Monday, September 29, 2014

குறுக்கு வழிகள்

உறக்கம் வராமல் அதிகாலை இரண்டு மணிக்கு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். சொல்லப் போனால் என்னை யாரும் இதை எழுதுமாறு பணிக்கவில்லை. ஆனாலும் எழுதுகிறேன். எழுதியாக வேண்டிய கட்டாயம் ஏதோ ஒன்று என்னை உந்தித் தள்ளுகிறது, அதுவும் இன்றைக்கே! இல்லாவிட்டால் நாளை ஒரு வேளை மனது மாறி விடக் கூடும்.

சில வருடத்திற்கு முன் என்னை நீங்கள் சந்தித்திருந்தாலோ, அப்போதைய என்னை நீங்கள் அறிந்திருந்தாலோ இன்றிரவு இப்படி தூக்கமில்லாமல் தவிக்கும் இவனா அவன் என ஆச்சரியமடைவீர்கள். அப்படியாகப்பட்டவனாக இருந்தவன் நான். வலியது வாழும் என வலுவாக நம்பியவன். வாழ்க்கையில் வெற்றி பெறுவது முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் மட்டுமே என்ற ஆழ்ந்த நம்பிக்கையை என் தொடக்க காலம் கொண்டிருந்தது. அதெல்லாம் ரஞ்சித்தை சந்திக்கும் வரைக்கும் தான். ரஞ்சித் எனது முதல் மேனேஜர்.

கார்ப்பரேட் வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும். அதற்கு எப்படி உழைக்க வேண்டும். Hard work என்றால் என்ன, smart work என்றால் என்ன? அதில் எதைச் செய்ய வேண்டும்? இரண்டையும் செய்தால் எதை எப்போது செய்ய வேண்டும்? என்ன விகிதத்தில் செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார் ரஞ்சித். வாழ்க்கையில் குறுக்கு வழிகள் என்று ஏதுமில்லை. விரைவு வழிகள் உண்டு. அதைக் கண்டுபிடித்து பயணிக்க வேண்டியது நம் பொறுப்பு என்பார்.

நான் ரஞ்சித்தோடு பழகிய பிறகுதான் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டேன். டிராஃபிக்கில் போனால் ஆம்புலன்ஸ் பின்னால் போக வேண்டும் என்று ஒரு நாள் கன்னியப்பனிடம் டீ குடிக்கும் போது சொன்னார். எங்கள் அலுவலகத்தின் முன்னர் சைக்கிளில் டிரம் வைத்து டீ விற்கும் கன்னியப்பன் கூடுதலாக இஞ்சி போடுவார். கன்னியப்பனுக்கு ஊர் பனையூர். கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு கிராமம். அங்கிருந்து சைக்கிளை அழுத்திக் கொண்டு ராஜீவ் காந்தி சாலைக்கு வருவார். முதல் டிரிப் மாலை 4 மணிக்கு. அது காலியானதும் சுமார் 6 மணிக்கு இன்னொரு டிரம் கொண்டு வருவார். மூன்றாவதாக எட்டு மணியளவில் மறுபடி ஒரு நடை. மொத்தம் மூன்று டிரம் இஞ்சி டீ சுறுசுறுப்பாக விற்கும்.

ஒரு தடவை கன்னியப்பனிடம் டீ குடித்தால் மறுபடி வேறு யாரிடமும் போக மாட்டார்கள். அவர் போடும் டீ அப்படியிருக்கும். எப்போதும் அவரைச் சுற்றி பத்துப் பேர் நிற்பார்கள். அதனால் அந்த வீதியில் உள்ள டீக்கடைகளுக்கு வியாபாரத்தில் அடி. இந்த ஆள் இஞ்சி டீயோடு மட்டும் ஊற்றிக் கொடுத்து அனுப்பி விடுவார். கடைக்குப் போனால் போண்டா, பஜ்ஜி, வடை இப்படி எதையாவது தின்று விட்டு டீ குடிப்பார்கள். அதையெல்லாம் இவர் சைக்கிளை நிறுத்தி தடுத்துக்கொண்டிருந்தார்.

மொத்தம் மூன்று டீக்கடைகள் அந்த வீதியில் உள்ளன. அதில் ஒரு கடையில் டிவி வைத்து ஐபிஎல் மேட்ச் போடுவார்கள். இன்னொன்றில் ஃபாரின் சிகரெட்டுகள் கிடைக்கும். மூன்றாவதில் பஜ்ஜி வைத்துக் கொடுக்க அழகான ஆண்டி ஒன்று சிரித்துக்கொண்டே நிற்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவம். அவர்கள் மூன்று பேருக்கும் கன்னியப்பனை விரட்ட வேண்டும் என்பதில் ஒற்றுமை. அதனால் அவர்களும் சைக்கிளைப் பிடித்து அதில் டிரம் கட்டி, அதற்கு ஒரு ஆளும் பிடித்து கன்னியப்பன் நிற்கும் இடத்துக்குப் பக்கத்தில் நிறுத்தினார்கள். இந்த மூன்று கடைக்கும் கன்னியப்பன் நிற்கும் இடத்துக்கும் ஒரு நாற்பதடி தூரம் இருக்கும். அங்கே கன்னியப்பன் நாலு மணிக்கு வருவதற்கு முன்பாக மூனேமுக்காலுக்கே ஆளை நிறுத்தினார்கள்.

கன்னியப்பனுக்காகவே வரும் கூட்டம் விசுவாசமானது. வழக்கமாக ஒரே வியாபாரியிடம் வாடிக்கையாக இருப்பதை ஆங்கிலத்தில் விசுவாசம் என்றுதானே சொல்வார்கள்! கன்னியப்பனிடம் பல மொழி பேசும் வாடிக்கையாளர்கள் வருவார்கள். சாஃப்ர்வேர், கால்சென்டர் என நான்கைந்து கம்பெனிகளில் வேலை செய்யும் ஆட்கள் அங்கே சுடச் சுட டீயை உறிஞ்சிக் கொண்டு உலக அரசியலையும், தத்தமது அலுவலக அரசியலையும் பேசுவார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என சகல பாஷைகளிலும் சம்பாசணைகள் அரங்கேறும். இரவு எட்டு மணிக்கு மேல் கால்சென்டர் பெண்கள் கூட கன்னியப்பனிடம் வருவார்களாம். சமரசம் நிலவுமிடம் சாராயக் கடை என்பார்கள். அது நிஜமோ பொய்யோ தெரியாது. ஆனால் தேநீர்க் கடைகள் அப்படித்தான்.

இந்த மூன்று டீக்கடை முதலாளிகளும் கூலிக்குப் பிடித்து சைக்கிளோடு கன்னியப்பனுக்குப் பக்கத்திலேயே நிறுத்தியவனைப் பார்க்க நேபாளி போலிருந்தான். அவனை யாரும் சீந்தவேயில்லை. கன்னியப்பனிடம் டீ வாங்கிக் கொண்டு இந்த நேபாளி பக்கத்தில் நின்று குடிக்க ஆரம்பித்தார்கள். இப்படி இரண்டு வாரம் ஓடியது. ஒரு பையன் அவசரமாக இந்த நேபாளியிடம் போய் ”ஒரு டீ” என்று சொல்லி விட்டு சுதாரித்துக்கொண்டு ஸாரி கேட்டு மறுபடியும் கன்னியப்பனிடம் வந்தான். கன்னியப்பன் மூன்று டிரம் விற்ற பிறகும் கூட கால்வாசி டிரம் கூட தீராமல் அந்த நேபாளி இரவு பத்து மணிக்கு வண்டியைத் தள்ளிக்கொண்டு போவானாம். “நம்ம கூட ஏவாரத்தில போட்டி போட்டு தாக்குப் பிடிக்க முடியல” என்றார் லுங்கி கட்டியிருக்கும் கன்னியப்பன்.

பிறகு ஒரு மாதம் டீக்கடைக்கார ஆட்கள் கன்னியப்பனைத் தொந்தரவு செய்யவில்லை. அதன் பிறகு வேறு ரூபத்தில் தாக்கினார்கள். சைக்கிளுக்கு அடுத்த கட்டமாக ஒரு தள்ளுவண்டியைக் கொண்டு வந்து கன்னியப்பன் வழக்கமாக நிற்கும் இடத்தில் நிறுத்தினார்கள். அதில் டீம், காஃபி, போண்டா, பஜ்ஜி என சகலமும் இருந்தது. பசங்க அந்த தள்ளு வண்டியைக் கண்டுகொள்ளவேயில்லை.

டீ கடைக்கார முதலாளிகள் இவன் அப்படியென்ன சொக்குப்பொடி போடுகிறான் என குழம்பியிருப்பார்கள். ”நம்ம கை வசம் தொழில் இருக்கு. ஆண்டவன் புண்ணியத்துல நீங்க எல்லாம் இருக்கீங்க” என்று கன்னியப்பன் சொன்ன தினத்தில் ரஞ்சித் என்னிடம் ஆம்புலன்ஸ் பின்னால் செல்வதைப் பற்றி விளக்கினார்.

டிராஃபிக்கில் ஆம்புலன்ஸ் பின்னால் செல்வதும், டோல் கேட்டில் அரசுப் பேருந்து பின்னால் செல்வதும் எத்தனை பெரிய மேனேஜ்மெண்ட் கான்செஃப்ட் என அன்றைக்கு நான் வியந்து போனேன். அது வரைக்கும் நமது வெற்றிக்கு நமது திறமை மட்டுமே காரணம் என கருங்கல்லைப் போல உறுதியாக நினைத்தவன் அந்த நினைப்பை மாற்றிக் கொண்டேன். நமது வெற்றிக்குக் காரணம் நமக்கு முன்னுள்ள வெற்றிடமே என உணர்ந்தேன். சுங்கச் சாவடியில் சீக்கிரமாகச் செல்ல நமக்கு முன்னுள்ள அரசுப் பேருந்து துரிதமாகப் போவது முக்கியம் எனப் புரிந்தது. சில்லரையே கொடுக்காத தண்ணீர் லாரியோ, பணமே கொடுக்க மாட்டேன் என முரண்டு பிடிக்கும் லோக்கல் அரசியல்வாதியின் காரோ நமக்கு முன்னால் மாட்டினால் அவ்வளவு தான்.

கார்ப்பரேட் வாழ்க்கை கூட அப்படித்தான் என்பதை ரஞ்சித் சொல்லிக் கொடுத்தார். எனக்கு அரசியலே பிடிக்காது என்று சொல்லி விட்டு, தான் என்ன தொகுதி தனக்கு யார் எம்,எல்.ஏ என்றெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பாத ஒருத்தன் சாஃப்ட்வேர் வேலைக்கு வந்தால் அங்கிருக்கும் அலுவலக அரசியலைச் சமாளித்தாக வேண்டும் என்பதையே ரஞ்சித் மூலமாகத்தான் கற்றேன். பொலிட்டிகல் சயின்ஸ் எஞ்சினியரிங் சிலபஸில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூடக் கருதினேன்.

இதில் பரிதாபத்துக்குரிய விஷயம் ஆபீஸ் பாலிட்டிக்ஸ் என்ற விஷயம் இருப்பதே பல பேருக்குத் தெரியாமல் இருப்பதுதான். நன்றாக வேலை செய்தால் புரமோஷன் கிடைக்கும், சம்பள உயர்வு கிடைக்கும் என முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டு மாடு மாதிரி உழைப்பதில் பயனில்லை. வேலை செய்வதை விட வேலை செய்கிறோம் என் மற்றவர்களுக்கு நீரூபிப்பதில் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. “டேய்.. வேலை செய்யறவனுக்கு வேலை குடுப்பாங்க. வேலை செய்யாதவனுக்கு புரமோஷன் குடுப்பாங்க” என வேடிக்கையாகக் கூட ரஞ்சித் சொல்வதுண்டு. அது வெறும் வேடிக்கைக்காக மட்டும் சொன்னதாக நான் நினைக்கவில்லை.

நமக்கு மேலே இருக்கிறவன் மேலே போக வேண்டும். அப்போதுதான் நாம் அவனுடைய இடத்திற்குப் போக முடியும். டிராஃபிக்கில் ஆம்புலன்ஸ், டோல் கேட்டில் அரசு பஸ் விவரம் சரியாகப் பொருந்தியது. சரியான மேனேஜர் பின்னால் போக வேண்டும். நல்ல டீம் அமைவது மேனேஜரின் வெற்றிக்கு எந்த அளவு முக்கியமோ, அதை விட முக்கியம் தன்னைத் தானே முன்னேற்றிக்கொள்ளும் மேனேஜர் கிடைப்பது. அடுத்த லெவலுக்கு மேலே போகாத மேனேஜர் தனக்குக் கீழே இருப்பவனைக் கண்டு பயப்படுவான். பொறமையோடு பார்ப்பான். எப்படா போட்டுத் தள்ளலாம் என்று நேரம் பார்த்திருப்பான். மென்மேலே ஏறிச் செல்லும் மேனேஜர் அப்படியல்ல. தன்னோடு சேர்த்து நம்மையும் மேலே இழுத்துச் சென்று விடுவார். ரஞ்சித் அவ்வாறான ஒரு மேனேஜர்.

இந்த கார்ப்பரேட் டிராஃபிக்கில் எனக்கு முன்னால் வேகமாக ஓடும் ஆம்புலன்ஸ் ரஞ்சித். நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ரஞ்சித் வெறும் டீம் லீடர். இன்று பேங்கிங் டிவிஷனின் இன்சார்ஜ். வருடம் 200 மில்லியன் டாலர் பிசினஸ் நடக்கும் டிவிஷன். அவருடைய வாலைப் பிடித்துக்கொண்டு நானும் அவர் பின்னாலேயே முடிந்த வரைக்கும் தொத்திக்கொண்டு வந்து விட்டேன்.

மேலே வர வர பல விஷயங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு வகையான திறமை தேவைப்படுகிறது. திறமை என்பதை புத்திசாலித்தனமாக மட்டுமின்றி தேவைக்கு ஏற்ப செய்யும் செயல்பாடாகவும் கொள்ளலாம். நம்மை விடப் பெரிய காஜேஜில் படித்தவன் நமக்குக் கீழே வேலை செய்வதையும், நம்மை விடச் சின்னப் பையன் நமக்கு மேலே போய் அமர்ந்து கொண்டு கேள்வி கேட்பதும் இயல்பாக நடக்கிறது.

”ஏன் டார்கெட் மிஸ் ஆச்சு?” என்ற கேள்விக்கு கீழே இருக்கிற டீம் நிறையத் தவறு செய்து விட்டதாகச் சொன்னால், “எல்லோருமே அவனவன் வேலையைத் தப்பில்லாமப் பண்ணிட்டுப் போயிட்டா மேனேஜர்னு நீ எதுக்கு இருக்கே?” என்கிறார்கள்.

போன வருசம் 10 பேரைக் கொண்டு 100 வேலை செய்தால் இந்த வருடம் 8 பேரை வைத்து 120 வேலையை எதிர்பாக்கிறது நிறுவனம். மேனேஜர்கள் என்ன சூப்பர்மேனா? வருகிறவன் போகிறவன் எல்லாம் கேள்வி கேட்கிறான். குவாலிட்டி டீமில், ஃபைனான்ஸ் டீமில், ஆடிட்டிங் டீமில், HR டீமில் என எல்லாப் பயலும் கேள்வி கேட்கிறான்.

இதெல்லாம் கூடப் பரவாயில்லை. முப்பது ஆண்டுகளாக சந்தையில் இருக்கும் கம்பெனி எங்களுடையது. நிறையப் பேர் பத்து வருடம், பதினைந்து வருடம் வேலை செய்கிறார்கள். நன்மதிப்பும், நற்பெயரும் பெற்ற நிறுவனம். இங்கே வேலை செய்யும் ஊழியர்களின் சராசரி அனுபவம் ஆறாண்டுகள்.

ஆனால் எனக்கு நான்கரை ஆண்டுகள் சராசரி அனுபவம் என இலக்கு வைத்திருப்பதாக ரஞ்சித் கான்ஃபரன்ஸ் காலில் சொன்னார். மனிதர் டிவிஷன் ஹெட் ஆன பிறகு கன்னியப்பனிடம் டீ குடிக்கவெல்லாம் வருவதில்லை. ஒரு ஊரில் நிலையாக இருந்தால் தானே? ஊர் ஊராகப் பறந்து கொண்டேயிருப்பார். அதனால் எங்கள் ஃபார்மல், இன்ஃபார்மல் உரையாடல்கள் அனைத்துமே தொலைபேசி மூலமாகத்தான். கன்னியப்பன் சைக்கிள் பக்கத்தில் நின்று பேசிய காலங்கள் கடந்து விட்டன. நேற்று கம்பெனியில் சேர்ந்த பொடியன்கள் எல்லாம் ஃபிகரோடு ஆஃபீஸ் கேண்டீனில் ஜூஸ் குடித்துக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் கன்னியப்பனிடம் தனியே வரக் கற்றிருக்கிறேன்.

”டேட்டா எடுத்துட்டு வா. பேசலாம். எல்லா 15 வருச ஆட்களையும் வெளியே அனுப்பனும்” என்றிருக்கிறார்.

இப்போது எனது டீமின் சராசரி அனுபவம் ஆறைரை ஆண்டுகள். அவர் கொடுத்த இலக்கு கடியது. பதினைந்து ஆண்டுக்கு மேலே அனுபவம் உள்ள ஆட்களின் பட்டியல், அவர்கள் வாங்கும் சம்பளம் எல்லாவற்றையும் கேட்டிருக்கிறார். அவர்கள் வேலையை அவர்களை விட இளையவர்களை வைத்து செய்ய முடியாதா? இந்தக் குழடுகளை ரிலீஸ் செய்தால் ஏதாவது பாதிப்பு இருக்குமாவென்றும் கேட்டிருக்கிறார்.

அவர்களை புராஜெக்டை விட்டு வெளியேற்ற வேண்டும். வேறு யாரும் புராஜெக்டில் எடுக்க மாட்டார்கள். என்னைப் போலத்தானே மற்றவர்களும் இருப்பார்கள்? ரிலீஸ் ஆனவர்களை கம்பெனியில் அதிகபட்சம் மூன்று மாதம் சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள். அதன் பின்னர்,, ”நீயே ராஜினாமா பண்ணிட்டுப் போய்ட்டா நல்லது” என HR பஞ்சாயத்து வைப்பார்கள்.

அப்படி ரிலீஸ் செய்ய வேண்டிய நாலு பேரையும் நினைத்துக்கொண்டே, “என்ன ஒரு வாரமா ஆளையே காணோம்?” என கன்னியப்பனிடம் கேட்டேன். ஆள் வழக்கமாக நிற்கும் இடத்தில் இல்லை. வீதி துவங்கும் இடத்தில் நின்றார்.

“இந்த கடைக்காரங்க போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வெச்சுட்டாங்க. வீதி மொனையோட நின்னுக்கிடனுமாம். உள்ளே வரக்கூடாதாம்” என்றார் விரக்தியாக. கூட்டமே இல்லை. நிச்சயமாக அத்தனை தூரம் தேடிப் பிடித்து நடந்து வருமளவுக்கு விசுவாசமான வாடிக்கையாளர்கள் குறைவு.

நான் ரிலீஸ் செய்ய வேண்டிய நாலு பேரும் நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள். உடனே வெளியே வேலை கிடைக்காது. குழந்தைகள், வீட்டுக் கடன் இத்தியாதிகள். அவர்கள் செய்யும் வேலையை அதில் கால் பங்கு ஊதியத்தில் செய்து முடிக்க இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். கன்னியப்பன் கூட இன்னொரு சாஃப்ட்வேர் கம்பெனி வாசலைப் பிடித்து விடுவார். இந்த நால்வர் வெளியே போனால் என்ன செய்வார்களோ தெரியவில்லை.

ஆகவே உறக்கம் வராமல் அதிகாலை இரண்டு மணிக்கு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆம், இந்த ராஜினாமாவை எழுதுமாறு என்னை யாரும் பணிக்கவில்லை. ஆனாலும் எழுதுகிறேன். அதுவும் இன்றைக்கே! நாளை ஒரு வேளை மனது மாறி விடக் கூடும். 
(நன்றி: ஃபெமீனா தமிழ் இதழ்)

Sunday, September 07, 2014

சாகித்ய அகாடமி அபிலாஷ்

சாகித்ய அகாடமி யுவ புரஷ்கார் விருது பெற்ற அபிலாஷுக்கு நேற்று பாராட்டுக் கூட்டம் ஒன்று நடந்தது.

மலைச்சொல் கலை இலக்கிய சமூக மையம் சார்பாக பால நந்தகுமார் இந்த நிகழ்ச்சியை சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் ஐந்தரைக்கு என்று அழைப்பு விடுத்திருந்தார்கள். நான் போகும் போதே பாலா பேச ஆரம்பித்திருந்தார். பிறகு இலக்கிய விமர்சகர் வெளி ரங்கராஜன் அவர்கள், தமிழ்மகன், விநாயக முருகன், லஷ்மி சரவணகுமார் ஆகியோர் பேசினார்கள்.

மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஏற்பாடாகியிருந்தது. அவரது மகனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்றார்கள். மனிதர் 53 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் கலந்து கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்தக் கூட்டத்தில் தமிழ் மகன், பாதரசம் பதிப்பகம் சரவணன் உள்ளிட்டோரை முதன் முறையாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சரவணனைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில பேர் இலக்கியத்தைத் தூக்கிச் சுமப்பதாக பில்டப் செய்து திரியும் போது சரவணனைப் போன்ற சில சத்தமில்லாமல் புத்தகம் பதிப்பிப்பதோடு, அவற்றுக்கான ராயல்டியை சரியாகச் செலுத்து விடுகிறார்கள்.

பால நந்தகுமார் கூட புத்தகங்களைப் பதிப்பிக்கிறார். அவர் பேசும் போது பதிப்புத் தொழில் லாபகரமான தொழில் என்பது இறங்கிப் பார்த்த பிறகே தெரிவதாகச் சொன்னார். 200 ரூபாய் புத்தகத்திற்கு உற்பத்தி & விநியோகச் செலவு எல்லாமே சேர்த்து 100 ரூபாய் மட்டுமே ஆவதாகக் குறிப்பிட்டார். மிச்சமிருக்கும் 100 ரூபாயில் பதிப்பாளர்கள் எழுத்தாளனுக்கு என்ன தருகிறார்கள் என்பது கேள்விக் குறி. 

கால்கள் – விருது பெற்ற அபிலாஷின் நாவல். பேசிய நண்பர்கள் சிலர் நாவலைச் சிலாகித்துப் பேசினார்கள். நல்ல நாவல். உடல் ஊனம் தொடர்பாக அந்த வலியை அனுபவித்தவன் அதை வார்த்தையில் வடித்த படைப்பு ‘கால்கள்’. உயிர்மை பதிப்பக்கத்தில் வெளியான நூல். ஐநூறு பக்கத்துக்கும் மேல். கனமான ஒன்று.

இது போன்ற விருதுகள் ஒரு படைப்பாளிக்கு முக்கியமானவை. நாம் படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்தில் கொண்டாடுவதேயில்லை. புதுமைப் பித்தனையெல்லாம் இந்தச் சமுதாயம் நன்றாக வைத்திருந்தால் அவர் இன்னும் பத்து ஆண்டுகளாவது கூடுதலாக உயிரோடு இருந்திருப்பார் என்று வெளி ரங்கராஜன் குறிப்பிட்டார். எல்லாக் காலத்திலும் இது நடந்தேயிருக்கிறது. பாரதி கூட அநாதையாகத்தான் செத்துப் போனான்.

ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் முக்கியமானது. தான் இது வரைக்கும் எழுத்தின் மூலம் நூறு ரூபாய் கூடச் சம்பாதித்ததில்லை என்று அபிலாஷ் சொன்னார். ஆனால் அதற்காக பெரிதாக வருத்தமோ, கோபமோ இல்லை. மரணத்தின் விளிம்பைத் தொட்டு விட்டு வந்தவன், அதனால் தான் இப்போது வாழும் ஒவ்வொரு நாளும் போனஸ் என்ற மனோநிலையில் சஞ்சரிக்கும் ஒருவன் வாழ்க்கையை அப்படித்தான் கொண்டாடுவான். இது ஒரு மனநிலை. வினோதமான மனநிலை. வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும்.

சமூக வெளியின் எழுத்தாளனாக, படைப்பாளியாக தன்னை முன்னிறுத்தும் ஒவ்வொருவனும் தனது ஜீவனையும், ஜீனவத்தையும் கவனித்தாக வேண்டும். பிள்ளை குட்டியின் வயிற்றை நிரப்ப வேண்டும். குடும்பத்தின் பொருளாதாரப் பளுவைத் தோளில் தூக்கிச் சுமக்க வேண்டும். இதைத் தாண்டித் தான் எழுதுவது, எழுதிக் கிழிப்பது, புரட்சி செய்வது எல்லாமே. இந்த இடத்தின் தான் அபிலாஷ் மாதிரியான மனநிலையைக் கொண்டாட வேண்டியிருக்கிறது. மரணத்தைத் தொட்டு மீண்டு வந்த இன்னொருவர் வாய்ப்பாடியில் அமர்ந்து கொண்டு காதலையும், காமத்தையும் கலந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கூட்டத்தில் பால நந்தகுமார் என்னையும் ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார். நான் முன்னேறுபாடுகள் செய்து போயிருக்கவில்லை. வாசிப்பது என்பது தொலைக்காட்சி பார்ப்ப்பது போலன்று. அதற்கு effort செலவிட வேண்டியிருக்கிறது. டிவி பார்ப்பது passive டைம்பாஸ். புத்தகம் வாசிப்பது active டைம்பாஸ். வாசிப்பதற்கே இவ்வளவு உழைப்பு தேவைப்படும் போதில், அதை எழுதுவதற்கு எத்தனை உழைப்பும், மெனக்கெடலும் செலவிட வேண்டும்? அதற்கான அங்கீகாரம் ஒரு படைப்பாளியை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. கால்கள் நாவலுக்கான விருது என்பதை விட, அபிலாஷ் என்கிற தனி மனிதனின் உழைப்பிற்கும், அவனது clean boy பிம்பத்திற்குமான அங்கீகாரம் இது. இது வரைக்கும் எழுத்தின் மூலம் நூறு ரூபாய் கூட ஈட்டாத ஒருவன், யாதொரு பிரதிபலனும் எதிர்பாராது செயல்படுவதற்குக் கிடைத்த அங்கீகாரம். இத்தகைய அங்கீகாரங்கள் முக்கியமானவை என்ற வகையிலே சாகித்ய அகாடமிக்கு நன்றிகள். அதை விட முக்கியமாக பாராட்டுக் கூட்டம். அதற்காக பால நந்தகுமாருக்கு சுருக்கமாக நன்றி சொல்லி அமர்ந்தேன்.

பேப்பர் ரோஸ்ட் லிவருக்கு நல்லது. பாராட்டு படைப்பாளிக்கு நல்லது.

Monday, September 01, 2014

நீயா நானா டீமுக்கு நன்றி..

இளம்பிள்ளை வாதம் தாக்கிய நபர்களை நான் பிளஸ்-2 முடியும் வரையிலும் சந்தித்ததில்லை. சூம்பிய காலோடு கல்லூரியில் ஒரு பையன் இருந்தான். அவன் கையால் பெடல் செய்யும் சைக்கிளில் எங்கும் பயணிப்பான். பயணம் என்பது பெரிய வார்த்தை. Basic mobility க்கே அவனுக்கு சைக்கிள் அவசியமாகவிருந்தது. பலவீனமான கால்களை உடையவன் அவன். அவனது கைகள் வலுவானவை. ஒரு முறை சக மாணவன் ஒருவனோடு உண்டான வாக்குவாதத்தின் முடிவில் இவன் ஓங்கி அறைய, வம்புக்கு இழுத்து அறை வாங்கியவன் சுருங்கி விழுந்ததாகச் சொன்னார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் மனுஷ்யபுத்திரனோடு ஒரு முறை பேசுகையில் இந்தப் பேச்சு வந்தது. அப்போது நாணயம் விகடனில் தொடர் எழுதினேன். அதை வாசித்துப் பார்த்து விட்டு, ”உங்களை விட நிதி மேலாண்மையில் சிறந்தவர்கள், வல்லுனர்கள் சென்னையில் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் எளிமையாக எடுத்துச் சொல்லும் திறமே உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது” என்றார். கால்கள் பலவீனமானவருக்கு கைகள் பலமாக இருக்கும். அப்படித்தான் பேச்சு சரளமாக வராதவன் எழுத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்றேன் அவரிடம். சிரித்துக்கொண்டார். கால்களின் ஆல்பம் எழுதியவர் அல்லவா!

மேடைப் பேச்சு அல்லது பொது வெளியில் உரை என்பது கூச்சமான பதற்றமான ஒரு விஷயமாகவே இருந்திருக்கிறது. காரணம் திக்குவாய்! பெண்களோடு பேசக் கூச்சம், கூட்டத்தோடு கலந்துகொள்ளக்

கூச்சம், நாலு பேருக்கு மத்தியில் நம் கருத்தைச் சொல்லக் கூச்சம், மாற்றுக் கருத்து இருந்தாலும் அமைதியாகவே இருக்கச் சொல்லும் கூச்சம். இப்படித்தான் இது வரைக்குமான வாழ்வின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது.

இத்தனைக்கும் தெரிந்துதானிருக்கிறது - திக்குவாய் என்பது வியாதியல்ல; அது ஒரு கெட்ட பழக்கம் என்று. ஆம் கெட்ட பழக்கம். மாற்ற முடியாத கெட்ட பழக்கமல்ல. எந்தக் கெட்ட பழக்கமும் கை விட முடியாததல்ல. அதற்கு நிறையப் பயிற்சியும், முயற்சியும், மனோ வலிமையும், இம்ப்ரூவ்மெண்ட் எல்லாம் வேஸ்ட் என நினைத்து மறுபடியும் அதே கெட்ட பழக்கத்தில் விழாதிருக்காத நம்பிக்கையும் வேண்டும். கிரிக்கெட் வீரனின் ஃபார்ம் போல இது அலைபாயும் தன்மை கொண்டது.

மூளை வேகமாகச் செயல்பட்டு, அந்த வேகத்துக்கு பேச்சு உறுப்புகள் ஈடுகொடுக்காமல் போகும் போது திக்கிப் பேசுகிறோமாம். திக்குவாயர்கள் மற்றவர்களை விட வேகமாகச் சிந்திக்க வல்லவர்களாம். இதை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் சொல்லியிருக்கிறார். டென்ஷனைக் குறைத்தாலே போதுமாம். நினைக்கிற கருத்துக்கள் அத்தனையும் ஒரே மூச்சில் கொட்டிவிட வேண்டும் என்ற வேகத்தைக் குறைத்து நிதானமாக, நம் எதிரே இருப்பருக்கு நம் பேச்சைக் கேட்பதைத் தவிர வேறு வேலையில்லை என்ற நினைப்பில் பேசினால் போதுமாம்.

குடியை விடுவதற்கான முதல் படி தனக்கு குடிப்பழக்கம் உள்ளதை ஒப்புக்கொள்வது மட்டுந்தான். திக்குவாய்ப் பழக்கத்தில் இருந்து மீள அப்பழக்கம் இருப்பதை ’ட்ரிக்’ செய்து மறைக்காமல் இருப்பது அவசியம். ”நான் அப்படித்தான். என்னான்றே அதுக்கு?” என்ற மனநிலை வேண்டும். ஒரு சில காலகட்டங்களில் மாதக் கணக்கில் திக்கவே திக்காது. வேறு சில தருணங்களில் வார்த்தைகள் முட்டி நிற்கும். உதவுகள் லாக் ஆகி விடும். தாடை பிடித்துக்கொள்ளும். பதட்டம், பதட்டம், பதட்டம். சற்று ஆசுவாசப்படுத்திய பிறகு பெருமூச்சு ஒன்றில் வாயிலாக டென்ஷனை வெளியேற்றிப் பேசினால் நிதானமாக வார்த்தைகள் வந்து விழும். எல்லாத் திக்குவாயர்களுக்கு ரிலாக்ஸாகப் பாட்டுப் பாடும் போது திக்கவே திக்காது.

சரி.. இதை இங்கே நீட்டி முழக்கக் காரணம் என்ன? இந்தச் சின்னச் சின்ன மாற்றங்களை, முன்னேற்றங்களை உருவாக்க மெனக்கெடும் உழைப்பை யாரோ ஒரு மேனேஜர் அல்லது கஸ்டமர் அல்லது உறவுகள் ஓரிரு சொற்களில் டென்ஷன்படுத்திச் சிதைத்து விடுவார்கள். பரமபத விளையாட்டில் பாம்பு கொத்தி மறுபடியும் முதல் கட்டத்திற்கு வந்து தொலைக்க வேண்டும். இம்ப்ரூவ்மெண்டு என்பது தற்காலிகமானது என்ற மனநிலை ஏற்பட்டு விடும்.  அதற்காக அப்படி அலட்டிக்கொள்ளாவிட்டால் என்ன? பள்ளியில் பேச்சுப் போட்டியைக் கூட ஒரு பொருட்டாகவே நான் கருதியதில்லையே. அந்தப் பழம் புளித்தது!

அதற்குக் காரணமும் இருந்தது. நம் பலவீனத்தைச் சரி செய்யச் செலவிடும் நேரத்தினை நம் பலத்தினைப் பெருக்கச் செலவிட்டால் போதுமென்று நினைத்திருந்தேன். அதனால் பெருமாற்றம் ஏற்படும் என நம்பினேன். கால்கள் சூம்பியவன் கைகளை பலப்படுத்துவது போல. அப்படித்தான் எழுதியது, எழுதிக்கொண்டிருப்பது எல்லாமே. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு தான் நினைக்கும் விஷயத்தினைத் தெளிவாகப் பேச்சிலும் புலப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் இல்லை என்பது புரிகிறது.

பத்து வருடத்திற்கு முன் பெங்களூரில் வசித்த போது அங்கே Stammering Cure Center என்ற மையத்திற்குப் போனேன். அதில் இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்ற சில பயிற்சிகளைக் கற்றுத் தந்தார்கள். கெட்ட பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனால் குடியை மறந்தவன் பழைய நண்பனோடு சேரும் போது ஒரேயொரு நாள் குடித்துப் பார்க்கிற மாதிரி, பழையபடி இந்தக் கெட்ட பழக்கம் அவ்வப்போது தலை தூக்கியது. பயிற்சிகள் கைவிடப்பட்டன. செல்லமுத்து குப்புசாமியை உலகம் திக்குவாயனாகவே ஏற்றுக்கொண்டதாக நினைத்து சமாதானம் செய்துகொண்டேன். பணியிடத்தில், குடும்பத்தில், நண்பர்கள் சுற்றத்தில் அப்படியே ஒப்புக்கொண்டார்கள். என்னை நிராகரிப்பதற்கான காரணமாக இது இருக்கவில்லை.

ஆனால் இந்த status quo போதுனாமதாக இல்லையோ என்னவோ! ஒரு மாதம் முன் ’நீயா நானா’ டீம் பார்வையில் நான் பட்டிருக்கிறேன். ’தமிழர்கள் உணர்ச்சிப் பெருவெள்ளமாக இருக்கிறார்களா?” என்ற ஷோவோடு சேர்த்து கடந்த மாதத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் கூட்டத்தில் உரையாற்றும் வகையில் அமைந்து விட்டது. ஒன்று நீயா நானா, இன்னொன்று மெட்ராஸ் ஸ்டாக் எக்சேஞ்சில் நடந்த Investor Awareness Program, மூன்றாவது நடுகல் பதிப்பகம் நடத்திய குருத்தோலை நாவல் வெளியீட்டு விழாவில் பேசியது.

இதில் நடுகல் நிகழ்வு வேடிக்கையானது.

“ஏற்புரை உங்க பேரைப் போடலாம்ங்களா? எதுக்கும் உங்ககிட்டக் கேட்டுட்டு போடச் சொன்னாரு கோமு” என்றார் பதிப்பக உரிமையாளரான சதுரங்க வேட்டையில் நடித்த நடிகர் ஒருவர்.

“ஏற்புரைதானுங்க.. ஆத்தீட்டாப் போவுது” என்று குருட்டுத் தைரியத்தில் சொல்லி வைத்தேன். சிற்சில தடங்கல்களோடு நல்லபடியே நடந்தது அது.

இப்போது நீயா நானா ஷோ. ஒரு திக்குவாயனுக்கான ஒரு மிகப் பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். இன்னும் கூட நிதானமாகப் பேசியிருக்கலாம். பேசியிருக்க வேண்டும். இயக்குனருக்கு நிறைய எடிட்டிங் வேலையைக் குறைத்திருக்கலாம்.

பெங்களூர் Stammering Cure Center ஆட்கள் கண்ணாடி முன் நின்று பேசிப் பயிற்சி எடுக்கச் சொல்வார்கள். பேசியதை ரெக்கார் செய்து திரும்பப் போட்டுக் கேட்கச் சொல்பார்கள். ஆட்டோ கரெக்‌ஷன் டெக்னிக்குகள். அதை பத்து வருடத்தில் அவ்வப்போது செய்திருக்கிறேன். தொடர்ச்சியாகச் செய்ததில்லை. ஈரோட்டில் நடுகல் பதிப்பகத்தினர் வீடியோ எடுத்தார்கள். அது இன்னும் கைக்கு - அவர்கள் கைக்குத்தான் - வந்து சேரவில்லை. அதனால் பேச்சு எப்படியிருந்தது என்று தெரியாது. பிறகுதானே நாம் பார்ப்பது? சென்னைப் பங்குச் சந்தையில் பேசியதற்கு வீடியோ பதிவு கிடையாது.

நீயா நானா அம்மாதிரிக் கிடையாது. கண்ணாடியைப் போல வீடியோ பொய் சொல்வதில்லை. மூச்சு ’லாக்’ ஆகி, பேச்சு தடைபட்ட இடங்களைக் காண முடிந்தது. பல விஷயங்களை உணர்த்தியது என்றே சொல்ல வேண்டும். மறுபடியும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் புரிந்தது.

அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நேற்றைய நீயா நானா ஷோ தோராயமாக 20 இலட்சம் திக்குவாய்த் தமிழர்களில் ஒரு இருபதாயிரம் பேருக்காவது உற்சாகமும், நம்பிக்கையும் அளிக்கும் என உறுதியாக நம்புகிறேன். மக்கள் தொகையில் 2-3 சதவீதம் பேர் வருமான வரி கட்டுகிறார்கள். அதே விழுக்காட்டினர் திக்குவாயர்களாகவும் இருக்கிறார்கள். வெகு சிலர் மட்டுமே அதிலிருந்து மீண்டு வருகிறார்கள். மற்றவர்கள் செய்யாத தவறுக்காக ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள். சினிமாவில் காமெடிக்கு மட்டுமே பயன்படும் திக்குவாயர்கள் அண்ணன் ஆறுமுகத் தமிழனுக்குக் கொடுத்த அதே பரிசை எனக்கும் கொடுத்த ஆண்டணிக்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும்.