Friday, August 15, 2014

குருத்தோலைக்கான முதல் விமர்சனம்


ஃபேஸ்புக்கில் மகி வனி வெளியிட்டிருக்கும் விமர்சனம்

நடுகல் பதிப்பக வெளியீடான, திரு. செல்லமுத்து குப்புசாமி அவர்களின் "குருத்தோலை" படித்து முடித்து இரண்டு நாட்களாயின.அதைப்பற்றி ஒரு பதிவு போட இன்றுதான் எனக்கு நேரம் கிடைத்தது.

புத்தக வெளியீட்டு விழாவில் இந்தப் புத்தகத்தை அறிமுகம்செய்து பேசியவர் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் அய்யா அவர்கள். அழைப்பிதழில் அய்யா அவர்களின் பெயரைக் கண்டதும் இந்தப் புத்தகத்தின் மீதான எதிர்பார்ப்பு எனக்கு அதிகமானது.திரு செல்லமுத்து குப்புசாமி அவர்களை இதற்குமுன் நான் அறிந்தது இல்லை.

எழுத்தாளரின் முதல் நாவல் 'இரவல் காதலி' என்றும், இரண்டாவது 'ஆத்துக்கால் பண்ணையம்' என்றும்,இது அவரின் மூன்றாவது நாவல் என்றும் அறிமுக உரையில் படிக்கக் கண்டேன்.அவரின் மற்ற நாவல்களையும் விரைவில் படித்துவிட வேண்டும்.

'குருத்தோலை' நாவல், நாயகன் முத்துசாமியின் இளம் வயது தொட்டு,மத்திம வயது வரை பயணிக்கிறது என்பதால்,மற்ற பாத்திரங்களை விட முத்துசாமியின் செயல்பாட்டையே நம்மை உற்றுநோக்க வைத்திருப்பது அருமை.கொங்குவட்டாரப் பேச்சுமொழிகளை அழகாகக் கையாண்டுள்ளார்.அதிலும் எகத்தாளத் தொனி மிக்க உரையாடல்கள் நம்மைச் சோர்வடையாமல் நாவலுக்குள் நகர்த்திச் செல்கின்றன.

கிராமத்து வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவது என்பது இயல்பான ஒன்று என்றாலும், நாவலின் ஓட்டத்தைத் தடுப்பதுபோல நாவலில் வரும் சமூகத்தின் திருமண நிகழ்வுகளையும்,அதன் சடங்குகளையும் விவரித்திருப்பது சோர்வைத்தருகிறது.

எந்தச் சமூகமாக இருப்பினும், அச்சமூகத்தில் நடக்கும் மாமியார்,மருமகள் உறவுமுறை, பங்காளிச்சண்டை. சொத்துக்கள் பகிர்தல்,வீராப்பு காட்டுதல், தியாகங்கள்,காதல் முதலியனவற்றை அழகாகக் கையாண்டுள்ளார்.

அத்தியாயம் பதினொன்றில் திடுமென முத்துச்சாமியை அரைக்கிழடாகக் காட்டி,அதன்பின்னர் அவர் திருமண நிகழ்வுகளை கூறியிருப்பது படிப்பின் ஓட்டத்தில் மிகப்பெரிய தாண்டலாகவே தெரிகிறது என்றாலும்.அவனோடு ஒற்றுமையாய் இருந்த அக்கா பொன்னாத்தாள்,அக்கா மகன் ராசு,மற்றும் மச்சான் செல்லப்பன் ஆகியோர் விலகிச்சென்றதின் காரணத்தைப் பதிய வைத்தலில் மீண்டும் சுதாரித்துவிடுகிறார்.ஆரம்பத்தில் அவன் அத்தைமகள் பாப்பியைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கி, முத்துசாமியின் மனைவியாக வரும் சுமதியின் தன் கணவன் மீதான பிடிப்பின்மையையும் எழுத்தில் பதிகிறார்.

இறுதி அத்தியாயத்தின் முடிவில், முத்துசாமிக்கு பாப்பிமேல் ஆயிரம் கடுப்புகள் இருந்தாலும் இளம்பிராயத்தில் அவள் இவன் மேல் கொண்டிருந்த காதல், அவளைப் பார்க்கச் செல்ல தள்ளுகிறது. இந்த முடிவின் மூலம் வாசிப்பவர்களின் மனதில் இருக்கும் பழைய காதலைப் பற்றிய நினைவுகளைத் தட்டி எழுப்பி மனதைப் பிசையவைத்துவிடுகிறார்.

No comments: