட்டர் இருக்கும். மேட்டர் – ’ஒருமை’ கவனிக்க! ஆனால் இதிலே மேட்டர்ஸ்.. மேட்டரோ மேட்டர்.. எல்லாக் கதாபாத்திரத்துக்கும் சீன் வைத்திருக்கிறார். அதிலும் ஸ்கூலில் சத்துணவு ஆக்கும் அம்மாவும், குமரேசன் வாத்தியாரும் செஸ் விளையாடுவார்கள். (செஸ் தான்.. இடையில் ’க்’ இல்லை.) அடடா அருமை.. மிஸ் பண்ணாதீக. அப்பறம் வருத்தப்படுவீக..

கோமுவின் நாவல்கள் போகிற போக்கில் நிகழ்வுகளை உரையாடலில் சொல்லிச் செல்லும். நல்லது கெட்டதுகளை போதித்துக் கொண்டிருக்காது. தலித்தியம் பேசாது. அநேகமாக அவரது ’கள்ளி’ நாவலுக்குப் பிறகு இதில் தலித்தின் வலிகளைத் தொட்டுச் செல்கிறார். வேலுச்சாமிக் கவுண்டர் கலியனை கரட்டில் தூக்கிக் கட்டிக் கொல்கிறார். உள்ளூர் பள்ளியின் தலைமையாசிரியை இந்திரா மாதாரி வளவுச் சனங்களோடு ஓரமாக நின்று கோவில் விசேசத்தை வேடிக்கை பார்க்கிறார். நாவலில் எல்லாக் கதாபாத்திரத்துக்கும் மேட்டர் மடிந்தாலும் தாழ்த்தப்பட்ட ஜாதி வாத்தியார் மட்டும் ஒரு பெண்ணிடம் நூல் விட்டு கன்னத்தில் அடி வாங்கிக் கொள்கிறார்.

கோமுவில் பிற படைப்புகளைப் போல readability இதன் சிறப்பம்சம். சொல்லாடல் அனாயசமாக அவருக்குக் கைகூடி வருகிறது. அன்றாட வாழ்வில் கிராமங்களில் புழங்கும் மொழிதான். உதாரணத்துக்கு கலியன் பொண்டாட்டி வள்ளி, “சந்தேகப்படறவன் பீயை நாய் கூடத் திங்காது” என்று அவனிடம் சொல்வாள். இந்த மாதிரி உரையாடல்கள் கதை முழுக்க இறைந்து கிடக்கின்றன.


என்ன ஒரே விஷயம். சென்னிமலைப் பக்கத்தில் எப்போதும் மக்கள் காம இச்சையோடே திரிகிறார்கள் என வேறு பிராந்தியத்து ஆட்கள் நினைக்கும் அபாயம் ஒன்றுதான். கோமுவைக் கேட்டால், “இதெல்லாம் நெசமா நடந்துது தானுங்கோ. நடக்காதத நாம எழுதற இல்லீல்லோ!” என்பார்.

(புத்தகத்தை ஆன்லைனின் வாங்க லிங்க்)

No comments: