Monday, December 08, 2014

ஆன்லைன் ஷாப்பிங்

எல்லாக் காட்டிலும் சிங்கத்தின் ஆட்சி நடப்பது போல எல்லா வீட்டிலும் மகள்களின் ஆட்சி! எங்கள் வீடும் அப்படித்தான். அவள் கையில் ரிமோட் இருக்கும். சுட்டி டிவியோ, போகோ சேனலோ, கார்ட்டூன் நெட்வொர்க்கோ ஓடும். என்ன சொன்னாலும், கெஞ்சினாலும் வேலைக்கு ஆகாது. சாம தான பேத தண்ட முறைகள் யாவும் தோற்றுப் போகும். ஒரு நாள் வேடிக்கையாக, “நீ ரிமோட்டைக் கொடுக்கலைன்னா OLX ல டிவிய வித்துருவேன்” என்ற போது உடனே தந்து விட்டாள். எனக்கோ ஆச்சரியம்!

ஆன்லைன் விளம்பரங்களின் தாக்கம் அத்தகையதாக உள்ளது. பல வருடமாக நமக்குத் தெரிந்த ஒரே ஆன்லைன் பரிவர்த்தனை ரயில் டிக்கெட் முன்பதிவு. இன்றைக்கு சகலமும் மாறியிருக்கிறது. ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசுகையில் குறிப்பிட்ட கடையில் கிடைக்கும் என்று சொன்னால் சலித்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் லிங்க் இல்லையா என்கிறார்கள். 

ஒரு புள்ளி விபரம் இந்த வருட ஜூன் மாதம் இந்தியாவில் 25 கோடி பேருக்கு இணைய இணைப்பு உள்ளதாகக் கூறுகிறது. 120 கோடி மக்கள் தொகையில் இது 20 விழுக்காட்டிற்கும் மேல். ஐந்தில் ஒருவருக்கு இணையத் தொடர்பு உள்ளது நிச்சயமாக ஆச்சரியமளிக்கும் செய்தி. கவனிக்க வேண்டிய செய்தியும் கூட. இதில் அத்தனை பேரும் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடுவதில்லை. அதிகபட்சமாக ஃபேஸ்புக் அல்லது கில்மா வீடியோ பார்ப்பார்கள். இதில் ஒரு சிறு விழுக்காட்டினர் மட்டுமே இணைய அங்காடிகளில் பொருட்களை வாங்குகிறார்கள் எனலாம்.

உலகலாவிய அளவில் 2014 ஆம் வருடம் ecommerce 1.505 டிரில்லியன் டாலருக்கு நடந்துள்ளதாக அறிகிறோம். அதாவது தோராயமாக ரூ 92 இலட்சம் கோடிகள். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, 2013க்கும் 2014 க்குமான வேறுபாடு. கடந்த ஆண்டு வரைக்கும் வட அமெரிக்கர்கள் அதிக அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இவ்வருடம் ஆசியா-பசிபிக் பிரதேசத்தினர் முன்னிலை பெற்றுள்ளனர். குறிப்பாக சீனா – ஆன்லைன் வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் சீனர்கள் அமெரிக்கர்களை விட அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்து முதலிடத்தைப் பிடிப்பார்கள் என்கின்றன கணிப்புகள். ஆன்லைன் வணிகத்தில் சீனா கடந்த மூன்று ஆண்டுகளாக 93.7% (2012), 78.5%(2013), 63.8%(2014) என வளர்ந்துள்ளது. இதோடு ஒப்பிடுகையில் இந்தியா இதே கால கட்டத்தில் 35.9%, 34.9%, 31.5% என வளர்ந்துள்ளது.

இந்தியாவைப் பொருத்த மட்டில் ஆன்லைன் வணிகத்தின் பெரும்பகுதி பிரயாணம் சார்ந்த விஷயங்களில் முடிகிறது. ரயில், பேருந்து மற்றும் விமான டிக்கெட் பரிவர்த்தனைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுமார் 70% ஆன்லைன் வியாபாரம் இவற்றின் வாயிலாகவே நடந்தேறுகிறது. 2013 கணக்கின் படி 12.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ 77,000 கோடி) ஆன்லைன் வணிகம் நடந்தது. இதில் வெறும் 2.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ 14,000 கோடி) மட்டுமே சில்லரை வணிகமாக நடந்துள்ளது.

செக் குடியரசில் கால்வாசிக்கும் மேலான வர்த்தகம் ஆன்லைனில் நடக்கிறதாம். இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லரை வணிகச் சந்தையில் மதிப்பு 550 பில்லியன் டாலர் (ரூ 33.63 இலட்சம் கோடி) என்று வைத்துக்கொண்டாலும் கூட ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தின் பங்களிப்பு அரை விழுக்காடு கூட இல்லை. எனினும் 2014 ஆம் வருடம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய வருடம். பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வருடமும் ஆகும். இணையத் தொடர்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20% என்ற கணக்கிலும், ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடும் ஆட்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30% என்ற கணக்கிலும் அதிகரிக்கும் தேசத்தில் 2014 முக்கியமான மைல்கல்.

இந்த இடத்தில் Flipkart பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தக் கட்டுரையின் மையப்புள்ளியே அதுதான். நியாயமாகப் பார்த்தால் முதல் பத்தியை Flipkart பற்றிய செய்தியுடன் தொடங்கியிருக்க வேண்டும். தாமதம் தவறில்லை.  

என்னுடை ஜி-டாக்கில் IIT முன்னாள் மாணவர் ஒருவரைச் சேர்த்திருந்தேன். அவர் என்னைச் சேர்த்தாரா அல்லது நான் அவரைச் சேர்த்தேனா என நினைவில்லை. அப்போதுதான் அவர்கள் ஒரு ஆன்லைன் புத்தகக் கடை ஆரம்பித்திருந்தார்கள். அவர்களது இணையதளத்தில் பட்டியலிடப்படாத புத்தகங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் அதை சாட்டில் சொன்னால் உடனே சேர்த்து விடுவார். கடைகளில் தேடினாலும் கிடைக்காத சில நூல்களை இப்படி வாங்கியதுண்டு.

அதற்கு Flipkart என்று பெயரிட்டிருந்தனர். அவர் பெயர் பின்னி பன்சால். அவரது கூட்டாளியின் பெயர் சச்சின் பன்சால். இருவரும் ஒரே குடும்பப் பெயர் கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் ஆரம்பித்த வெப்சைட் வெறும் இணையப் புத்தக அங்காடியாக நின்று விடவில்லை. ஏற்கனவே எனக்குத் தெரிந்த ஒரு முன்னாள் IIT மாணவர் cricinfo.com என்ற கிரிக்கெட் சம்பந்தமான இணையதளம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி அதை பன்னாட்டு நிறுவனம் ஒன்றை விற்ற பிறகு, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத புத்தகத் துறையில் கிழக்குப் பதிப்பகம் என்ற பெயரில் நுழைந்திருந்தார்.

ஆனால் இந்த பன்சால் பாய்ஸ் எங்கோ போய் விட்டார்கள். அவர்கள் இருவருமே அமேசான்.காம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். உலக அரங்கில் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் கொடிகட்டிப் பறக்கிறது. அமேசான் கூட Flipkart போலத்தான் தன் பயணத்தைத் துவக்கியது. 1994 இல் ஆன்லைன் புத்தகக் கடையாக ஆரம்பித்தது. புத்தகங்கள், குறுந்தகடுகள், வீடியோக்கள் என விநியோகம் செய்தது.

இணைய அங்காடிக்கு பளபளப்பான கடை நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் தேவையில்லை. வருகிற வாடிக்கையாளரை வரவேற்று உபசரித்து குளிர்சாதனப் பெட்டியை இயங்கச் செய்து பொருட்களை விற்பனைப் பிரதிநிதி மூலமாக விளக்கி விற்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் ஆர்டர் செய்ததும் அமேசான் உரிமையாளர் தனது கார் பார்க்கிங்கில் இருந்து புத்தகங்களை பேக் செய்து அனுப்பினார். இரண்டே மாதத்தில் வாரம் இருபதாயிரம் டாலர் அளவுக்கு விற்பனை சூடு பிடித்தது.

வழக்கமான புத்தகக் கடைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நூல்களை மட்டுமே அடுக்கி வைக்க இயலும். அமேசான் மெய்நிகர் அங்காடி. அங்கே ஆயிரக் கணக்கான, இலட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காணக் கிடைத்தன. அவற்றை கிடங்கில் சேர்த்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்டர் வந்தவுடன் பதிப்பாளரிடம் வாங்கி அனுப்பி வைக்க முடிந்தது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பல டாட்காம் குமிழ் உடந்த போது எண்ணற்ற ஆன்லைன் கம்பெனிகள் திவாலாயின. காணாமல் போயின. அமேசான் தாக்குப் பிடித்தது. 2003 க்குப் பின்னர் பொருளாதாரம் மேம்பட்ட போது அமேசான் முன்னைக் காட்டிலும் ஸ்திரமாக முன்னேறியது. உலகின் மிகப் பெரிய புத்தகக் கடையென்றெல்லால் தம்பட்டம் அடிக்கக் கூடாது. அமேசான் புத்தகக் கடையே கிடையாது. அது புத்தக புரோக்கர் என்று வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பைசல் ஆனது. அதன் பிறகு உலகின் மிகப் பெரிய புத்தகக் கடலாக நீடித்தது. அமேசானின் புண்ணியத்தில் நிஜமான நிறைய புத்தகக் கடைகள் மூடப்பட்டன.

முதலில் புத்தகக் கடைகளுக்கு இடைஞ்சல் கொடுத்த அமேசான் பிறகு பதிப்பகங்களுக்கும் சவாலாக உருவெடுத்தது. ஈ-புக்ஸ் எனப்படும் மின்னூல்களை அறிமுகப்படுத்தியது. புத்தகங்களை காகிதத்தில் அச்சிட்டு விற்கவேண்டிய அவசியமில்லை. புத்தகங்களைப் பொருத்தமட்டில் பெருஞ்செலவு காகிதத்திற்குத்தான். அதை அடுக்கி வைப்பதற்கான கிடங்கிற்கான செலவு, விநியோகம் செய்யும் செலவு என பொருளின் உள்ளடக்கம் தவிர ஏனைய செலவுகளே கூடுதலாக அமைந்தன. மின்னூல்கள் புத்தகச் சந்தையை அப்படியே புரட்டிப் போட்டன.

மின்னூல்களை PDF வடிவத்திலோ, வேறு ஏதேனும் வடிவத்திலோ வெளியிட்டால் ஒரு பிரதியை எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் விநியோகித்து விடலாம். இதனால் வெளியீட்டாளருக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். ஒருவர் பணம் கொடுத்து வாங்கிய மின்னூலை ஏனையோருக்கு அனுப்பவோ, பகிரவோ முடியாத அளவிலான தொழில்நுட்பத்தை அமேசான் உருவாக்கியது. அவ்வாறு மின்னூல்களை வாசிக்கும் உபகரணத்திற்கு Kindle எனப் பெயரிட்டது.

அச்சில் 8 டாலருக்கு விற்கும் அதே புத்தகம் மின்னூல் வடிவில் ஒரு டாலருக்குக் கிடைத்தால் யார் அச்சுப் புத்தகத்தை வாங்குவார்கள்? எழுத்தாளர்களுக்கும் அமேசான் நல்ல ராயல்டி வழங்கியது. அச்சு நூலுக்கு பத்து சதவீத ராயல்டி எனில், அமேசான் மின்னூலுக்கு எழுபது சதவீதம் வரை கிட்டியது. விலை குறைவு என்பதால் கூடுதல் பிரதிகள் விற்பனை ஆகும் சாத்தியமும் உருவானது. பதிப்பகங்களை எளிதில் அணுக முடியாதவர்கள், இலக்கிய முகவர்களோடு ஒப்பந்தம் போட்டுச் செயலாற்ற முடியாதவர்கள் நேரடியாக அமேசானில் தமது புத்தகத்தை வெளியிடலாம்; உயிர்மை பதிப்பகத்தில் வெளியான எனது ‘இரவல் காதலி’ நாவலின் ஆங்கில மூலம் முதலில் அமேசான் Kindle பதிப்பாக வெளியானதைப் போல.

மேலும் ஒரு Kindle உபகரணத்தில் ஆயிரக் கணக்கான நூல்களைச் சேகரிக்க இயலும். பல நூலகங்களை அதனுள் அடக்கி விட முடியும். அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய முன்னேறிய நாடுகளில் அச்சுப் புத்தகங்களை விட மின்னூல்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. ஒரு சில தேசங்களில் அச்சுப் புத்தகத்தைப் பேணவும், பதிப்பகங்களைக் காக்கவும் அரசாங்கம் மின் புத்தகங்களின் விலை அச்சுப் புத்தகத்தை விட அதிகமாக இருக்க வேண்டுமென கட்டுப்பாடு விதித்திருப்பதாக அறிகிறோம். எனினும் அதன் வளர்ச்சி குறைந்தபாடில்லை. இப்போது அமேசான் மின் புத்தகங்கள் 38 மொழிகளில் கிடைக்கின்றன. இந்திய மொழிகளும் இதில் சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கணிக்க வேண்டியிருக்கிறது.

இப்படியாக அமேசான் புத்தகச் சந்தையில் ஒரு புரட்சியையே உருவாக்கியிருக்கிறது. புத்தகங்கள் தவிரவும் ஏனைய எல்லா விதமான எலெக்ட்ரானிக் பொருட்கள், பொம்மைகள், பரிசுப் பொருட்கள், ஆடைகள் என பலதும் அமேசானில் வாங்கலாம். அப்படி அமேசானின் அடியொற்றி உருவானதுதான் அங்கே ஒரு காலத்தில் பணியாற்றிய பன்சால் பாய்ஸ் உருவாக்கிய Flipkart நிறுவனம்.

இப்போது ஒன்பதாயிரம் பேருக்கு மேல் அங்கே பணியாற்றுக்கிறார்கள். தனது வருடாந்திர விற்பனை ஒரு பில்லியன் டாலரை (சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய்) தாண்டி விட்டதாக இவ்வாண்டு மார்ச் மாதம் அறிவித்தது Flipkart. கம்பெனி ஆரம்பித்த ஏழு ஆண்டுகளில் ஒரு பில்லியன் சாதனை. (ஒப்புமைக்காக: அமேசானின் 2013 விற்பனை $ 74.45 பில்லியன்) Flipkart 2015 ஆம் ஆண்டுதான் ஒரு பில்லியனை விற்பனை இலக்காக நிர்ணயித்திருந்தது.

ஒரு வருடத்தில் ஆறாயிரம் கோடி ரூபாய் ஒரு இணைய தளம் ஈட்டியது பெரிய விசயம். ஆனால் இந்த வருடம் அக்டோபர் 6 ஆம் தேதி வெறும் பத்து மணி நேரத்தில் ரூ 650 கோடிக்கு விற்பனை செய்து பரபரப்பை உருவாக்கியது Flipkart. அன்றைய தினம் அனைத்து செய்தித்தாள்களிலும் Big Billion Day என முதல் பக்கத்தில் முழுப்பக்க விளம்பரம் வெளியாகியிருந்தது. அதில் சிறப்பு விற்பனை காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்று போட்டிருந்தது. அன்றைய தினத்தில் ஒரு பில்லியன் (நூறு கோடி) ஹிட்களை அந்த இணைய தளம் பெற வேண்டும் என்ற இலக்கு. அதுதான் Big Billion Day.

பொருட்கள் எல்லாம் அடிமாட்டு விலைக்கு விளம்பரம் ஆகியிருந்தன. திங்கட்கிழமையும் அதுவுமாக பல பேர் குழந்தைகளைக் கூட பள்ளிக்கு தயார் செய்து அனுப்பாமல், அலுவலகம் கிளம்பாமல் லேப்டாப் முன்னால் அமர்ந்து எட்டு மணிக்கு ஆஜரானார்கள். ரயில்வே டிக்கெட்டை தட்காலில் புக் செய்வது போல நிலைமை ஆனதுதான் மிச்சம். (அதிரடியான) தள்ளுபடி விலைக்கு என்று போட்டிருந்த எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. கட்டுக்கடங்காத இணையப் போக்குவரத்தை Flipkart ஆல் சமாளிக்க முடியவில்லை. எனினும் ஓரளவு தள்ளுபடி விலையில் நிறையப் பொருட்கள் இறைந்து கிடந்தன.

அந்த தினத்தில் சில மணி நேரத்துக்குள்ளாகவே Flipkart ஐந்து இலட்சம் கைபேசிகளை விற்றதாக அறிவித்தது. அதே போல ஐந்து இலட்சம் ஆடைகள் மற்றும் காலணிகள். 25 ஆயிரம் தொலைக்காட்சிப் பெட்டிகள். எல்லாம் சேர்த்து மொத்தமாக இருபது இலட்சம் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன. உண்மையிலேயே புரட்சிதான். பத்து மணி நேரத்தில் ரூ 650 கோடி விற்பனை.

ஆனாலும் அதிரடியான தள்ளுபடி என Flipkart எதை அறிவித்ததோ அதெல்லாம் கிடைக்கவில்லை. வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் கொதித்தனர். ராபர்ட் வதோத்ரா ஹரியானாவின் நிலங்களை 99 சதவீத தள்ளுபடியில் Flipkart இல்-தான் வாங்கினாராம் என கிண்டலடிக்கும் அளவுக்குப் போனது. போட்டி நிறுவனங்கள் கடுமையான விமர்சித்தன. பல பொருட்களின் விலை அவற்றின் உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டின. வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தன. இணையதள சில்லரை வணிகத்துக்கு புதிய சட்டதிட்டங்களை வகுப்பதாக அமைச்சகம் அறிவித்தது. இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் Flipkart விவகாரத்தை அரசு ஆராயும் என்று கூறினார். (இரண்டு வாரம் கழித்து தான் அப்படி எதுவும் கூறவில்லை என்று சொல்லி பின்வாங்கியது வேறு விஷயம்) இரண்டு நாள் கழித்து பின்னி பன்சாலும், சச்சின் பன்சாலும் உருக்கமான மன்னிப்பு மடல் ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு எழுதினார்கள்.

இங்கே நிர்மலா சீதாராமனைப் பற்றிப் பேசியதால் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. ஒரு பக்கத்தில் நாம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறோம். இன்னொரு பக்கம் ஆன்லைனின் எதை வேண்டுமானாலும் விற்கலாம். தடையேதுமில்லை. அமேசான் முழுக்க முழுக்க அமெரிக்க நிறுவனம். Flipkart தளத்தை இந்தியர்கள் ஆரம்பித்தாலும் அதன் பெரும்பான்மை முதலீட்டாளர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். முறையாக கடை திறந்து வியாபாரம் செய்வதற்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்காமல் பின்கதவு வழியாக ஆன்லைனை மட்டும் அனுமதிப்பது அண்ணாச்சி கடைகளை மட்டுமல்ல, வால்மார்ட் வகையறாக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

சரி.. Flipkart இன் அதிரடி விற்பனை நாளன்று snapdeal என்ற ஆன்லைன் இணையதளத்திற்கு வருகை புரிந்தோரின் எண்ணிக்கை கூட 15 மடங்கு அதிகரித்ததாம். ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் விற்பனை ஆனதாம். அமேசான் நிறுவனம் அக்டோபர் 16 ஆம் தேதி தள்ளுபடி அறிவித்து அனைத்து செய்தித்தாள்களிலும் விளம்பரம் கொடுத்தது. Flipkart அளவுக்கு அது பரபரப்பு உருவாக்கவில்லை. Flipkart போல அமேசான் விற்பனை எண்ணிக்கையையும் வெளிப்படுத்தவில்லை.

சென்ற வருடம் ஒரு பில்லியன் டாலர் விற்பனை செய்த Flipkart இந்த வருடத்தில் ஏற்கனவே மூன்று பில்லியன் டாலரைக் கடந்து விட்டது. மார்ச் 31, 2015 இல் நிதியாண்டு முடியும் போது 5 பில்லியன் (ரூ 30,500 கோடி) விற்பனை செய்து முடித்திருக்கும். அப்படி நடக்கும் போது 90 ஆயிரம் பேர் வேலை செய்யும் HCL டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் விற்பனையைத் தொட்டு விடும் தூரத்தில் வெறும் 9 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றும் Flipkart நிற்கும். 2007 ஆம் வருடம் கம்பெனி ஆரம்பிக்கும் போது இரு பன்சால்களும் சேர்ந்து வெறும் நாலுஇலட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்தார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

எல்லா வகையான கணிப்புகளையும் அடித்து நொறுக்கியிருக்கிறது இந்த ஆண்டின் தீபாவளிக்கான ஆன்லைன் விற்பனை. CRISIL ஆய்வறிக்கை 2014-15 இல் ஒட்டுமொத்த ஆன்லைன் சில்லரை வணிகத்தின் மதிப்பு ரூ 33,400 கோடியை எட்டும் எனக் கணித்தது. ஆனால் Flipkart மட்டுமே அதில் ரூ 30,500 கோடியைக் கடக்கும் என்றால் மற்ற நிறுவனங்களின் பங்களிப்பு ஒட்டு மொத்த விற்பனையை ஐம்பதாயிரம் கோடிக்கும் மேலே இட்டுச் செல்லும்.

Flipkart இன் அதிரடியான மார்க்கெட்டிங் சிலரால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இணைய வசதி படைத்த, இது வரைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யாத பலரையும் உள்ளே இழுத்து வர அந்த விளம்பர உத்தி உதவியது. இம்மாதிரி அதிரடி விற்பனை ஒன்றும் புதிதல்ல. எல்லாத் துறையிலும் கையாளும் உத்திதான். சன் டிவி குழுமம் தினகரன் பத்திரிக்கையை வாங்கிய போது அதற்கு அப்படித்தான் விலை வைத்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னையில் பதிப்பைத் துவங்கிய போது ஒரு ரூபாய் விலை வைத்ததற்கு ’இந்து’ புலம்பித் தீர்த்தது. அப்படித்தான் Flipkart நிகழ்வும்.

சில்லரை வணிகம் ஆன்லைன் வர்த்தகம் என்கிற பரிணாம வளர்ச்சியைச் சந்திக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இப்போது உருவாகியிருக்கிறது. ஒரு வருடம் முன்பு நான் ஒரு காமிரா வாங்கினேன். அந்த காமிரா கம்பெனியின் கடையில் சென்று அதன் ஆப்ஷன்களை எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகு Flipkart இல் ஆர்டர் செய்தேன். கேனான் கிளையிலோ, கேனான் ஆன்லைனிலோ வாங்குவதை விட Flipkart இல் 8 சதவீதம் குறைவாகக் கிடைத்தது. எந்த எலெக்ட்ரானிக் உபகரணம் வாங்கினாலும் அப்படி வாங்குவதே இலாபகரமாகத் தெரிந்தது.
அதே நேரம் ஒரு பொருளை கையில் ஸ்பரிசித்து வாங்குவதால் உருவாகும் திருப்தி அலாதியானது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 

என்ன பொருளை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருந்து அதனைப் பற்றி நன்கு அறிந்த பிறகு ஆன்லைனின் ஆர்டர் செய்வதில் தவறில்லை. ஆனால் முதன்முதலாக இணையதளத்தில் ’படம்’ மட்டுமே பார்த்து வாங்கும் பொருட்களின் ரிட்டர்ன் பாலிசி குறித்து அறிவது முக்கியமானது.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் ஜபாங்.காமில் எப்போதும் துணி வாங்குவார். டெலிவரியான துணி பிடிக்கவில்லையென்று போன் செய்தால் அவர்களே ஆள் அனுப்பி திரும்ப எடுத்துக் கொள்வார்கள். எல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் இத்தகைய ரிட்டர்ன் பாலிசி இருக்குமென மனதில் பதித்துக் கொண்டவர் சில நாள் கழித்து அமேசானில் செருப்பு ஆர்டர் செய்தார். அதை வாங்கிப் பார்த்த போது பிய்ந்து போயிருந்தது. அதன் ரிட்டர்ன் பாலிசிப் படி திருப்பி அனுப்புவதாக ஆன்லைனில் பதிவு செய்து, அதனை பிரிண்ட் எடுத்து பூனாவில் எதோ ஒரு முகவரிக்கு அனுப்ப வேண்டுமாம். திருப்பியனுப்பும் கூரியர் செலவையும் கொடுத்து விடுவோம் என்று போட்டிருந்தார்கள். அவர் மெனக்கெட்டு கொட்டுகிற மழையில் ஸ்கூட்டியில் சென்று அனுப்பி வந்தார். ஆறாவது நாள் தொலைந்து போன பூனைக் குட்டியைப் போல பார்சல் அவரிடமேயே திரும்பி வந்து விட்டது - ”நீங்கள் அனுப்பிய முகவரிக்கு சர்வீஸ் இல்லை” என. இப்போது அந்த செருப்பைக் கொண்டு யாரை அடிப்பதென்று தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்த தேசம் விவசாயிகளின் தேசம் என்று கூறுகிறார்கள். அது ஒரு மாதிரியான அரை உண்மை மட்டுமே. ஆழ்ந்து நோக்கினால் இது சிறு வியாபாரிகளின் தேசம் என்பது புலப்படும். வியாபாரி என்பவன் நெல்லைத் தமிழ் பேசி மளிகைக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சியாக இருக்க வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது. எல்லாத் தொழிலும் இதிலே அடக்கம். மஞ்சள் பையில் ஜாதகம், போட்டோவெல்லாம் வைத்துச் சுற்றிய புரோக்கர்கள் பலர் இன்றைக்கு காணாமல் போயிருக்கிறார்கள். தமிழ்மேட்ரிமோனி.காம் பல பேரை மாற்றுத் தொழிலுக்குத் தள்ளியுள்ளது. எல்லாம் ஆன்லைன் ஆன காரணத்தால் பல வியாபாரங்கள் காணாமல் போயுள்ளன. டிராவல் ஏஜென்சி பிசினஸ் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்பது சுவையான ஆயுவுக்கான களம். Makemytrip, stayzilla, bookmyshow, redbus, redkart, policybazaar முதலிய தளங்கள் பானைச் சோற்றுக்கான பதங்கள்.

புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும் போது பழைய முறைமைகள் மாறுவது இயல்பு. மாறுவது என்பதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுவது எனப் பொருள் கொள்ளலாம். பாதிக்கும் மேல் ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைனின் பதிவு செய்யப்படுகின்றன. வருமான வரி தாக்கல் செய்வதைக் கூட மூன்றில் ஒருவர் ஆன்லைனின் செய்கிறார்கள். உயிர்மைக்கான இந்தக் கட்டுரையைக் கூட நான் கையில் எழுதி பதிவுத் தபாலில் அனுப்பவில்லை. பில்கேட்ஸைத் திட்டி எழுதுவதற்குக் கூடப் பயன்படும் மைக்ரோசாஃப்ட் வேர்ட்டில் தட்டச்சிய பிறகு மின்னஞ்சலில் தான் அனுப்பினேன். அவ்வாறு மாற்றத்தை அரவணைக்கத் தவறினால் காலம் நம்மை உதறி விட்டு பயணித்துக் கொண்டேயிருக்கும்.  இன்னும் கூட சில பதிப்பாளர்கள், ”உங்கள் படைப்புகளை குறுந்தகட்டில் சேமித்து கூரியரில் அனுப்புக. எங்கள் முடிவைத் தபாலில் தெரிவிப்போம்” என அறிவிக்கிறார்கள்.

ஈ-காமர்ஸ் இணைய தளங்கள் அண்ணாச்சி கடைகளை அழித்து விடும் என்றொரு சாரார் கருதுகிறார்கள். ஆன்லைன் தளங்கள் தம்மைத்தாமே கூட அழிக்கக் கூடும். Flipkart இத்தனை தூரம் பல்கிப் பெருகினாலும் கூட இண்டியாபிளாசா.காம் என்ற பெயரில் இயங்கிய தளங்கள் என்னவாகின என்றே தெரியவில்லை. வலியது வாழும் என்ற கோப்டாடு இங்கும் நிலைபெறுகிறது. அண்ணாச்சி கடைகளைப் பற்றிய கேள்விக்கு, இன்னும் கூட இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் இயங்குகிறார்கள் என்பதே பதில். எல்லாக் கம்பெனிகளின் பாலிசிகளையும் ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் வகையிலான இணையதளங்கள் வந்திருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் அலாரம் கடிகாரம் என்றொரு வஸ்து இருந்தது. திருமணங்களில் இஸ்திரிப் பெட்டிக்கும், சுவர் கடிகாரத்துக்கும் அடுத்தபடியாக பெருமளவில் பரிசளிக்கப்பட்டவை அவை. இன்றைக்கு காணாமல் போயிருக்கின்றன. எல்லா அலாரமும் கைபேசிகளில் கையாளப்படுகிறது. காதலர்களின் தொலைபேசி அழைப்புகள் ரீங்காரமிட்டுத் துயிலெழுப்புகின்றன. கைபேசிகள் அலாரம் கடிகாரங்களை அப்புறப்படுத்தியுள்ளன. அதே போல காமிராக்கள் மாறுதலுக்கு ஆளாகியிருக்கின்றன. ஆனால் அவை முற்றிலும் தொலைந்து விடவில்லை.

ஆன்லைன் வர்த்தகம் செய்யும் இணையதளங்களை கைபேசி என்றே கருதினாலும், வழமையான வணிகக் கடைகள் அலாரம் கடிகாரங்களாக இருக்கப் போவதில்லை. அவை காமிராவாக, சுவற்றில் தொங்கும் நாட்காட்டியாக நிலைக்கத்தான் போகின்றன. எத்தனை என்பதே கேள்வி! எனக்குத் தெரிந்த பங்குச்சந்தை சப்-புரோக்கரில் ஒருவன் கால்சென்டரில் வேலைக்குச் சேர்ந்து விட்டான். இன்னொருவர் ஆட்டோ ஓட்டுகிறான். எட்டுப் பேருக்கு வேலை கொடுத்த டிராவல் ஏஜென்சி ஓனர் (பரம்பரையாக பிசினஸ் செய்யும் சமூகத்தில் வந்தவர்) இப்போது சாஃப்வேர் நிறுவனத்தில் மாதச் சம்பளம் பெறுகிறார்.  

எங்கள் அபார்ட்மெண்டில் பெண்கள் தினந்தோறும் ஜபாங்.காமில் துணிகளை ஆர்டர் செய்கிறார்கள். ஆனாலும் தீபாவளிக்கு முந்தைய வாரம், தி.நகரை விடுங்கள், வேளச்சேரி ரயில் நிலையத்திற்கே போக முடியவில்லை. அங்கே சென்னை சில்க்ஸில் புதிய கிளை திறந்திருக்கிறார்கள். 

(2014 நவம்பர் உயிர்மை இதழுக்காக எழுதியது)

No comments: