Wednesday, December 31, 2014

சத்தமில்லாமல் நிசப்தமாகக் கலக்கும் மணிகண்டன்

வா.மணிகண்டன் என்னை விட நாலைந்து ஆண்டுகள் இளையவராக இருக்கக் கூடும். ஆனால் பல வகையில் அவரை நான் அண்ணாந்து (சரியான ஸ்பெல்லிங் அன்னாந்துதானே?) பார்க்கிறேன். என்னை எழுதுவதற்குத் தூண்டிய முதல் ஜீவன் மணிகண்டன். தினமும் ஒரு பதிவினை எழுதக் கூடிய மணியின் அசாத்திய உழைப்பினைக் கண்டு பிரமித்துப் போவதுண்டு. இடையிடையே சோர்ந்து போனாலும் அந்தச் சோர்வைப் போக்கும் உத்வேகமும், உற்சாகமும் மணியின் வலைப்பதிவைக் காணும் போது வந்து விடுகிறது.

அச்சு ஊடகங்களின் துணையின்றி சுயமாகவே தன்னை முன்னிறுத்தி வெற்றியடைய முடியும் என்பதற்கு சாட்சியாகவே அவரைக் காண முடிகிறது. ஆயிரக் கணக்கான நண்பர்களை, நம்பிக்கைக்குரிய நபர்களை அதன் மூலமாகவே ஈட்ட முடியும் என்று காட்டியதற்கும்.

ஜெயமோகனோ, மனுஷ்யபுத்திரனோ, வா.மு.கோமுவோ இத்தகையை உழைப்பினை இடுவதிலோ, இத்தனையாயிரம் பேரையோ ஈட்டுவதிலோ ஏற்படாத ஆச்சரியம் மணிகண்டனிடத்தில் உண்டாகிறது. அவர்கள் எல்லாம் முழு நேர எழுத்தாளர்கள். அதே போல பெருமாள் முருகன், அபிலாஷ், வெண்ணிலா, இமையம் போல வாத்தியார் வேலையில் இருப்பவருமில்லை. மணிகண்டன் நம்மில் பலரையும் போல தினமும் ஒன்பது-பத்து மணி நேரம் பிழிந்து எடுக்கும் வேலையில் அகப்பட்டு அந்தி சாயும் போது எண்ணெய் உறிஞ்சப்பட்ட புண்ணாக்காக வெளிவரும் வாழ்க்கையை வாய்க்கப் பெற்ற ஒருவர்.

தனது இணைய எழுத்தின் மூலமாகவே இரண்டாவது புத்தகத்தைக் கொண்டு வருகிறார் மணி. சென்ற ஆண்டு ’லின்சே லோஹன் w/0 மாரியப்பன்’ என்ற நூலை புதிய பதிப்பாளர் மூலம் கொண்டு வந்தது போலவே இந்த ஆண்டும் ’மசால் தோசை 38 ரூபாய்’ என்ற புத்தகத்தை இன்னொரு புதிய பதிப்பாளர் மூலம் வெளிக் கொணருகிறார். வாழ்த்துக்கள் மணி.

பல வகைகளில் மணி இன்ஸ்பிரேஷன் என்று சொன்னேனல்லவா? நிசப்தம் என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவியிருக்கிறார். தனது முதல் புத்தகத்தின் மூலம் ஈட்டிய ராயல்டி பணத்தினை வைத்து தமிழ்த்தாய் பள்ளிக்கு உதவியிருக்கிறார். எழுத்தாளன் சமுதாயத்தில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கு ஒருங்கிணைப்பாளனாகச் செயல்பட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு. மகிழ்வாகவும், மனதுக்கு நிறைவாகவும் உணர வைக்கும் விஷயங்கள் இவை.

நான் குருத்தோலை அறக்கட்டளை துவங்குவதற்கான உந்துதலையும் ஊட்டியது மணிகண்டனே எனலாம். மணியைப் பின்பற்றி நானும் நாளை வெளியாகப் போகும் கொட்டு மொழக்கு நாவலின் மூலம் கிடைக்கும் ராயல்டி முழுவதையும் அறக்கட்டளைக்கு அப்படியே ஒதுக்கி விடுவது என முடிவெடுத்திருக்கிறேன். கொட்டு மொழக்கு மட்டுமல்லாது சென்ற வருடம் வெளியான ‘இரவல் காதலி’ மூலம் கிடைக்கும் ராயல்டியும் அப்படியே.

2 comments:

Krishna moorthy said...

நீங்கள் சொல்வது மிக உண்மை .சமீபத்தில்தான் அவரை பற்றி எழுதியிருந்தேன் .

Ganesan R said...

சரியாக சொல்லி இருக்கிறிர்கள் திரு .குப்புசாமி . மணிகண்டன் இதற்காக சிலவற்றை இழந்து இருப்பார் என நினைக்கிறேன் .முக்கியமாக Home Frontல். ஆனால் வாழ்ள்தந்தருக்கு அடையாளத்தை பதிவு செய்து கொண்டு வருகிறார் . மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள் . நீங்களும் சிறிய வயதிலிலேயே புத்தகம் எழுதி உங்களுடைய existenceஅய் பதிவு செய்து இருக்கிறிர்கள். Talk showல் participate செய்கிறிர்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள்