Thursday, October 30, 2014

குருத்தோலைக்கான ஜன்னல் மீடியா விமர்சனம்

அருமையான விமர்சனம் ஒன்று ஜன்னல் மீடியாவில் வந்திருக்கிறது. மனதுக்கும் நிறைவாக, இதமாக இருக்கிறது.

(அச்சு இதழ்களைப் போல பதிப்பகத்தின் அஞ்சல் முகவரியோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆன்லைன் விமர்சனங்களில் புத்தகத்தினை எந்த லிங்க்கில் ஆர்டர் செய்யலாம் என்ற விவரத்தைக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்)

//கோவை மாவட்டக் கிராமங்களில் உயிர்த் துடிப்புடன் இன்னும் வாழும் கொங்குத் தமிழ், ‘குருத்தோலை’ நாவலில் மண் மணத்தோடு முழுமையாக வெளிப்பட்டிருப்பது, தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் இன்னுமொரு மகுடம் என்று சொல்லலாம்... தாராபுரத்தை ஒட்டிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த செல்லமுத்து குப்புசாமி இந்த நாவலை, கொங்கு வழக்கு மொழியில் மிகச் சரளமாக எழுதியிருக்கிறார். கொங்கு மொழி பரிச்சயமில்லாத வாசகர்கள் படிக்கச் சிரமப்படுவார்கள் எனத் தோன்றினாலும் இதுபோன்ற மொழிநடை, இலக்கியத்தில் சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது வரலாற்றின் தேவை.

முத்துச்சாமி என்கிற, பருவம் அரும்பியும் அரும்பாமலும் உள்ள சிறுவன் அவனைவிட ஓரிரு வயது அதிகமுள்ள அத்தை மகள் பாப்பியோடு ஆடு மேய்க்கச் சென்று அவளுடைய காமத்துக்கு ஆட்படுவதில் கதை துவங்குகிறது. கதைக்கு இது தேவையில்லாத ஒன்று என்றாலும் இது மிகவும் இயல்பானது; பருவத்தின் கோளாறு; தனிமையின் தூண்டுதல்; தவிர்க்க முடியாத ஒன்று என்கிற வகையிலும், இருவரின் பாலுணர்ச்சிக் கலப்பு விரசம் இல்லாமல், பாசாங்கு இல்லாமல் வெளிப்பட்டிருக்கிறது.

படிப்பறிவு அதிகமில்லா கிராமத்து மனிதர்களின் அறியாமை, பாசம், கோபம், காமம், சச்சரவு, சொத்துப் பிரிவினை, திருமணச் சடங்கு, பொருளாதாரம், தன்மானம், வீம்பு இப்படிப் பலதரப்பட்ட விஷயங்களைப் பாசாங்கு இல்லாமல் ‘குருத்தோலை’ நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.

‘இது நம்மைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் கதை. சாதியும் சொத்துச் சண்டையும், கெட்ட வார்த்தைகளும், காமமும், மண்ணுக்கும் மனிதனுக்குமான நெருக்கமான உறவும் கலந்த கதை’ என்று படைப்பாளி கட்டியம் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை!

முத்துச்சாமியின் தகப்பன் நாட்ராயன் தன் தங்கை கணவரிடம் மாடு விற்பது குறித்துப் பேச, தங்கை கணவர் சாமியப்பன் தான் ரூ.3800 க்கு விற்றுத் தருவதாக மாட்டை ஓட்டிப் போகிறார். காலம் ஓடுகிறது. பணம் வந்தபாடில்லை. அதைக் கேட்கப் போன இடத்தில் இருவருக்கும் உறவு அடிப்படையிலான உரையாடல் மிக அழகாக வரையப்பட்டிருக்கிறது. கடைசியில் சாமியப்பனின் மோசடி தெரிய வந்து கோபம் ஏற்பட்டுக் கைகலப்பாகிறது. விறகுக் கட்டையால் அடி வாங்குகிறார் நாட்ராயன். அவர் தங்கை மகள் பற்றிக் கேவலமாக உதிர்த்த சொற்கள் தங்கையை ஆக்ரோஷம் கொள்ள வைத்து, ஈர்க்குமாறை எடுத்து வந்து அண்ணன் என்றும் பாராமல் அடிக்கிறாள். காட்சி மிக அற்புதமாக விரிகிறது.

தொடர்ந்து சாமியப்பன் மகள் பாப்பிக்குத் திருமணம் ஆவது, அவளின் கணவர், நாட்ராயன் ஊருக்கு வந்து தன் மனைவி வளர்க்கக் கொடுத்த ஆடுகளைக் கேட்பது, தன் மாடு விற்ற பணத்தை இவர் கேட்பது, பாப்பியின் கணவன் ஆட்களைக் கொண்டு வந்து முத்துசாமியை அடித்துப் போட்டுவிட்டு ஆடுகளைக் கொண்டு போவது என்றெல்லாம் சித்திரிப்புகள் நீள்கின்றன. மிக நெருங்கிய சொந்தம் ஆனாலும் பொருள் என்று இடையில் வந்தால், இரு தரப்பில் ஒரு தரப்பு மோசடிப் பேர்வழியாக இருப்பின் பிரச்சினைதான் என்பதை இந்த விவரிப்பு உணர்த்துகிறது.

அண்ணன் தம்பி பாகப் பிரிவினைக் காட்சிகள், கிராமத்துப் பெரிய மனிதர்கள் முன்னிலையில் விஷுவல்  காட்சியாகவே விரிவது, ஆசிரியர், மனித மனங்களை துல்லியமாக உள்வாங்கியிருப்பதைப் புலப்படுத்துகிறது.

பள்ளிக்கூடத்துக்குப் படிக்க வந்த பிள்ளைகள் விவசாயத்துக்குத் திரும்புகிறபோது அவர்கள் படிக்க வேண்டுமே என்று, பெற்றோர்கள் காலில் விழுந்து அவர்களைப் பள்ளிக்கு அனுப்பக் கோரும் டேவிட் வாத்தியார் இன்னமும் கிராமங்களில் வாழும் அபூர்வ ஆசிரியர்களில் ஓர் உதாரண புருஷர். அவர் மாணவனின் வீட்டுக்கு  கம்பு வாங்க வரும் அனுபவம் மனசைத் தொட்டுத் தாலாட்டும்.

பழனாத்தாள் மஹாபாரதச் சகுனியாக நடந்துகொள்ளும் ஒரு கேரக்டர். பல ஆண்டுகள் விரோதம் காரணமாகத் தன் அத்தையின் பேரன் (தன்னை ஆண்ட பாப்பியின் மகன்) திருமணத்துக்குப் போக முதலில் மறுத்த முத்துச்சாமி பிறகு சம்மதிக்கிற செயல், காலம் பகைமையை அழிக்கும் என்பதைச் சொல்கிறது. அந்த அள்வில் நாவல் நிறைவுறுகிறது.

’ஆமாங்க சார்.. நடக்க நடக்க தடம் மூயமாண்டீங்குது. சொல்ற கதையா.. எங்களுக்கு செய்யச் செய்ய வேலை மூயமாண்டீங்குது. ஒன்னுக்கொன்னு ஒத்தாசையா சேந்து வேலை செஞ்சாத்தானுங்க ஆவும்? ஒரு கை ஓசையுறுமா சொல்லுங்க. சிட்டாளு வேலை எட்டாளுக்குச் சமமுனு செலவாந்தரமே சொல்லுவாங்களே! வளுசப் பையன் வேலைன்னு பூந்துட்டான்னா வெடுக்கு வெடுக்குனு செய்யறானுங்க. எங்களுக்கு கைகால் எல்லாம் ஆந்துக்கிருச்சுனா ஒருநாள் இல்லீன்னாலும் ஒருநாள் அவந்தானுங்க பாக்கோணும்?’’ என்ற செல்லாயி தனது வீடு தேடி வாத்தியார் வந்தது குறித்த மகிழ்ச்சியில் இருந்தாள்.

‘‘காட்டு வேலை எப்ப வேணும்னாலும் செய்யலாமுங்க. படிக்கற வயசுல படிக்காம உட்டுட்டு அப்பறமா படிக்காமப் போச்சேன்னு அவன்தான் வருத்தப்படுவான்’’ என அக்கறையை வெளிப்படுத்தினார் சார்.

‘‘வருத்தப்பட்டாலும் உங்கிட்ட வந்து சோத்துக்கு நிக்க மாட்டான்’’ என பழனாத்தாள் சட்டென்று சொன்னதும் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.  -இது ஒரு சாம்பிள்தான். மனித மனங்களின் அலசல், மண் மணத்தோடு கொங்குத் தமிழ் மொழியில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது இந்த நாவலில்.

பல அத்தியாயங்களில் சொல்லப்பட வேண்டிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை ‘சுபம்’ போட வேண்டிய அவசரத்தில், கடைசி இரண்டு அத்தியாயங்களில் ‘சம்மிங் அப்’ போல சுருக்கி எழுதியிருப்பது, நாவலின் ஆற்றொழுக்குப் போக்குக்கு நெருடல் ஏற்படுத்துகிறது.

இருந்தபோதிலும், தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தை செல்லமுத்து குப்புசாமி எழுதிய ‘குருத்தோலை’ நாவல் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது!//

No comments: