Thursday, August 14, 2014

குருத்தோலை அறக்கட்டளை உதயம் !

”பர்சனல் லோனுக்காக பர்சனல் லீவை வீணாக்காதீர்கள்” என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு எங்கள் அலுவலக வளாகத்தில் ஸ்டால் போட்டு அமர்ந்திருக்கிறார்கள் பேங்க் ஆட்கள்.

நான் இரண்டு நாட்களாக லீவ் போட்டு அலைந்து திரிந்து இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறேன். அலைந்தது பர்சனல் லோனுக்காக இல்லை. அதை விடப் பெரிய மனதுக்கு நெருக்கமான பர்சனல் விசயம். நாளை ஆக்ஸ்ட் 15 ஆம் தேதியை மகிழ்ச்சியாக எதிர் நோக்குகிறேன்.

இது பற்றி முன்பே ஒரு முறை குறிப்பிட்டிருந்ததாக நினைவு.

// எதோ நம்மாலானது. முடிந்த அளவு அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களை வழங்குதல், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை உண்டாக்குதல். அவ்வளவே. இதற்காக பெரிய அளவில் தொகை செலவிடும் அளவுக்கு நானொன்றும் அம்பானியல்ல. அதே நேரம் வருடத்தில் நாலு நாள் குடும்பத்தோடு ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டால் ஆகும் செலவுக்கு நிகரான பணத்தை ஒதுக்கினால் கூடப் போதும். இரண்டு தடவை ஊருக்கு காரில் போவதைத் தவிர்த்தால் போதும். அப்படித்தான் நினைத்திருக்கிறேன்.

எங்கள் ஊரில் எல்லாக் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்தோம். இப்போது பார்த்தால் காடு தோட்டம் வைத்திருக்கும் ஆட்களின் குழந்தைகள் இங்கிலீஷ் மீடிய தனியார் பள்ளிக்கு வேனில் போகிறார்கள். கூலிக்குப் போகும், தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளே பெரும்பாலும் அரசுப் பள்ளியை நாடுகிறார்கள். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பின் மீது பிடிப்பை உருவாக்க ஏதேனும் ஒரு துரும்பை அசைப்பதாக இந்த முயற்சி அமைந்தால் போதும்.

இப்போதைக்கு பத்தாயிரம் ரூபாய் இதற்காக ஒதுக்குவதெனத் தீர்மானித்திருக்கிறேன். இதை இணையத்தில் போட்டு விளம்பரம் தேடுமளவுக்கு பெரிய அமவுண்ட் இல்லைதான். ஆனால் அளவை விட நோக்கம் முக்கியம். இதை வாசிக்க நேரும் நீங்களும் கூட நீங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திலோ, அல்லது உங்கள் அருகாமையில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள அரசுப் பள்ளியிலோ உங்களால் ஆன சிறிய பங்களிப்பைச் செய்ய இது தூண்டுமல்லவா? அதுதான் நோக்கம். உதவ வேண்டுமென்ற எண்ணம் நம் எல்லோருக்குமே உண்டு. அதற்காக வழிவகையோ, நேரமோ இல்லாமல் தான் அதைச் செய்யாதிருக்கிறோம்.

ஆயினும் கூட அது மட்டுமே காரணமல்ல. இயலாதவர்களுக்கு உதவுவது நமக்கு அதீத முக்கியமில்லாத ஒரு விஷயமாக இருப்பதால் அதற்குரிய முன்னுரிமை அளிப்பதில்லை. பதினைந்து வருடமாக நானும் இதை நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். செயல்படுத்துவதற்கான நேரம் இப்போதுதான் வாய்த்திருக்கிறது. வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு செய்ய வேண்டும் என என்னையே சமாதானம் செய்து வந்திருக்கிறேன். செட்டில் ஆவதென்று உண்மையில் ஏதுமில்லை என்பது தெரிந்தும் கூட அப்படியே வருடங்களை ஓட்டி விட்டிருக்கிறேன். இப்போது என்னவோ ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. //

வாழ்க்கையில் செட்டில் ஆனதும் சமூகத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டும் என்று யோசித்து யோசித்தே முப்பத்தைந்து வருடம் ஓடி விட்டது. கடந்த நாலைந்து மாதங்களாக இது மனதைப் போட்டு அரித்துக்கொண்டே கிடந்தது. கடந்த வாரம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடந்த நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற போது தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டேன்.

அறக்கட்டளை அமைப்பதென்று – ’குருத்தோலை அறக்கட்டளை’.

இதற்காகத்தான் இரண்டு நாள் விடுப்பு. ஒரு வழியாக அறக்கட்டளையை பதிவு செய்தாயிற்று. அதனாலேயே இந்த வருட சுதந்திர தினம் ஸ்பெஷல். 

No comments: