Thursday, December 31, 2015

2015 நினைவலைகள்

ஒவ்வொரு வருடமும் அசை போட பார்க்க எத்தனையோ நினைவுகள் கிடைக்கும். திரும்பிப் பார்க்க வைக்கும் மனிதர்கள் பலரைக் கடந்து வருவோம். 2015 ஆம் ஆண்டைப் பொருத்த மட்டில் என்னளவில் மூன்று முக்கிய மனிதர்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.
வா.மணிகண்டன்:
மழை வெள்ளம் காரணமாக BCP என்ற பெயரில் பெங்களூருக்குச் சென்று விட்ட என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்கு மத்தியில் பெங்களூரில் ஆஃபீஸுக்கு விடுப்பு அளித்து விட்டு கடலூரிலும், சென்னையிலும் முகாமிட்டிருந்த மணிகண்டன் மீதான மதிப்பு கூடிய வண்ணமே உள்ளது. ஸ்தாபனங்களால் சாதிக்க முடியாததை தனியொருவனாக தனது நிசப்தம் அறக்கட்டளை மூலம் சாதித்து ஆயிரக்கணக்கான வாசகர்களின் நம்பிக்க்கையை ஈட்டி அவர்களது லட்சக் கணக்கான நன்கொடையை சீராகக் கையாண்ட மணிக்கு வணக்கங்கள். ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை அமையப் பெற்ற (அல்லது அதை அமைத்துக் கொண்ட) மணி தமிழ்ச் சமுதாயத்தின் கொடை.

கார்த்திகைச் செல்வன்:
தமிழ் அச்சு ஊடகம், ஆங்கில அச்சு ஊடகம், தமிழ் காட்சி ஊடகம் என அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய மனிதர். தமிழர்களின் பிரதிநிதித்துவம் அனைத்து ஊடக வடிவங்களிலும் கூட வேண்டுமென்ற ஆசைக்கு தீனி போட்டவர். Time of India வில் இருந்து விலகியது வருத்தமென்றாலும், புதிய தலைமுறை செய்தி சேனலில் நிதானத்துடன் விவாதங்களை இவர் கையாளும் விதமே தனித்துவமானது. பரபரப்புக்கும், கூச்சலுக்கும் நடுவே ஆக்கப்பூர்வமாக தொலைக்காட்சி விவாதங்களை நடத்தும் மிஸ்டர் கூல் ஒரு டிரெண்ட் செட்டராகவும் அமைய வேண்டுவோம்.

சிதம்பரநாதன்: (முன்பொரு சமயம் அவரைப் பற்றி எழுதியது)
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பை உருவாக்கிய திரு.சிதம்பரநாதன் டிசம்பரில் காலமானார். தனது குழந்தைகளுக்கு கியூபா, இன்குலாப் என வித்தியாசமாகப் பெயரிட்டு இடதுசாரி சித்தாந்தங்களைப் பேசியவர்; குடும்பத்திற்காக பெரிதாக எதையும் செய்யாமல் ஊருக்காகவே வாழ்ந்தவர். புற்றுநோயால் மரணித்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரை இழந்து வாடும் பரந்து பட்ட மாற்றுத் திறனாளிகள் அனைவர் சார்பிலும் அஞ்சலிகள்.

Monday, June 15, 2015

பேஸ்புக் பொண்ணு

ஒரு அலட்சியமான மனநிலையில்தான் அதிஷாவின் ‘ஃபேஸ்புக் பொண்ணு’ சிறுகதைத் தொகுப்பை நேற்று வாசிக்க ஆரம்பித்தேன். ஓரிரவில் தனியாகச் சிரிக்கவும், கண்களின் நீரை வரவழைக்கவும் செய்து விட்டது.
இலக்கியக் கூட்டங்களின் கடைசியின் கிடைக்கும் சமோசாவுக்கும், தேநீருக்கும் ஆசைப்பட்டு தவறாமல் ஒவ்வொரு கூட்டமாகச் செல்லும் ஒரு இலக்கிய ஆர்வலர்களைப் பற்றிய பகடிக் கதை தனியே சிரிக்கச் செய்த ஒன்று.
‘கெட்ட வார்த்தை’ என்ற கதை மாதக் கடைசியில் வந்த தீபாவளி தினத்தன்று அம்மா இறந்து போன செய்தியை ஒருவன் சென்னையில் எதிர்கொள்வதில் துவங்குகிறது. விரக்தியும், இயலாமையுமாக முன்பதிவில்லா ரயிலில் ஊருக்குச் செல்லும் வலியில் விரிந்து அம்மா காரியம் முடிந்ததும் பசியோடு ‘அம்மா இருந்தால் இந்நேரம் சாப்பிட்டியாடா’என்று கேட்டிருப்பாளே என நினைக்கையில் முடித்கிறது. இதற்கு அழுதது எனது பலவீனமாகக் கூட இருக்கலாம். ஆனால் அங்கனம் அழுவாச்சி வரும்படி வார்த்தைகளில் வடித்தது அதிஷாவின் பலம்..
மேலோட்டமான light reading ஆக மட்டுமே இருக்குமென நினைத்து ஏமாந்து போனேன். கார்ப்பரேட் சாமியாரின் பேச்சை நம்பி அவனோட சேரப் போகிற தொழிலதிபரைப் பற்றி, சூப்பர் சிங்கர் போட்டியில் பரிசு பெறும் சிறுவன் ‘தோற்றிருந்தால் அப்பா என்ன நினைத்திருப்பார்’ என்று மட்டுமே யோசிப்பதைப் பற்றி, அம்மா செத்துப் போன நாய்க்குட்டியை நினைத்துக் கவலைப்படும் சிறுமியின் அக உலகைப் பற்றி, வாசகர் சந்திக்க வருவதை நினைத்துப் புளகாங்கிதம் அடையும் எழுத்தாள மனோநிலை பற்றி, நாற்பது வயதை நெருங்கும் ஒருவனின் தீராத உடற்பசியால் அவன் ஓரினச் சேர்க்கையாளனாக மாறத் துணியும் சூழல் பற்றி, கோவை குண்டு வெடிப்புப் பின்னணியில் ஒரு முஸ்லிம் சிறுவனைப் பற்றி என பல தளங்களில் தொட்டுச் செல்லும் வாசிப்பின் ரசிப்புக்கான தொகுப்பு.
அணிந்துரையில் பாஸ்கர் சக்தி குறிப்பிட்டது போல குழந்தைகளின் உலகத்தினை அருமையாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.
ஒரு மனிதனை நாம் நீண்ட காலம் அறிந்திருக்கும் போது, அவன் நம் சக வயதுக்காரன் அல்லது சற்றே வயது குறைந்தவன் எனும் போது அவன் திறமைகளை அங்கீகரிப்பதில் நமக்கு மெத்தனம் உருவாவது இயல்பு. ஊக்குவிப்பு இல்லாத காரணத்தினாலேயே பல திறமையாளர்கள் வளராமல் போகிறார்கள்.
வாழ்த்துக்கள் அதிஷா. தொடர்ச்சியாக எழுதுங்கள் ப்ரோ..

Monday, May 18, 2015

வாசக... ஸாரி.. கல்லூரி சாலை

நேற்று பனுவல் புத்தகக் கடையில் வாசகசாலை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் சில இளைஞர்களைச் சந்திக்க நேர்ந்தது. மூன்று பேர் “நீங்க GCTயா?” என்று கேட்டார்கள். ஆமாம் என்றதும் நாங்களும்தான் என்றார்கள். கடந்த வருடம் கல்லூரி முடித்த மாணவர்கள். மிக நிறைவாக இருந்தது.

வாசக சாலையினர் அனைவரும் இளைஞர்கள். ஏதோயொரு கிறுக்குத்தனத்தில் இதை செய்து வருகிறார்கள். எவனோ ஒரு எழுத்தாளனுக்கு ஃபாரின் சரக்கும், எலாஸ்ட்டிக் போகாத ஜட்டியும், ஃபிளைட் டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்த அழிவதற்குப் பதிலாக இம்மாதிரி நிகழ்வுகளை நடத்துவது ஆரோக்கியமானது. பனுவல், டிஸ்கவரி புக் பேலஸ் மாதிரியான இடங்களில் யாவரும்.காம், செவ்வி, வாசக சாலை முதலானோர் மேற்கொள்ளும் முயற்சிகள் முக்கியமானவை.

நிகழ்ச்சி முடிந்ததும் ஏற்பாட்டாளர்களோடு பேசுகையில், நிகழ்வுகளை புத்தகக் கடைகளைத் தாண்டி (மாறிமாறி 300-400 பேர் மட்டுமே எல்லாக் கூட்டத்திற்கும் போவார்கள்) கல்லூரிகள் மற்றும் பள்ளிகள்ளோடு இணைந்து ஏற்பாடு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாள நண்பர் கூறிய செய்தி அதிர்ச்சியாக இருந்தது. தான் ஒரு கல்லூரியில் உரையாற்றச் சென்றிருந்ததாகவும், அங்குள்ள மாணவர்களை என்ன வாசிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு எவ்விதமான பதிலையும் கூறவில்லை என்றும் சொன்னார். சுஜாதாவும், பாலகுமாரனும் கூட அவர்களுக்கு பரிட்சயமில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி. இதையெல்லாம் மாற்ற வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு நமக்கெல்லாம் உண்டு.

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் கல்லூரிக்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் நேற்றுத்தான் கிட்டியது. இதில் உள்ள இருவர் இன்றைக்கும் நம்மிடையே இல்லை. ஒருவர் ஜேகே.. இன்னொன்று உதவிப் பேராசிரியர் ராஜேந்திரன்.
******
மணிபிரபு கோவையில் பொறியியல் பயிலும் மாணவர். அவர் குருத்தோலை நாவலுக்கு ஓரு விமர்சனம் எழுதி அனுப்பியிருக்கிறார். உள்ளபடியே மகிழ்ச்சியாக உணர்ந்த தருணம். இன்றைய இளைஞர் நேற்றைய கதையை வாசித்ததும், அதைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்ததுமே அந்தப் படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.

நடுகல் பதிப்பக வாயிலாக  வெளிவந்த செல்லமுத்து குப்புசாமியின் "குருத்தோலை" நாவலை வாசித்தவுடனே அதற்கான பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என தோன்றியது .பல புத்தகங்களை வாசித்தும் விமர்சனம் எழுதத் துண்டிய முதல் நாவல் இதுவே.

நாவல் முழுவதுமே கொங்குத்தமிழ் பொங்கிவலிகிறது. கொங்குத்தமிழ் பரிச்சயம் இல்லாதவர்கள் வாசிக்க  சற்று சிரமப்படுவார்கள். ஆனால்,இத்தனை நாட்களாக  ஆவணப்படுத்த தவறிய மொழி வழக்கு.

கொங்கு கிராமமெங்கும் குடும்பங்கள் தோறும் நடந்த, நடக்கும் கதை. கதையின் மையப்பாத்திரம் முத்துச்சாமி. முத்துச்சாமியின் வளரச்சியோடு கதையும் வளர்கிறது.

கதை நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இன்றைய தேதியில் முடிவுறுகிறது.அன்றைய மனிதர்களின்,  யரார்த்தம், பாசம், காதல், செலவாந்திரம், கெட்டவார்த்தைகள், சண்டைகள், மறைந்து போன கல்யாண சம்பிராயங்கள் என அத்தனை அலகுகளையும் கண் முன் காட்சிகளாக விவரிக்கிறார் எழுத்தாளர்.

கதை எசகுபிசகாகவே தொடங்குகிறது. முத்துச்சாமியும் அவனின் அத்தை மகளான பாப்பியும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் தனிமையின் துண்டுதலால் வயதின் தாகத்தை தீர்த்துகொள்கின்றனர். இது கதைக்கு தேவையற்ற  அலங்காரம் என்றே தோன்றியது .

பின், முத்துச்சாமியின் அக்கா திருமணம்,செல்லப்பனின்( முத்துச்சாமியின் மச்சான்) பாகப்பிரிவினை என கதை தொடர்கிறது .இந்த நிகழ்வுகளை விவரித்த விதத்தில்  எழுத்தாளரின் நுண்ணறிவு புலப்படுகிறது. பத்து வள்ளப் பண்ணயத்தில் பாடுபட ஆள் வேண்டும் என்பதற்காக நாட்ராயன் முத்துச்சாமியின் படிப்பிற்கு முனுக்குப்போடுவதும், நன்றாக படித்த  முத்துச்சாமியை இழக்க விரும்பாத டேவிட் வாத்தியார்  நாட்ராயனின் காலில் விழுந்து மீண்டும் பள்ளிக்கு  அனுப்புமாறு கெஞ்சவதும் என அக்கால மனிதர்களின் அறியாமை மற்றும் ஈரத்தை  முறையே இயல்பாக எடுத்துரைக்கிறார்

செல்லப்பனின் எருதுகளை பாப்பியின் தந்தை வாங்கிக்கொண்டு பணம் தராமல் வஞ்சிப்பதும், அதை கேட்கச் சென்ற  நாட்ராயனை குடும்பமே  அடித்து விரட்டுவதும், அந்த ஆற்றாமையை பாப்பியின் ஆட்டை கொண்டுபோக வந்த அவள் கணவன்மீது காட்டுவதும் அதனால் அவமானப்பட்டவன் முத்துச்சாமியை ஆள் வைத்து அடிப்பதும் என கதை விரிகிறது.

கடைசி அத்யாயத்தில் திடீரென கிழட்டு முத்துச்சாமிக் கொண்டு வருவது கதையின் வீரியத்தை குறைப்பதாய் படுகிறது. பாப்பின் இளமைக் காலக் காதல் நினைவுகளால் பகையை மறந்து பாப்பியின் மகன் திருமணத்திற்கு செல்வதாய் கதை முடிகிறது.

"குருத்தோலை" -இது புனைவல்ல; கொங்கு கிராமங்களின் பல்வேறு குடும்பங்களில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பே. அக்கால சாதிய அடக்குமுறையை பற்றி பேசாதது சிறு குறையே. மொத்தில், குருத்தோலையை உண்ணும்போது பெறும் சுவையை வாசிக்கும்போதும் பெறலாம்.

பதில்:
நன்றிங்க மணிபிரபு. முதல் அத்தியாயத்தில் காமம் வருவதும், கடைசியில் கதை வேகமாக முடிவதும் திட்டமிட்டுச் செய்ததுதான். ஆனால் சாதிய அடக்குமுறைகளைப் பற்றிப் பேசாமல் விட்டத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த கதைக்கான களத்தில் அது இல்லை. அல்லது அது திட்டமிடப்படாத ஒன்று. அடுத்த நாவலான கொட்டு மொழக்கு சாதியை விரிவாகப் பேசுகிறது - சாதிகளின் பின்னுள்ள அரசியல், அரசியலுக்குப் பின்புலமான சாதி என பின்னட்டையில் வருமளவு!

Saturday, May 09, 2015

கொட்டு மொழக்கு - இரு விமர்சனங்கள்

ஈரோடு கதிர் கொட்டு மொழக்கு நூலுக்கு எழுதிய விமர்சனம்.
கூடுவிட்டு கூடு பாய்வது போலே சென்னையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் அமராவதி ஆற்றங்கரை கிராமத்தான் ’ராசு’வாக வாழ்ந்து பார்க்கும் ஒரு அற்புத அனுபவத்தை 155 பக்கங்களில் தந்திருக்கிறார் செல்லமுத்து குப்புசாமி.

சென்னையில் பணி புரியும் ராசுவின் அப்பச்சி (அம்மாவின் அப்பா) கிராமத்தில் இறந்து போகிறார். அந்த மரணச் சேதி என்ன மாதிரியான மன நிலையை ராசுவிற்குத் தருகிறது என்பதில் தொடங்கி இழவு காரியம் முடித்து சென்னை திரும்புவது வரைதான் கதை.
இழவிற்காக ஊர் திரும்பும் ஆயத்தங்களிலேயே நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். அப்பா, அம்மா, தாய்மாமன், அத்தை, அம்மாயி, அப்பச்சி என உள்வட்ட உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வும், இடியாப்பச் சிக்கல்களும் வாழ்க்கையில் நாம் கடந்த விதவிதமான உறவுகளை இழுத்து வந்து நினைவுபடுத்துகின்றது. இரண்டு நாட்கள் இழவு வீட்டுப் பந்தலில் அவன் இருந்தேயாக வேண்டிய சூழல். ராசுவிற்கு உறவுகளோடு முன்பின் ஏற்பட்ட நிகழ்வுகளும், இழவு வீட்டு நிகழ்வுகளுமென கதை வெகு வேகமாய் நம்மை தமக்குள் இழுத்துக் கொள்கிறது. கொங்கு மண்டலத்தின் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து பெரு நகருக்கு நகர்ந்து போனவன், தன் கிராமத்தில் இழவு வீட்டை எதிர்கொள்ளும்போது இருக்கும் கலந்துகட்டிய உணர்வுகளை மிக அழகாய், தெளிவாய் வடித்திருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் நம்மை ராசுவோடு பொருத்திப் பார்த்து ரசிக்கும் சாத்தியங்களுண்டு. இறுதியாய் வரும் கருதன் எண்ணற்ற கேள்விகளை எழுப்பிவிட்டுச் செல்கிறான். அவனுக்கு ராசு தம்மால் ஆன ஒரு பதிலை தந்துவிட்டுப் போகிறான். ஒரு கிராமத்து இழவு வீட்டின் சடங்குகளை ஆவணப்படுத்தும் ஒரு நாவல் என்றும் சொல்லலாம், அதே சமயம் கிராமத்து சாதி அரசியலையும் ஆவணப்படுத்த இது தவறவில்லை.
விவசாயக் குடும்பத்திலிருந்து வெளியேறி நகருக்குள் அடைபுகுந்தவர்கள் அனைவருக்கும் இந்த ”கொட்டு மொழக்கு” நாவலை அன்போடு பரிந்துரைக்கிறேன். வாழ்ந்த அல்லது தொலைத்த வாழ்க்கையை 155 பக்கங்களில் நீங்கள் இன்னுமொருமுறை வாழ்ந்து பார்க்கும் உத்திரவாதம் உண்டு.
*
எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமியை பல வருடங்களாக அறிந்திருந்தாலும், சந்தித்தது கடந்த வாரம்தான், இரண்டு வருடங்களுக்கு முன்பு பங்குச்சந்தை குறித்து அவர் எழுதியிருந்த ஒரு புத்தகத்தை பெரும் பிரயத்தனப்பட்டு என் கைகளில் சேர்த்திருந்தார். வாசித்துவிட்டீர்களா என்றும் அழுத்தம் கொடுத்தார். உண்மையில் இதுவரை அதன் அட்டை கூட நான் திறக்காமலே இருக்கிறேன்.
கடந்தவாரம் வந்தவர் தனது “கொட்டு மொழக்கு” நாவலை அளித்தார். அவருடன் உரையாடியபடியே நடுவாந்தரமாய் புத்தகத்தை விரித்து ஏதோ பக்கத்தை பார்வையால் வருடினேன். அந்த பக்கத்தில் வட்டார மொழியிலிருந்த உரையாடலொன்று மனதிற்குள் குறுகுறுக்கத் தொடங்கியது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என் பார்வை வருடிய பக்கம், பெருமாள் முருகனின் கங்கணம் நாவலை நினைவூட்டியது. ஆனால் இரண்டிற்கும் சற்றும் தொடர்பில்லை.
உடனே படிக்கவேண்டுமெனும் உந்துதலில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். இப்படி ரசித்து, ருசித்து, தீவிரமாக, வாசித்து நீண்ட நாட்களாகிவிட்டன.
வாசித்து முடித்தவுடன் வாசிப்பின் மகிழ்ச்சியை செல்லமுத்து குப்புசாமிக்கு வாட்ஸப்பில் பகிர்ந்த கையோடு, மும்பையில் இருக்கும் என் நண்பருக்கு இந்தப் புத்தகத்தை உடனே அனுப்ப விரும்பி அவரின் முகவரி பெற்று அனுப்பியிருக்கிறேன்.
பாராட்டுகளோடு... அன்பும் நன்றியும் செல்லமுத்து குப்புசாமி!
**********
கோவை ராமநாதன் கீழ்க்கண்ட விமர்சனத்தை கொட்டு மொழக்கு நூலுக்காக ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.

செல்லமுத்து குப்புசாமி அவர்களின் "கொட்டுமொழக்கு" புத்தகத்தை இன்று தான் படிக்க முடிந்தது. சென்னையில் ஆரம்பிக்கும் கதை மூன்றாவது அத்தியாயத்திலேயே தாராபுரம் பக்கம் வந்துவிடுகிறது. கிராமத்தில் பிறந்து வளர்ந்து ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஒருவன் நெருங்கிய உறவில் நடக்கும் ஒரு பெரிய காரியத்துக்கு வருவதும் அதைத்தொடர்ந்து அங்கு நடக்கும் நிகழ்வுகளுமே கதை. கொங்கு பகுதிகளில் எழவு வீட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் அவர்களின் சம்பிரதாயங்களையும் பழக்க வழக்கங்களையும் நகைச்சுவை உணர்வையும் உறவுகளுக்குள் இருக்கும் நெருக்கத்தையும், வன்மத்தையும் அவருக்கே உரிய எழுத்து நடையில் அழகாக எழுதியிருக்கிறார். ராசுவுக்கும் எடிமலைக்கும் நடக்கும் அலைபேசி உரையாடல், எழவு வீட்டில் ராசு துண்டை வாயில் வைத்து ஜெர்க் கொடுப்பது, ராசுவும் ரம்யாவும் காரில் போகும்போது ராசுவின் புத்திசாலித்தனமான பேச்சு போன்ற பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வேண்டியிருக்கிறது. இதை கதை என்பதையும் தாண்டி இந்த பகுதி மக்களின் வாழ்க்கை பதிப்பாகவே நான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி!

Wednesday, April 29, 2015

மனுஷ்யபுத்திரன் நல்லவர்

கடந்த சில நாட்களாக ஜெயமோகனுக்கும், மனுஷ்யபுத்திரனுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தைக் காணுறுகையில் ஜெயமோகன் சுமத்திய குற்றச்சாட்டு பிரதானமாக முன்வந்து நிற்கிறது.

மனுஷ்யபுத்திரன் இளம் எழுத்தாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு (நாலாந்தர) புத்தகம் பதிப்பிக்கிறார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெயமோகனை மனமுருகி ஆராதித்த அபிலாஷ் கூட திடீரென்று குட்டியாக்கரணம் போட்டு அதெல்லாம் அபாண்டம் என்கிறார். பொதுவெளியில் மனுஷ்யபுத்திரனின் கணக்கு வழக்குகளைக் கேள்விக்கு உள்ளாக்கிய யமுனா ராஜேந்திரனும் அப்படியே சொல்கிறார். விநாயக முருகன் வேட்டியை அவுத்துப் போட்டு சத்தியம் செய்வதாகச் சொல்கிறார். மனுஷோடு எப்போதும் முரண்டு பிடிக்கும் ஒரு இணைய எழுத்தாளர் கூட தனது முதல் கவிதைத் தொகுப்புக்கு காசு வாங்காமல் போட்டதாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் நாம் மெளனம் காத்தால் அது குற்றமாகி விடும். (சில நேரங்களில் மெளனங்கள் கூட குற்றமாகி விடும் என தீபலட்சுமி சொன்ன வாசகம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது). உயிர்மை பதிப்பகம் எனது இரண்டு நாவல்களை வெளியிட்டது. அதற்கு ஒரு காசு கூட வாங்கவில்லை.. நான் பழகிய உயிர்மையில் புத்தகம் எழுதியவர்கள் யாரிடமும் வாங்கியதாகத் தெரியவில்லை. ஒரு வேளை என்னைப் போன்றவர்களுக்குத் தெரியாமல், ஜெயமோகனுக்கு மட்டும் தெரிந்து சிலர் இருந்தால் அவர் அதை ஆதாரத்துடன் வெளியிடலாம்.

என்னைப் பொருத்த வரைக்கும் காசு கொடுத்து புத்தகங்களைப் பதிப்பிப்பது ஒன்றும் கொலைக் குற்றமல்ல. நிறையப் பதிப்பகங்கள் அப்படி இயங்குகின்றன. அவ்வகையான பரிவர்த்தனைகளில் அதை நேர்மையாக ஒப்புக்கொண்டு, புத்தகம் விற்ற பிறகு அதற்கான கணக்கினை சமன் செய்யும் பக்குவத்தோடு பதிப்பகங்கள் நடந்து கொண்டால் போதும். அதைக் கோருமளவு திரட்சியான விதைக்கொட்டையுடைய எழுத்துக்காரர்களும் தேவை. சம பங்காளிகள் இருந்தால் மட்டுமே ஒப்பந்தகள் உருவாகும். இல்லையேல் சரணடைவுகள் மட்டுமே சாத்தியம்.

உதாரணத்துக்கு http://www.notionpress.com/ மாதிரியான நிறுவனங்கள் எழுத்தாளர்களிடம் பணம் வாங்கிப் பதிப்பிக்கும் பிசினஸை முறைப்படி செய்கின்றன.

ஜெயமோகன் எழுப்பிய பிரச்சினை பரபரப்பாகப் பேசப்பட்ட போது ஒரு ஃபேஸ்புல் தொடர்பு, “எங்கள் சிங்கம் லஞ்சம் கொடுப்பதுமில்லை.. வாங்குவதுமில்லை” என்றது. அதாவது மனுஷ்யபுத்திரன் புத்தகம் போடுவதற்கு பணம் வாங்குவதில்லையாம்.... அதே மாதிரி புத்தகம் போட்ட பிறகு எழுத்தாளர்களுக்கு பணம் கொடுப்பதுமில்லையாம்.. நல்ல நகைச்சுவை!

உயிர்மை பதிப்பகத்தில் ராயல்டி வாங்கிய எழுத்தாளர்களை நானறிவேன். உயிர்மையில் வெளியான ’கொட்டு மொழக்கு’ மற்றும் சென்ற ஆண்டு வெளியான ‘இரவல் காதலி’ இரண்டிலும் கிடைக்கும் ராயல்டியை குருத்தொலை அறக்கட்டளைக்குப் பயன்படுத்துவதாகச் சொல்லியிருந்தேன். ஜனவரி 1 ஆம் தேதி நடந்த வெளியீட்டு விழா நடந்த மேடையிலேயே ராயல்டிக்கான காசோலையைத் தருவதற்கு முன்வந்தார். நல்ல காரியம் செய்வது நாலு பேருக்குத் தெரியட்டும் என்ற நல்லெண்ணத்தில் சொன்னார். நான்தான் கூச்சம் காரணமாக மறுத்து விட்டேன். அதற்குப் பிறகு தனியானதொரு சந்தர்ப்பத்தில் இந்த இரண்டுக்குமான ராயல்டியைக் கொடுத்திருக்கிறார். இதை எந்த மசூதியிலும், தேவாலயத்திலும் என்னால் சத்தியம் செய்து கூற இயலும்.

இவ்வளவு ஏன்? ’கொட்டு மொழக்கு’ நாவலில் பதிப்பக அரசியலைப் பற்றிய சர்ச்சைக்குரிய அத்தியாயம் ஒன்றினை, மறைமுகமாக அவரைச் சீண்டுவது போல பிறர் கருதக் கூடிய வாய்ப்பு உள்ளதென்றாலும் கூட, அதை அப்படியே வெளியிட்ட பெருந்தகையாளர். இன்னொரு இணையதளத்தில் இதைப் பற்றி சர்ச்சை கிளம்பிய போதிலும் இன்று வரை இனிக்கும் இதயத்தோடு பழகுகிற நெறியாளர். புதிய தலைமுறை இதழில் ‘பணம் பத்திரம்’ தொடர் வெளிவருவதைப் பற்றிச் சொன்னபோது பெருமிதத்தோடு பாசம் காட்டிய பண்பாளர்.

Mark my words...அவதூறுகளுக்கு அப்பாற்பட்டவர் மனுஷ்யபுத்திரன்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வையுங்கள் மனுஷ்யபுத்திரன். அடுத்த வருட சுஜாதா விருதுக்கான தேர்வுக் குழுவின் தலைமை அதிகாரியாக ஜெயமோகனை நியமியுங்கள்... பிறகு பாருங்கள்... அவரும் நல்லவர்தான்..

என்ன நம்ம பர்ஃபார்மன்ஸ் கரெக்ட்டா இருக்கா? பர்ஃபார்மன்ஸை விடுங்க அவர் சொன்ன நாலாந்தர மேட்டர் இருக்கே ஒரு தமாஷ் போங்க.. ஒரு வேளை என்னையெல்லாம் படித்திருப்பாரோ என்னவோ!

Sunday, April 19, 2015

மணிரத்தினத்தின் அலை பாய்ந்த மெளனராகம்

மணிரத்தினம் இயக்கிய படங்களில் வேறு எதற்கும் இல்லாத முக்கியத்துவமும், எதிர்பார்ப்பும் ஓகெ கண்மணிக்கு உருவாகியிருப்பதை உணர முடிகிறது. அதற்கு மவுஸாண்டிகளை சுகாசினி அக்கா மூக்கைச் சொறிந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். இப்போதும் படம் பிடித்திருந்தாலும் கூட ‘நான் கூவாலிஃபைடு இல்லை’என விமர்சனம் போடாமல் பல நண்பர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள்.

பிரார்த்தனா டிரைவ்-இன்னில் பெரிய கியூ. இரண்டு மூன்று பெண்கள்... ’எங்க வீட்டுக்காரர் காரை உள்ளே எடுத்துக்கிட்டு வரட்டும் நான் போய் எடம் புடிச்சு வைக்கிறேன்’ என உள்ளே ஓடினார்கள். பேருந்தில் துண்டு போட்டு சீட் பிடிப்பதைக் கண்டிருக்கிறோம். ஆனால் டிரைவ்-இன் தியேட்டரில் துண்டு போட்டு இடம் பிடிக்கும் வித்தையை நேற்று மாலை கண்டேன். உள்ளே போய் கார் பார்க்கிங்கில் நீட்டிப் படுத்துக்கொள்வார்களோ என்னவோ! கடைசி வரிசையில்தான் எங்களுக்கு இடம் கிட்டியது.

இயக்குனர் ஷங்கரின் ஐ படம் தந்த அயர்ச்சியில் சற்று கலக்கத்தோடுதான் ஓகே கண்மணிக்குச் சென்றோம். அதனால் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஐ கொடுத்த அனுபவத்தில் ஓகே கண்மணி படம் ஸூப்பரோ ஷூப்பர்!! மவுஸ் பயன்படுத்தாமல் இதை டைப் செய்கிறேன் அருக்காணி மேடம்... அதனால் ஏற்றுக்கொள்ளுங்கள் பிளீஸ்..

நட்சத்திர எழுத்தாளர் யாருடனும் கை கோர்க்காமல் மணிரத்தினம் தானாகவே நல்ல படத்தை எடுத்துள்ளார். மேட்டுக்குடி சமுதாயத்தின் ஃபேண்டஸி படம் ஓகே கண்மணி. சில பேர் அலைபாயுதே மாதிரியான படம் என்கிறார்கள். அலைபாயுதே மாதிரி இது மணிரத்தினத்திற்கு முக்கியமான படம். அம்பானி கதையை ’குரு’ என்ற பெயரில் மொக்கையாக எடுத்ததைப் போலின்றி இது மாதிரி இயல்பான கதைகளையே மணிரத்தினம் தேர்ந்தெடுக்கலாம். இது அவருக்கு நன்றாக வருகிறது.

1986 இல் வெளியான மெளனராகம். திருமணத்திற்கு முன்பே காதலில் விழுந்திருந்த பெண் கல்யாணத்திற்குப் பின் கணவனுடன் பெறும் அனுபவங்களையும், மனப் போராட்டங்களையும் முன்னிறுத்தும் படம். கல்யாணத்திற்கு முன் எப்படியிருந்தாலும் கழுத்தில் தாலி ஏறிய பின் பழையதை மறந்து புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதைப் பேசியது. பின்னர் 14 ஆண்டுகள் கழித்து 2000 இல் அலைபாயுதே. காதலித்து திருட்டுத்தனமாக கல்யாணம் செய்த பிறகு தனித்தனியே தமது பெற்றோருடம் வாழும் ஜோடியைப் பற்றிய கதை.

அதன் பிறகு பதினைந்து ஆண்டுகள் கழித்து இப்போது ஒரு கதை. கல்யாணம் செய்துகொண்டு தனித்தனியே வாழ்வது பழைய மதிப்பீடு என்று சொல்லும் விதமாக கல்யாணமே செய்யாமல் சேர்ந்து வாழும் புதிய லைஃப்ஸ்டைலுக்கு முன்னேறியிருக்கிறது.

இந்த மூன்றுமே மூன்று தலைமுறையின் வாழ்க்கையை, வாழ்க்கை சார்ந்த மதிப்பீடுகளைக் குறிப்பிடுவதாகக் காணலாம். மணிரத்தினத்தின் படங்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அப்படியே பிரதிபலிப்பதில்லை. அவை மேட்டுக்குடியினரின் (அல்லது upper middle-class இன்) பிரச்சினைகளை அலசுபவை. முதலைக்கு தண்ணீரில் பலம் என்பது போல மணிக்கு இதுவே பலம். அந்த வட்டத்தைத் தாண்டிய அவரது படங்கள் காக்டெயில் பார்ட்டியில் கம்மங்கூழ் ஊற்றியது போல செயற்கைத்தன்மையோடு இருக்கும்.

இது வரைக்கும் இந்திய சமூகத்தின் காதல் திரைப்படங்களைக் கவனித்தால் காதலின் பிரச்சினைகள் பெரும்பாலும் புறச்சூழல் சார்ந்தவையாகவே அமைவதைக் காணலாம். பெற்றோர், குடும்பம், ஜாதி, மதம், ஏழை-பணக்காரச் சிக்கல் முதலியவற்றைச் சுற்றியே இருக்கும். (ஹீரோயிசத்தைக் கொண்டாடும் அக்மார்க் கமர்ஷியம் கதைகளிலுமே கூட அப்படித்தான் அமைகிறது) ஆனால் மேற்கத்திய திரைப்படங்களில் சிக்கல் அகம் சார்ந்ததாக அமையும். இரு மனிதர்களின் உள்ளார்ந்த பிரச்சினைகளை அலசும். அவற்றில் புறக் காரணிகளும், பொருளாதாரச் சிக்கல்களும் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

அப்படிப்பட்ட ஒரு படைப்பாக வந்திருக்கும் இந்தியப் படம் ஓகே கண்மணி. மிக முக்கியமான காலப் பதிவாகக் கவனிக்க வேண்டியது. Watershed moment in Indian cinema! இப்படியான படங்கள் கலாச்சாரச் சீரழிவை உருவாக்குவதாக சிலர் பொங்கலாம். எங்களுக்குப் பக்கத்தில் ஒரு காரின் எஞ்சின் படம் முடியும் வரைக்கும் ஓடியது. கண்ணாடியை ஏற்றிவிட்டு ஃபுல் ஏசியில் படம் பார்த்தது ஒரு ஜோடி. கார் வேறு அவ்வப்போது அசைந்துகொண்டிருந்தது. உள்ளே இருந்த ஜோடிக்கு வயது நாற்பதுகளில் இருக்கும். இரண்டரை மணி நேர லிவிங் டுகெதெர்.

சாதாரண மனிதர்களுக்கு இது அசாதாரணமான கதையாக இருக்கலாம். சில அசாதாரணமான மனிதர்களுக்கு இது சாதாரணமான கதையாக இருக்கும். அசாதாரணமான கதைகளையும், அசாத்தியங்களையும் கூறுவதாலேயே சினிமா சினிமாவாக இருக்கிறது. அதனாலேயே சினிமாவுக்கான கவர்ச்சி மாறாமல் இருக்கிறது.

மாறிவரும் மூன்று தலைமுறையினரின் கதை. மெளன ராகம், அலைபாயுதே & ஓகே கண்மணி.. ஆனால் மாறாத ஒரே விஷயம் இயக்குனருக்கு மலையாள கதாநாயகிகள் மீதுள்ள மோகம்..  அருக்காணி மேடம் இதெல்லாம் என்னன்னு கேளுங்க.. அதை விட்டுட்டு...

Thursday, April 09, 2015

ஜெயகாந்தனின் போட்டோ

நாங்கள் கல்லூரி இறுதியாண்டு பயின்ற போது ‘தமிழ் மன்றம்’ ஒருங்கிணைத்த இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில் தமிழில் எழுதப்பட்ட பொறியியல் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டோம். நானும் இன்னொரு நண்பனும் அதன் எடிட்டராகச் செயல்பட்டோம். (சிலர் “முன்னுறை’, “முடிவுறை” என்றெல்லாம் எழுதிக் கொடுத்திருந்தார்கள்). கவியரங்கம், பட்டிமன்றம் என பலதரப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின. 

அந்த விழாவில் ஜெயகாந்தன் பங்குபெற்றார்.. வேறு ஏதாவது கல்லூரிக்கு அழைத்திருந்தால் சென்றிருப்பாரா தெரியவில்லை. எங்கள் கல்லூரியில் அவரது மகள் படித்த காரணத்தால் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்வில் ஜெயகாந்தன் பெரிய மாற்றங்களை உண்டாக்கியவரில்லை. எனினும் அவரது காத்திரமான படைப்புகள் சிலவற்றைக் கடந்து வந்திருந்த காலம். மனிதர் கர்வமும், கம்பீரமும் கலந்து செய்த கலவையென்று யாவரும் நம்பினார்கள். பட்டிமன்றத்தில் விவாதம் செய்ய வந்திருந்த ஒரு பேச்சாளர், “நாங்கள் கல்லூரியில் படித்த போது அவர் தீவிரமான எழுத்தாளர். அவரை நெருங்கவே பயப்படுவோம்” என தனியாக பேசுகையில் குறிப்பிட்டார்.

வழக்கம் போல உக்கிரமான உரையொன்றை வழங்கினார் ஜே.கே. பின்னர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மாணவர்களோடு நின்று ஆடிட்டோரியம் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். (பல காலமாக அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்) பின்னர் சுஜாதா மறைந்த போது நாரத கான சபாவில் நடந்த நினைவுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச வந்திருந்தார். அதில் “நானும் அவரும் ஒரே நேரத்தில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருந்தோம். நான் இருக்கேன். அவர் போய்ட்டார்” என்றார்.

இந்த இரு நிகழ்வுகளைத் தவிர்த்து அவரைச் சந்தித்ததில்லை. சந்திக்கவும் முயன்றதில்லை. அணுக முடியாத ஆளுமையாக கட்டமைக்கப்பட்ட ஜெயகாந்தனின் பிம்பத்தை அதற்குக் காரணம் காட்டி விடலாம். ஆனால் இனி நினைத்தாலும் அணுக முடியாது. ஜே.கே மரணித்து விட்டார்.

1999 ஆம் வரும் கோவையில் எடுத்த அந்த போட்டோவை தீவிரமாகத் தேட வேண்டும்.

Tuesday, April 07, 2015

அப்படி என்ன சொல்லிட்டார் வா.மு.கோமு

இது இரவல் காதலி நாவல் குறித்து எழுத்தாளர் வா.மு.கோமு 2014 ஃஃபிப்ரவரியில் தனது ஃபேஸ்புக்கில் எழுதியது. வரலாறு முக்கியம் என்ற காரணத்திற்காக இங்கே மீண்டும் பதியப்படுகிறது

//”இரவல் காதலி” செல்லமுத்து குப்புசாமியின் நாவலை மூன்றுமணி நேரத்தில் வாசித்து முடித்து விட்டேன். சாப்ட்வேர் கம்பெனியில் பணிசெய்பவர்களுக்கு என்னமாதிரியான வேலைகள் உள்ளன என்று என் சிற்றறிவுக்கு எட்டாமல் முதன்முதலாக வாசித்திருக்கிறேன். நாவலில் ஒரு குடும்பப் பெண்ணோடு நாயகன் உறவு வைத்துக் கொள்கிறான்! அட நல்லா இருக்கே! அங்கியும் அப்புடித்தானா? எல்லாப்பக்கமும் அதே சமாச்சாரம் தான். தொழிலும் கலாச்சாரமுமே மாறுபடுகிறது! நாலுமணி நேரம் கட்டிக்கொள்வதற்கு பத்தாயிரம் ரூவாயில் பட்டுப்புடவை எடுத்துக் கட்டிக் கொள்கிறார்கள்! இங்கே சந்தக்கடை புடவை எடுத்துக் கட்டிக் கொள்கிறார்கள்! உன்னை மொதவாட்டி பாத்தப்ப கட்டியிருந்தன்ல மஞ்சக்கலரு ஜிங்குச்சா புடவை! அது கிழிஞ்சிடுச்சு! அதே மாதிரி எடுத்துக் குடு! பெண் பெண்ணாகவே இருக்கிறாள் எல்லா இடங்களிலும்! நாவலில் காதலும் இருக்கிறது! அது நாசுக்காகவும் இருந்தது! எல்லா நாவல்களைப் போலவும், எல்லா சினிமாப்படங்களைப் போலவும் திருப்தியாய் சுபமாய் நாவல் முடியவில்லை! அதைத்தான் முன்னுரையில் செல்லமுத்து குப்புசாமி குறிப்பிடுகிறார்.

“இதில் காமம் இருக்கிறது. தனிமையை காமம் தின்பதும், காமத்தை காதல் வெல்வதும், காதலைக் காமம் வெல்வதும், இறுதியில் இரண்டையும் எதார்த்தம் வெல்வதுமான கதை இது!”
முதல் அத்தியாயம் படிக்கையில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். போகப்போக நாவல் சூடுபிடித்துக் கொண்டது! வாழ்த்துக்கள் ஆசிரியரே!//

குருத்தோலை ஞாயிறு

குறிப்பாக நான் இலக்கியக் கூட்டங்கள் எதற்கும் செல்வதில்லை. இதில் பெருமையோ, ஆணவமோ இல்லையென்ற போதிலும் முடிவதில்லை. எழுதுவதற்கும், வாசிப்பதற்குமே நிறைய விஷயங்களை சமரசம் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் கூட்டங்களுக்குச் செல்வது கொஞ்சம் சிக்கலான காரியமே.. இது போன்ற கூட்டங்களில் நண்பர்களைச் சந்திக்கவும், சுவாரசியமான கதைகள் பேசவும் சந்தர்ப்பம் ஏற்படும்.. ”ஓ.. நீங்கதானா அது?” என கேட்டுக் கொள்ளலாம்.

அப்படி இரண்டு கூட்டங்களை இரண்டு ஞாயிறுகளில் கடந்து வந்தேன். முதலாவது மார்ச் 26 ஆம் தேதி கோவையில் நடந்தது. கோவை இலக்கிய அமைப்பினர் மாதந்தோறும் கூடி கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று இந்தக் கூட்டத்தை நடத்துகிறார்கள். ஒரு மாதம் முன்னதாகவே சொல்லியிருந்தார்கள். கனவு சுப்ரபாரதிமணியன், “உங்க கொட்டு மொழக்கு நாவலைப் பத்தி நான் பேசப் போறேன்.. நீங்க கட்டாயம் வாங்க” என்று சொல்லியிருந்தார்.

கோவை எக்ஸ்பிரஸ் வடகோவைக்கும், ரயில் நிலையத்திற்கும் இடையில் அரை மணி நேரம் நின்றது. யாருக்காவது போன செய்யத் தோன்றியது. இரா.முருகவேள் நம்பருக்கு கை அனிச்சையாகப் போனது. “உங்க ஊருக்குத்தான் வந்துக்கிட்டு இருக்கேன்...” என்றேன். “நண்பா.. நான் சென்னையில் இருந்து வந்துக்கிட்டு இருக்கேன்.. ஸ்டேஷனுக்கு முன்னால டிரெயின் நிக்குது” என்றார்.

க்க்க்கூ என ரயில் ஊதிய சத்தம் நேரிலும் கேட்டது.  மூன்று பெட்டி தள்ளி போனிலும் கேட்டது. முருகவேள் இடதுசாரி சிந்தனையுடைய வழக்கறிஞர். பரதேசி படத்தில் மூலக்கதையான எரியும் பனிக்காடு நாவலை தமிழாக்கம் செய்தவர். அதே போல ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற புத்தகத்தையும் மொழி பெயர்த்தவர். அதையெல்லாம் கடந்து ‘மிளிர் கல்’ என்ற அருமையான நாவலை எழுதியிருக்கிறார். திருநெல்வேலி மனோன்மனியம் பல்கலைக் கழகத்தில் நேரில் சந்தித்த போது பரிட்சயம்.

சென்னையில் ஒரு கூட்டத்துக்குச் சென்று வருவதாகச் சொன்னார். என்ன அமைப்பு என்ற போது ’கலகம்’ என்றார். கழகமா, கலகமா தெரியவில்லை. தெரிந்து மட்டும் என்னவாகப் போகிறது.. கொம்பனுக்கு பொண்ணுக் கொடுத்த ராஜ்கிரணைப் போல இந்த மாதிரி இடதுசாரிகளுக்கு பெண் கொடுப்பவர்களை வெகுவாக எச்சரிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். வழக்கமாக கோவை இலக்கிய அமைப்பின் கூட்டங்களுக்கு வருவேன் என்றும், இன்று களைப்பாக இருப்பதாகவும் சொன்னார்.

பொதுவாக இலக்கியக் கூட்டங்களில் .. இந்தச் சொல்லே ஒரு நகைமுரண் என்பேன்... அதற்கு ஏன் இலக்கியக் கூட்டம் எனப் பெயர் வைக்கிறார்களோ தெரியவில்லை. என்ன கூட்டம் வருகிறது?? என்னதான் சமோசாவும், மசாலா டீ வாங்கிக் கொடுத்தாலும் ஆள் சேர்ப்பது கடினம். அப்படியும் அந்த நண்பர்கள் 52 மாதங்களாக இந்த நிகழ்வை நடத்தி வருகிறார்கள். மனதுக்கு இதமாக இருந்தது.

நிகழ்வு நடந்த அந்த உயர் நிலைப்பள்ளி அவினாசி ரோடு முடிந்து ரவுண்டானாவில் இருந்து மேற்கே இறங்கியதும் வலது பக்கத்தில் வருகிறது. அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி.. ஆனால் வெறும் அறுபது பேர் மட்டும் படிக்கிறார்களாம். தமிழ் மீடியம் பள்ளிகளின் நிகழ்காலச் சாட்சியாக நின்றது அது. இடம் இருப்பது நகரின் மையத்தில். இடத்தை விற்றால் ஆயிரம் கோடிக்குப் போகும் என நினைக்கிறேன். இன்னும் ஐந்தாண்டுகள் இந்தப் பள்ளி இதே வடிவத்தில் நீடித்தால் ஆச்சரியம்.

தமிழ் மொழியில் எழுதுவது கூட அப்படித்தான் என நினைக்க வேண்டியிருக்கிறது. எதோ ஒரு ஆர்வத்தில் செய்கிறோம்.. எனினும் இந்த மாதிரியான சில ஊக்குவிப்பு முயற்சிகளே தொடர்ந்து செயலாற்றத் தூண்டுகின்றன.

கொட்டு மொழக்கு நாவலை சுரேஷ்வரன் வெளியிடன் நித்திலன் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு சுப்ரபாரதிமணியன் நாவலைக் குறித்து அறிமுக உரையாற்றினார். அவர் அச்சில் வந்த எனது மூன்று நாவல்களைப் பற்றியுமே குறிப்பிட்டுப் பேசினார். முதல் நாவலான இரவல் காதலியில் சென்னையில் ஐ.டி துறையின் மொழியைப் பேசியவர் இரண்டாவது நாவலான குருத்தோலையில் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அமராவதிக் கரைக்கு அருகேயுள்ள கிராமத்திற்கு இடம்மாறி அங்கிருக்கும் மொழியைத் துல்லியமாகப் பேசியது குறித்து ஆச்சரியப்பட்டார். “நான் கூட அவர் கோஸ்ட் ரைட்டர் வெச்சு எழுதிட்டார்னு சந்தேகப்பட்டேன்” என்றார்.

மூன்றாவது நாவலான கொட்டு மொழக்கு பற்றிக் குறிப்பிடுகையில் சென்னையின் ஐடி வாழ்க்கையையும், கிராமிய வாழ்வையும் ஒரே கதையில் வெவ்வேறு தளங்களில் பேசுவதைக் விவரித்தார். மகிழ்வாக இருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஷங்கர நாராயணன், எம்.ஜி.சுரேஷ் ஆகியோர் சென்னையில் இருந்து வந்திருந்தனர். அவர்களைச் சந்திப்பது முதன்முறை. ஆட்டம் எழுதிய சு.வேணுகோபால் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. ஓவியர் ஜீவா, அம்சப்ரியா, அவைநாயகம், மயூரா ரத்தினசாமி, அனாமிகா, ப.தியாகு, யாழி, சோழநிலா, சதீஷ் சங்கவி, ஸ்ரீபதி பத்மநாபா உள்ளிட்ட பலரோடும் உரையாட முடிந்தது.

அடுத்த முறை கோவை சென்றால் கண்டிப்பாக ஒருவரைச் சந்தித்தே தீர வேண்டும்... அவர் கின்னஸில் இடம் பெற்ற ராஜேஷ் குமார்.

Saturday, March 28, 2015

கோவையில் கொட்டு மொழக்கு

நாளை கோவை செல்கிறேன்.


இந்த மாதிரியான நிகழ்வுகளில் புதிய நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு உண்டாகும் என்பதுதான் ஆகப் பெரிய சந்தோசம். இதற்காக சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். 

கொட்டு மொழக்கு நாவல் வாசித்த பல பேருக்கு மனதுக்கு நெருக்கமாக இருப்பதைக் காண முடிகிறது. தேவனூர்புதூர் அன்புச்செல்வன் ஃபேஸ்புக்கில் ‘என்னைத் தட்டி நெகிழ்த்திய கொட்டு மொழக்கு’ என அருமையான விமர்சனம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

//என்னைத் தட்டிநெகிழ்த்திய கொட்டுமுழக்கு !!
Ramanathan Palanisamy அவர்களின் பரிந்துரையின்படி 
 "கொட்டுமுழக்கு" VPP யில் வாங்கியிருந்தேன். இதைப்பற்றி நான் நம் மண்ணில் இருந்தபோதே எழுதியிருக்கவேண்டும்...நேரம் கிடைக்கவில்லை. குழந்தைகள் இருவரும் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது கிடைத்த இடைவெளிகளில் படித்து முடித்திருந்தேன். அந்த நாட்களில் நான் "கொட்டுமுழக்கு" நாயகன் "ராசு" வாகவே மாறிப்போயிருந்தேன். கிட்டத்தட்ட எண்பது சதவீதக்கதை என்னைப்பற்றியே இருந்தது. என் இருபத்து ஐந்தாம் வயதுவரை நான் இறந்தவரின் உடலத்தை அருகில் சென்று கண்டதில்லை. ஊருக்குள் வாழ்ந்த பெரியவர் யாரேனும் இறந்துபோனால் "ரவ்வுப் பொணம்" என்று சொல்லி ஓரிருநாள் வைத்திருந்து எல்லாச்சீரும் செய்து, வாத்தியம் போட்டு, தேர்கட்டி எடுப்பார்கள். எளவுக்கு சென்று ஒப்பாரி பாடியழுது தன் மனக்குமுறல்களை எல்லாம் சவத்தின்முன் கொட்டிவிட்டு வந்து அடித்துப்போட்டவர்கள் போல தூங்கியெழும் என் அம்மாவும், ஆத்தாவுமே இந்தக் கதையின் சாட்சிகளாய் நினைக்கிறேன்.

பத்து-இருபது ஆண்டுகளுக்குமுன் என நினைக்கிறேன். ஆம்புலன்சில் சவம் எடுக்கும் முறை வந்ததால் பாதிக்கப்படும் "தேர்கட்டும் தொழிலாளி யின்" வாழ்வியல் அவலத்தைப் படம்பிடிக்கும் "அன்னப்பட்சித் தேர்" என்ற சிறுகதை விகடன் அல்லது இந்தியா டுடே வில் (நினைவில் இல்லை) வெளிவந்திருந்தது. அந்தக் கதையை என் ஆத்தாவுக்குப் படித்துக்காட்டியிருக்கிறேன். அப்போது என் ஆத்தா வீட்டின் செவுத்து ஓரமாய் நீளவாக்கில்க் கட்டித் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு மூங்கில்களைக்காட்டி "இது நாஞ்செத்த பெறகு என்னைய தூக்கிட்டுப்போகறக்கு என்ர காசுல நானே வாங்கிவெச்சிருக்கிற மூங்கலுக" சொன்னதும், அதன்பிறகு அந்தவீட்டைக்கூட விற்றுவிட்டு வேறிடம் போனதும், மாளிகையில் பிறந்த ஐந்தரையடி பொம்பளை ஒன்னரையடியாகக் குறுகி மாடுகட்டும் சாளையில் உயிர் விட்டபோது விரைவில் காடுசேர்த்துவிட ஆம்புலன்சை அழைத்திருந்தார்கள். அவர் வைத்திருந்த ஆயிரம் பொருட்களோடு அந்த இரண்டு மூங்கில்களையும் விற்றிருப்பார்களோ என்று என்னைக் கேட்பதுபோல் இருந்தது ஆம்புலன்ஸில் கிடத்தப்பட்ட என் ஆத்தாவின் சவம். ஆக, அந்தக் கதையின் தாக்கத்திலிருந்தே இன்னும் நான் மீளவில்லை. அதற்குள் "கொட்டுமுழக்கு" என்ற நாவலின் தாக்கத்துக்கு ஆளாயிருக்கிறேன்.

முதன்முதலில் என் அய்யனின் இறந்தவுடலைக் காணப்போகிறோம் என்ற பயத்தில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் வேண்டுமென்றே தாமதம் செய்து வீடு வந்து சேர்ந்தபோது என் அய்யனை "சீக்கு ஒடம்பென்று" சீக்கிரமாகவே எடுத்திருந்தார்கள். என் அப்பிச்சி இறக்கும் தருவாய்... என் அம்மத்தா சொல்கிறார்...இன்னைக்கி அப்பிச்சிக்கி நம்ப நல்லா இல்ல..என்று தான் கட்டியிருந்த சிவப்புப் புட்டாப் போட்ட சீலையின் தலைப்பை வாயில் வைத்துக்கொண்டு அழுவதைக் காணச் சகிக்காமல் பயந்த நான் நண்பன் ஒருவன் வீட்டுக்குச்சென்று இருந்துவிட்டு மறுநாள்தான் என் அப்பிச்சி இறந்த எளவுக்குப் போயிருந்தேன். ஊருக்குள்ளே நோம்பி சாட்டியிருந்ததால், சீர் செனத்தி எதுவும் செய்யாமல், கொட்டுமொழக்கு ங்கூட போடாமல் இராத்திரியே எடுத்துவிட்டதாகவும் சொன்னார்கள். நெய் அரப்பும், பச்சைப்பந்தலும், பின்னப்பூவும், நெய்ப்பந்தமும் இதுநாள் வரையிலும் எனக்கு வெறும் கேள்வியறிவாகவே போய்விட்டது என்ற நெருடலில் இருந்து நான் மீளவே இல்லை.

ராசுவின் அம்மாயியின் கால்களை மாதாரிச்சிகள் கட்டி அழுததை படைப்பாளர் விவரிக்கும்போது நான் "ராசு" வாகவே மாறிப்போயிருந்தேன். என் அம்மத்தாவின் காலைக்கட்டி அவர்கள் அழுதபோது எனக்கேற்பட்ட எண்ணங்கள்தான் அவர் எழுத்திலும் மீண்டு எதிரொலித்ததாகவே எண்ணுகிறேன். இடையிடையே ராசு தன் எழுத்தாள நண்பருடன் அலைபேசியில் பேசுவது எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. அவர் போன் பண்ணுகிறார் என்ற வரியை வாசிக்கும்போதே "எளவூட்டில் தென்ன இப்பிடிப் பேச்சு வேண்டிக்கிடக்கிறது?? என்று எரிச்சல் வந்தது..." மற்றபடி எல்லா மாதாரிகளோடும், சீர் செஞ்ச பெரிய பையனோடும், எளவு காண வந்த பண்ணாடிகளோடும், கோடிபோட்ட சீர்க்காரர்களோடும், ஒரு ரெண்டுநாள் இருந்துபோட்டுத்தான் ஊர்வந்து சேர்ந்தேன்... நீங்களும் வாசிச்சுப்பாருங்க...
(ஒரு சிறு தகவல்: பொள்ளாச்சிப் பகுதிகளில் "கொட்டுமுழக்கு" என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் "வாத்தியம் போடுவது" என்றே சொல்வார்கள். ஆனால் உடுமலைக்கு அருகில் உள்ள ஊர்களில் மற்றும் கிழக்கில், "கொட்டுமுழக்கு" என்று சொல் வழக்கம் இருக்கிறது.)//

Thursday, March 12, 2015

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

சேமிப்பினால் அல்ல ….செலவழிப்பதால் பொருளாதாரம் வளர்கிறது எனவும், அதுவே சுபிட்சத்துக்கான வழி எனவும் மேற்கத்திய சித்தாந்தம் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் செலவு செய்வதால் மற்றவர்களுக்குத்தான் வளர்ச்சியும், சுபிட்சமும் ஏற்படுமேயொழிய நமக்கல்ல. நமக்கு சேமிப்புதான் சேஃப்டி.

நோக்கம் பணம் தொடர்பான மனநிலை குறித்தும், அதைக் கையாள்வது தொடர்பான வழிமுறை குறித்தும் பேசுவதேயாகும். எனினும் வழிமுறைகளை விட மனநிலை பற்றியே அதிகம் பேசியிருக்கிறோம். மனநிலையில் மாற்றம் உண்டானால் வழிமுறை தன்னால் கிடைத்து விடும். மனமிருந்தால் மார்க்கபந்து என்று மகல்..மன்னிக்கவும்.. கமல் கூடச் சொல்லியிருக்கிறார்..

கமல் என்று டைப் செய்யப் போனால் மகல் என்று அனிச்சையாக கை போகிறது. ’மகள்’ அத்தனை தூரம் மனதுக்குள் ஊறிப் போய்க் கிடக்கிறது. மகள்களைப் பற்றிய திட்டம் ஒன்றினைப் பற்றித்தான் பேசப் போகிறோம்.

சில படைப்பாளிகள் தம்மை எழுத்தாளர்களாகவோ, இலக்கியவாதிகளாகவோ நினைக்காமல் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதாக நினைத்துக் கொண்டு விளையாட்டாக ஆரம்பிக்கிற விஷயம் இறுதியில் மிகப் பெரிய இலக்கியங்களாக உருவெடுத்து நிற்பதுண்டு. சச்சின் டெண்டுல்கர் கூட அப்படித்தான் கிரிக்கெட் ஆடியிருப்பார். பதினாறு வயதில் பால் வடிகிற முகத்தை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் மண்ணில் களமிறங்கிய போது  யாருமே முறியடிக்க முடியாத உலக சாதனைகளைப் படைக்கப் போவதாக அவர் நினைத்திருக்க மாட்டார். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் அன்றைக்கு நல்லபடியாக விளையாடினால் போதுமென்ற முனைப்போடுதான் ஆடியிருப்பார். முப்பதாயிரம் சர்வதேச ஓட்டங்களை எடுத்த ஒரே ஆட்டக்காரர் என்ற பெயரோடு ஓய்வு பெறுவோம் என எப்போதும் கற்பானை செய்திருக்க மாட்டார்.

கிட்டத்தட்ட சச்சின் வயதை ஒத்த, அவரைப் போலவே கவனம் பெற்ற இன்னொரு மும்பை ஆட்டக்காரர் வினோத் காம்ளி. இருவரும் பள்ளியில் 664 ரன் பார்ட்னர்ஷிப் எல்லாம் போட்டு கலக்கியவர்கள். தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் இரட்டைச் சதம்… தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸில் சதம் முதலிய பரபரப்புகளை உண்டாக்கியவராக இருந்தாலும், வரலாறு டெண்டுல்கரைப் போல காம்ளியை நினைவில் வைத்திருக்கவில்லை. அதற்குக் காரணம் கன்ஸிஸ்டன்ஸி.. (இந்த வார்த்தையைக் கேட்கும் போது தொலைக்காட்சியில்  வரும் சமையல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல)

தற்காலிகப் புகழினால் (மட்டும்) வரலாறு உருவாவதில்லை. நீண்ட கால ஒழுக்கமும், இடைவிடாத பயிற்சியும் முக்கியம். எந்தத் துறையில் வெற்றி பெறவும் இந்த மனநிலையே தாரக மந்திரம் - குறிப்பாக நிதி மேலாண்மையில்.

நீண்ட காலச் சேமிப்பினை, முதலீட்டினை விளையாட்டுப் போலச் செய்து முடிக்க வேண்டும். நிதி மேலாண்மையை சுமையாகக் கருதாமல் திட்டமிட்டுச் செய்தால் சுலபமாகத் தெரியும். அதிலும் குறிப்பாக மகளைப் பெற்ற அப்பாக்கள் குழந்தை பிறந்தவுடனேயே சேமிக்கத் துவங்கி விடுகிறார்கள். ‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் பணம் பகட்டில் சேர்ந்ததில்லை’ என நண்பர் ஒருவர் கூறுவார். அப்படியாகப் பட்ட \பெண் குழந்தைகளுக்கான திட்டம் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’.

மத்திய அரசின் இத்திட்டம் இந்தியில் சுகன்யா சம்ரிதி திட்டம் என்ற பெயரில் அறியப்படுகிறது. அருகிலுள்ள அஞ்சல் நிலையத்தை அணுகினால் எல்லா விவரத்தையும் தந்து விடுவார்கள். (ஆம்.. இது அஞ்சலகச் சேமிப்புத் திட்டம்தான்.)

இதில் பத்து வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகளின் பெற்றோர் கணக்குத் துவக்கலாம். ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஒன்றரை இலட்சம் வரையிலும் சேமிக்கலாம். குழந்தை பத்து வயதுக்குள் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் கணக்கினைத் துவக்கலாம். பதினான்கு வருடம் பணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு தேவையில்லை. முதிர்வுத் தொகையை 21 ஆண்டுகளில் எடுத்துக் கொள்ளலாம். அப்போது கல்விச் செலவுக்கோ, திருமணத்திற்கோ பயன்படும்.

உண்மையில் 21 வருடம் வரைக்கும் காத்திருக்க வேண்டியதில்லை. பாதித் தொகையை 18 வருடத்தில் கூட எடுத்துக் கொள்ளலாம். மற்ற திட்டங்களை விடக் கூடுதலான  வட்டி (9.1%) தருகிறார்கள். உதாரணத்துக்கு புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் பெயரில் கணக்குத் துவங்குவதாகக் கருதுவோம். மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்துவதாக இருந்தால் 14 ஆண்டுகளில் ரூ 1.68 இலட்சம் செலுத்துவோம். 21 ஆண்டுகள் நிறைவடையும் போது சுமார் ஆறரை இலட்ச ரூபாய் கிடைக்கும்.

”இப்ப ஆறரை இலட்சம் பெரிய தொகையாக இருக்கலாம்.. 21 வருடம் கழித்து அதற்கு என்ன மதிப்பிருக்கும்?” என நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக இப்பொது ஆறரை இலட்சத்திற்கு ஒரு கார் வாங்க முடிந்தால் அதே தொகைக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு அதே காரை வாங்க முடியாமல் போகலாம். ஆனால் எதையாவது வாங்க முடியும். ஒன்றுமே இல்லாமல் போவதை விட ஆறரை இலட்சம் பெரிதல்லவா!

ஆகவே செல்வ மகள் சேமிப்புத் திட்டம் எளிய மக்களுக்கான திட்டம் மட்டுமல்ல. எல்லா மக்களுக்கான திட்டமும் ஆகும். அது பெண் குழந்தைகளின் பெயரில் சேமிக்கும் ஒழுக்கத்தை ஊக்குவிக்கிறது. மாதம் ஆயிர ரூபாய் என்பது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் ‘விளையாட்டுப் போல்’ சேமிக்கக் கூடிய தொகை. இந்த ஆயிரத்தை இரண்டாயிரமாக, மூன்றாயிரமாக, ஐந்தாயிரமாக ஆக்குவதும் நமக்குச் சாத்தியம்.


விளையாட்டுப் போலச் செய்யும் செயல்களே டெண்டுகரையும், காம்ளியையும் வேறுபடுத்துகின்றன. அவையே நல்ல தகப்பனையும் ஊதாரியான தகப்பனையும் வேறுபடுத்துகின்றன.

Friday, February 27, 2015

நான் ஏன் புலியூர் முருகேசன் பக்கம் நிற்கிறேன்?

புலியூர் முருகேசன் மீதான தாக்குதலைக் கண்டிப்போம் என்ற பதிவிற்கு என் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அதில் அநேகம் பேர் கொங்கு மக்கள்.

கொங்கு என்றாலே குறிப்பிட்ட ஒரு சாதியை மட்டும் குறிப்பிடுவதாக இன்றைக்கு மாறியிருக்கிறது. கொங்கு வேளாளர் எனும் கவுண்டர் சமுதாயத்தைக் குறிப்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். நான் கேள்விப்பட்ட மட்டிலும் பதினெட்டு கொங்குச் சாதிகள் உள்ளன. (புலவர் ராசுவின் ஆய்வுகளில் நாற்பத்திச் சொச்சம் சாதியினர் கொங்கு நாட்டில் குடியேறிய வரலாற்றுத் தரவுகளைக் காண்கிறோம்)

கொங்கு என்பது பிராந்தியம். கொங்குச் சீமை கவுண்டர்களுக்கு மட்டுமே உரியதல்ல என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் இருப்பவர்களுக்கு அது தெரிவதில்லை. கொங்குத் தமிழில் எவன் பேசினாலும் அவனைக் கவுண்டனாக முத்திரை குத்தி விடுகிறார்கள். பேசினால் மட்டுமல்ல.. எழுதினாலும் அப்படித்தான்... கொங்கு மொழியில் எழுதுகிற அத்தனை பேர் மீதும் குத்துவதற்கான ஜாதி முத்திரையச் சுமந்தவாறு திரிகிற இலக்கிய உலகின் self appointed தாசில்தாரர்கள் மற்றவர்கள் சாதி வெறியோடு அலைவதாக பொது வெளியில் கூவுகிறார்கள். இந்த தாசில்தார்களுக்கு ஆர்.ஷண்முக சுந்தரம், பெருமாள் முருகன், வா.மு.கோமு, வா.மணிகண்டன், என்.ஸ்ரீராம், க.சீ.சிவக்குமார், தேவிபாரதி, செல்லமுத்து குப்புசாமி என அத்தனை பேரும் ஒரே ஜாதி... கவுண்ட ஜாதி... அப்படி நினைத்திருந்தால் ஸாரி தாசில்தார்..... இந்தப் பட்டியிலில் இருக்கும் சிலர் தங்களுக்குள் நெருக்கமாகப் பழகினாலும் கூட ஒருவரது ஜாதி இன்னவென்று இன்னொருவருக்குத் தெரியாது.. தெரிந்து கொள்ளவும் முயற்சித்ததில்லை. அது தேவையுமில்லை.

புலியூர் முருகேசன் விஷயத்தில் எனது முந்தைய பதிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த அத்தனை பேரும் கொங்குப் பகுதி மக்கள் - அதில் பெரும்பாலனவர்கள் கொங்கு வேளாளர்களாக இருக்க வேண்டும்... (அப்படி இல்லாத சிலரும் உண்டு) இன்னும் சில பேர் வருத்தமடைந்திருக்கலாம்.. பொது வெளியில் எதற்காகப் பேச வேண்டும் என நினைத்து அவர்கள் அமைதியாக இருக்கலாம். முதலில் முருகேசன் தாக்கப்பட்டதை நினைத்து வருந்தியவர்கள் பிறகு கதையை வாசித்த பிறகு மனதை மாற்றிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

சில கமெண்டுகள்:
’நீங்களும் அடி வாங்கி பெரிய மனுஷன் ஆகணும்னு ஆசை படுறீங்க போல இருக்கு..?? ஒரு ஜாதியை குறிப்பிட்டு செக்ஸ் கதை எழுதரவநேல்லாம் படைப்பாளியா..??? நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் காட்சி நினைவுக்கு வருதுங்க சார்..”

”இப்படி எல்லாம் எழுத தொன்றியிருக்குனா (இதையும் சப்போர்ட் பண்ண தொனியிருக்குன்னா) நீங்கலாம் எங்க பிறந்திருப்பீங்க? எங்க வளர்ந்திருப்பீங்க,, பிரமிப்பா இருக்கு சார்..”

“இதுக்குப்பேர்தான் கருத்துச் சுதந்திரமா?பெருமாள் முருகன் கதை வேறு இது வேறு”

“இது உள் நோக்கத்தோடு ஒரு இனத்தின் ஒரு ஊரின் ஒரு பிரிவு மக்களை கேவலப்படுத்துவதர்க்காக எழுதப்பட்டது. பெருமாள் முருகன் கதையுடன் இதை ஒப்பிடுவது சரியாகத் தெரியவில்லை.”

”அடுத்த சாதியை பற்றி இழிவா எழுதுறதுதான் கருத்து சுதந்திரமா?? ஏன் உங்க குடும்பத்தை பத்தி எவ்வளவு கேவலமானதாக எழுதுமுடியுமே , எழுதுங்க நாங்க அதுக்கு போராட மாட்டோம்”

“saringa ilakia vanthi... you have all the rights to write what ever your mind masturbates”

இன்னும் சில எதிர்ப்புகள்..

புலியூர் முருகேசனின் கதை வெகு காத்திரமானது. கொங்கு வேளாளர் சமூகத்தில் பெருங்குடி கூட்டத்தினரைப் பற்றிக் குறிப்பிடாமல் எழுதியிருந்தாலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். பெருங்குடி கூட்டம்(உட்பிரிவு - ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளிகள்.. திருமணம் செய்வதானால் வேற்றுக் கூட்டத்தில் பெண்ணெடுக்க வேண்டும். ஒரே கூட்டத்தில் திருமணம் செய்து கொண்டால் அண்ணன்-தங்கை கட்டிக் கொண்ட கதையாகி விடும்) என்பது கொங்கு மண்டலம் நெடுகிலும் கடவுளாகக் கருதப்பட்டும் வழிபடும் அண்ணமார் சாமிகளான பொன்னர், சங்கர் பிறந்த கூட்டம். அந்த பெருங்குடி கூட்டத்தினைப் பற்றி கதையில் எழுதியதுதான் பிரச்சினையாகிப் போனது.

புலியூர் முருகேசனுக்கு கவுண்டமார்கள் மீது காழ்ப்புணர்ச்சி இருப்பதாக நான் கருதவில்லை. அடிப்படையில் அவர் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட். அதுவும் உள்ளூரில் வசிப்பவர். எல்லா சமூகத்தினரிடமும் நெருக்கமாகப் பழக வேண்டிய நிலையில் இருப்பவர். தீவிர இலக்கியம் படைக்கிற வேகத்தில் உள்ளதை உள்ளபடியே எழுதித் தொலைத்து விட்டால் போல. திருநங்கையாகப் பிறக்க நேர்ந்த ஒருவரின் உண்மையான கதையைத்தான் அவர் எழுதியிருப்பதாக நண்பர் ஒருவர் சொல்கிறார். சிறு பத்திரிக்கைகளில் எழுதும் போது எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அதிகபட்சம் நூறு பேர் வாசிப்பார்கள். மீறினால் ஆயிரம் பேர். அதுவும் இம்மாதிரியான படைப்புகளை அதிகமாக வாசித்துக் கடந்து வந்தவர்களாக இருப்பார்கள். அதனால் பொது மக்களின் ரியாக்‌ஷன் எப்படியிருக்கும் என எழுதுகிறவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

இப்போது தெரிந்திருக்கும். கதையில் குறிப்பிட்ட சில பெயர்கள் உண்மையாகவும் இருக்கலாம். தனிப்பட்ட முறையில் நேரடியாகவே அவர்களைப் புண்படுத்துவதோடு, பெருங்குடி கூட்டத்தினரையும் சினம் கொள்ளச் செய்திருக்கலாம். உள்ளூர் ஆட்கள் வந்து பேசியிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில வார்த்தைகளை மட்டும் அடித்து விட்டு மீதமிருக்கும் பிரதிகளை விற்பதாகவும், அடுத்த பதிப்பில் முற்றிலுமாக நீக்கி விடுவதகாவும் முருகேசன் கூறியிருக்கிறார். (இது வரைக்கும் அதிகபட்சம் நூறு பிரதிகள் விற்றிருக்குமா தெரியாது) பிரச்சினை அத்தோடு முடிந்தது.

ஆனால் பிரச்சினைகள் முடிவதை சிலர் விரும்புவதேயில்லை. அவரைத் தேடி வந்த அரசியல் ரவுடிகள் தாக்கியிருக்கிறார்கள். அதுதான் பிரச்சினையே இப்போது. தெற்குச் சீமை போல, வடக்கு மாவட்டங்களைப் போல மேற்கு மாவட்டங்களில் சாதிச் சண்டை பெரிதாக நடந்தததில்லை. ஓரிரு சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஒடுக்கு முறைகள் இருக்கலாம். தனி நபர் சச்சரவுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பெரிய பிரச்சினைகள் வந்ததில்லை.

புலியூர் முருகேசன் விவகாரம் இயல்பாக அடங்கியிருக்க வேண்டிய ஒன்று. அதைத் தூண்டுவதில் யாருக்கோ ஆதாயம் இருக்கிறது போல. அதுதான் பிரச்சினை. அதைத்தான் கண்டிக்க வேண்டியிருக்கிறது. புலியூர் முருகேசன் மோசமான அருவருப்பான எழுத்தையே எழுதியிருக்கட்டும். அதற்காக கட்டையைத் தூக்கும் அதிகாரத்தை யார் தந்தது? யார் மனதையும் புண்படுத்தாமல் எழுத்தாளனால் எழுதவே முடியாது. காயப்படுத்தாமல் எழுதினால் அது எழுத்தாகவே இருக்காது. எழுத்தாளனின் வேலையே மனிதனைத் தூங்க விடாமல் செய்வதுதான். காயப்படுத்துவதுதான் எழுத்து.

எப்படி பாதுகாப்பாக எழுதினாலும் ஓரிரு வரிகளையாவது மேற்கோள் காட்டி யாரோ ஓருவரைக் காயப்படுத்தியதாகச் சொல்ல முடியும். இப்போது, “பெருமாள் முருகன் மேட்டர் வேறு.. இது வேறு” என்கிறார்கள். திடீரென்று பெருமாள் முருகன் நல்லவர் ஆகி விட்டார். ஆக இந்த அளவுகோலை வைப்பது யார் என்றுதான் தெரியவில்லை. அதுதான் பதட்டமாக உள்ளது. இதே குறிப்பிட்ட சமுதாயத்தின் பெருமையைப் பேசும் படைப்பாக இருந்தால் கொண்டாடுவீர்கள் அல்லவா? “ஏய்.. ஓவரா புகழாதீங்க பாஸ்... இனிமே பிரிண்டுக்கு அனுப்பாதீங்க” என யாரும் சொல்வதில்லை.

புலியூர் முருகேசன் செய்தது தவறாக இருக்கட்டும். முருகேசனே பெருங்குடி கூட்டத்தில் ஒரு ஆளாக இருந்து இன்னொருவர் இப்படி எழுதியிருந்தால் என்ன செய்திருப்பார் எனபது அவருக்குத்தான் தெரியும்.. ஆனால் இந்த ‘நான் ஏன் மிகையலங்காரம் செய்து கொள்கிறேன்’ கதையை எழுதிய போது அது தவறென்று அவருக்குத் தெரிந்திருக்காது. அது நல்ல கதையென்று நினைத்து எழுதியிருக்கலாம். அதை உணர்ந்த பிறகு சரி செய்வதோ, சமரசம் செய்வதோ இயல்பு. பொன்னர்-சங்கர் தொடர் தந்தி தொலைக்காட்சியில் வந்த போது அதற்கு நடிகர் சிவகுமார் முன்னுரை வழங்குவார். அதில் ஓரு பகுதி வேட்டுவ சமூகத்தினரைப் புண்படுத்துவதாகப் போராடியதில் அவரே முன் வந்து வருத்தம் தெரிவித்தாரே! அப்படியானால் அவர் தவறு செய்து விட்டாரா என்ன? .

எழுத்தாளர்களால் பெரிய புரட்சிகளை உண்டாக்கி விட முடியுமென்று நான் நம்பவில்லை. அவனது பணிவு, சமரசம் எல்லாம் பதிப்பாளரிடமே ஆரம்பித்து விடுகிறது. அதன் நீட்சியாக சமூகத்தில் சமரசம் செய்து கொள்ளவும், சமூகத்தின் பொதுவான மதிப்பீடுகளுக்கு உட்பட்டு எழுதவும் அவன் தயங்குவதில்லை - கொஞ்சம் சிரமப்பட்டாலும் கூட. இதுதான் எதார்த்தம்.

நான் இந்த நிகழ்வினை இத்தனை தூரம் எதிர்க்கவும், முருகேசனை தார்மீக ரீதியாக ஆதரிக்கவும் அடிப்படையில் ஒரே காரணம்தான் உள்ளது. அது சுயநலம். இன்றைக்கு அவருக்கு நடப்பது நாளைக்கு நமக்கு நடக்கலாம் என்ற எச்சரிக்கை.

ஒரு பிராந்தியத்தையும், அதன் மொழி மற்றும் வாழ்க்கையும், காலத்தையும் படம் பிடிக்கும் கதைகளில் சாதியும், எள்ளலும் இல்லாமல் எழுத முடியுமா என்று தெரியவில்லை. புலியூர் முருகேசனின் கதை அப்படிப்பட்ட கதையென்று சொல்லவில்லை. ஆனால் இம்மாதிரி நிகழ்வுகள் ஆர்.ஷண்முக சுந்தரம் போட்டுக் கொடுத்த பாதையில் யாரும் நடக்காமல் செய்து விடும் என நினைக்க வருத்தமாக உள்ளது. அது பற்றியெல்லாம் கவலையில்லை... இன்னொரு பா.ம.க.வை கொங்கு நாட்டில் உருவாக்குவேன் என யாரோ நினைப்பதற்கு உடந்தையாக இருப்போம் என நிற்காதீர்கள்.

Thursday, February 26, 2015

புலியூர் முருகேசன் மீதான தாக்குதலைக் கண்டிப்போம்

ஆம்பிரம் என்ற பெயரைக் கேட்டதும் இது என்னடா பெயரென்று எனக்குத் தோன்றியது. இன்னும் சொல்லப் போனால் அவசர அவசரமாகப் படித்ததில் ஆபிரகாம் என்று படித்த்துத் தொலைத்து விட்டேன். கரூரில் இருந்து ’ஆபிரகாம் பதிப்பகம்’ என்ற பெயரில் புதுப் பதிப்பகம் என்றுதான் நினைத்தேன். பிறகு நிதானமாகப் பார்த்த போது ’ஆம்பிரம்’ புலப்பட்டது.

தாம்பரம் போல எதாவது ஒரு பெயராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். பிறகு நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது அது ஒரு முன்னொரு காலத்தில் கரூரில் ஓடிய நதியென்று சொன்னார்கள். இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு அமராவதியைக் கூட அப்படித்தான் சொல்லுவார்கள். அமராவதி அமராவதின்னு கரூர்ல ஒரு ஆறு ஓடுச்சாம் என்று…

சில மனிதர்களுக்கு நதியின் மீதான ஈடுபாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நானும் கூட அப்படிப்பட்ட கிறுக்கன் என அறிவித்துக் கொள்வதில் கூச்சமேதுமில்லை. க.சீ.சிவக்குமார் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். அவரது கதைகளில் அண்டமாநதி என்று அடிக்கடி குறிப்பிடுவார். அந்தப் பெயரில் ஒரு பிரமாண்டம் ஒளிந்திருக்கிறது. அண்டமாநதி… அண்டம் என்றால் உலகம்.. மாநதி என்றால் பேராறு.. நான் அண்டமாநதியை பிரம்மபுத்திராவுக்கும், கங்கைக்கும் நிகராக கற்பனை செய்திருந்தேன். தாராபுரம்-கரூர் சாலையில் கன்னிவாடியைக் கடக்கும் போதெல்லாம் அண்டமாநதியைத் தேடியதுண்டு. ஒரு வேளை அந்தப் பேராறு சாலையைக் கடக்காமல் அதற்கு இணையாக கிழமேற்கில் ஓடுகிறதோ என்னவோ என நினைத்துக் கொள்வேன்.

பிறகு க.சீ.சிவக்குமாரை பெங்களூரில் சந்தித்த போது இது பற்றி வினவினேன். “அதுல எப்பவாவது தண்ணி போகும்” என்றார்.

”நல்லதங்காள் ஓடை மாதிரீங்களா?”

“அய்யோ அத்தாச்சோடு இல்லீங்க.. நல்லதங்கா ஓடை பெருசல்லோ!”

நல்லதங்காள் ஓடையில் ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் ஓடும். அதையே பெரியதென்கிறார் அவர். அப்படியானால் அண்டமாநதி? அது கடந்த காலத்தின் அடையாளம். அதன் மீதான ஈர்ப்பை மனிதனால் இலகுவாக உதற முடிவதில்லை. ஆம்பிரம் கூட அப்படித்தானிருக்கும்.

ஆம்பிரம் பதிப்பகம் நண்பர் புலியூர் முருகேசன் துவங்கினார். பழகுவதற்கினிய நண்பர். பலாப் பழம் போல பார்க்கத்தான் கரடுமுரடான ஆள். மூன்று ரவுண்டுக்கு மேல் குழந்தையாக மாறிவிடும் பச்சை மனதுக்கார். அதிலும் பாடகி ஸ்வர்ணலதாவைப் பற்றிப் பேசினால் அழுது விடுவார்.

அந்த முருகேசனைத்தான் நேற்று கரூரில் காட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு அடித்திருக்கிறார்கள். காவிரிக்கு மேற்கே பிறந்து காவிரிக்குக் கிழக்கே ஒற்றை எம்.எல்.ஏ.வாக தனியரசு நடத்திக் கொண்டு ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் ‘கொங்குச் சிங்கம்’ ஒன்றின் ஆட்கள் இதில் ஈடுப்பட்டுள்ளனர் என்கிறார்கள்.

”எழுத்து என் ஜீவிதம். ஆசிரியப் பணி என் ஜீவனம்” என்று சொன்ன பெருமாள் முருகன் வழக்கு இப்போது சென்னையில் நடக்கும் சூழலில் புலியூர் சம்பவம் கிலியூட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசிய எழுத்தாளர் தேவிபாரதி கூட தனது அடுத்த புத்தகத்தில் பல திருத்தங்கள் செய்த பிறகே வெளியிட வேண்டும் என்று விசனப்பட்டார். இது மிகவும் அபாயகரமான போக்கு.

சென்னைக்கு மிக அருகில் விமர்சனத்தில் குறிப்பிட்டது  போல எழுத்தாளர்கள் தமது கதைகளில் இனி சினிமாவினைப் பின்பற்றி ‘பண்ணையார்’ ‘முனியன்’ என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். கீழ் சாதி நாயே என்று எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் குறிப்பிட்ட சாதிப் பெயரைக் கொண்டு எழுதினால் போச்சு. பண்ணையாரின் இளம் மனைவி கீழ்சாதி முனியனோடு மாட்டுக் கொட்டகையில் கள்ள உறவு கொண்டிருந்ததைப் பற்றி எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். பண்ணையாருக்குப் பதில் தேவர், நாயக்கர், நாடார், கவுண்டர், வன்னியர் என்றோ, முனியனுக்குப் பதில் மாதாரி, பள்ளர், பறையர் என்றோ எழுதினால் ஆபத்தினை வலியச் சென்று வரவேற்றதாக ஆகி விடும். தமிழர்கள் எல்லாம் முட்டாள் பசங்க என்று எழுதினால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது - அது உண்மையாகவே இருந்தாலும் சொல்ல முடியாது. எழுத்தாளனே அந்த சாதிக்காரனாக இருந்தாலும் சொல்ல முடியாது. யாருக்கும் தெரியாமல் தனிமையில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

புலியூர் முருகேசனின் ”எனக்கு பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு” சிறுகதைத் தொகுப்பில் ‘நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்’ என்ற கதைக்கு எதிர்வினையே அவர் மீதான தாக்குதல். அதை ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன்.முடிந்தால் திருச்செங்கோட்டைப் போல கரூரில் கடையடைப்பு நடத்துங்கள்! உலகம் தெரிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பாக அமையட்டும்.

நான் ஏன் புலியூரை ஆதரிக்கிறேன் என்பதற்கான பதில் விரிவாக இந்த இணைப்பில்

Saturday, February 14, 2015

சென்னைக்கு மிக அருகில்

சென்னை என்பது உண்மையில் என்ன? அது ஊரா, உணர்வா, பிராந்தியமா, அல்லது நாளுக்கு நாள் தனது மாயக் கரங்களை விரித்தபடி ஒரு பலூனைப் போல தன்னைத் தானே ஊதிப் பெருக்கிக் கொள்ளும் ராட்சத உருவமா?

’ரியல் எஸ்டேட் பூம்’!

ஐந்து இலட்சத்துக்கு வாங்கிய இடம் ஐம்பது இலட்சமானது, எட்டு இலட்சத்துக்கு வாங்கிய வீடு எண்பது இலட்சம் ஆனது. 2003 க்கும் 2013 க்கும் இடைப்பட்ட கால கட்டம் ரியல் எஸ்டேட்டின் பொற்காலம். சென்னையில் மட்டுமல்ல. அநேகமாக இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் இதே கதைதான். கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வைத்து செங்கல்பட்டில், மதுராந்தகத்தில், ஸ்ரீபெரும்புதூரில், ஒரகடத்தில், இன்னும் சில புறநகர்ப் பகுதிகளில் வீட்டு மனைகளை வாங்கிப் போட்டபடியே இருக்கிறோம்.

இந்த ரியல் எஸ்டேட் பூமில் நடந்தது என்ன? என்னெண்ண சக்திகள் இதில் இயங்குகின்றன? இடம் வாங்குகிறவனும், விற்கிறவனும் வெறும் பொம்மைகள் மட்டுமே! அவர்களைத் தாண்டி எத்தனை பேர்கள்? எத்தனை கரங்கள்? ஆசைகள்? துரோகங்கள்? போட்டிகள்? பொறாமைகள்?

எல்லா டிவியிலும் மார்க்கெட் போன நடிகர்களை வைத்து ஓணான் கூட முட்டையிடாத பகுதியில் பிரிக்கப்பட்ட மனைகளை எல்லாம் சென்னைக்கு அருகில், சென்னைக்கு மிக அருகில் என்று விளம்பரம் செய்கிறார்கள். அதன் பின்னணியில் விநாயக முருகன் எழுதிய நாவல் ‘சென்னைக்கு மிக அருகில்’.

நாவல் தாம்பரத்துக்கு மேற்கேயுள்ள முடிச்சூர் சாலையில் பிரதானமாகச் சுழல்கிறது. அங்கு காலங்காலமாக விவசாயம் செய்து வந்த சித்திரை என்ற பெரியவர் தனது பேரன், பேத்திகளின் நெருக்குதலின் பேரில் நிலத்தை விற்க விழைவதே கதை. அவரது மனப் போராட்டங்களை வெகு அழகாகப் படம் பிடித்திருக்கிறார் வி.மு.

நித்யானந்தா-ரஞ்சிதா விவகாரம், லஷ்மி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேமா?’டி.வி புரோகிராம், சாதிப் பிரச்சினையில் சிக்குண்ட இளவரசன் - திவ்யா விவகாரம் என கடந்த சில ஆண்டுகளில் நடந்த முதன்மையான current affairs எல்லாம் ஒன்றாகக் கலக்கி, அவற்றை கதையோடு பின்னி அழகாகக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக குருஜி விஷயத்தினை இதில் சேர்த்தது சாரு நிவேதிதாவை மனதில் வைத்தா என்ற சந்தேகம் எழுகிறது. விநாயக முருகனை நேரில் பார்க்கும் போது விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் தேங்காய் பொறுக்கிய பையன் அருள்வாக்குச் சொல்லி பிரபலமான பிறகு பத்திரிக்கைகள் தேடி வந்தன. எழுத்தாளர்கள் புகழ்ந்தனர் என்றெல்லாம் பேசுகிறது நாவல். அந்த எழுத்தாளர் யாராக இருக்குமென்று அவதானித்ததும் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது.

கடந்த காலத்தில் (பெரியார், நேரு, காந்தி) ஒரு அய்யரும், பிள்ளைமாரும் பேசிக் கொள்ளும் போது சாதிய அடையாளங்களோடு உரையாடலைத் தந்திருக்கும் எழுத்தாளர், இடைநிலைச் சாதிப் பெண்ணொருத்தி தாழ்த்தப்பட்ட சாதிப் பையனைக் கல்யாணம் செய்து கொண்டதால் வந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது போது என்ன சாதி என்ற அடையாளங்களைப் பற்றி எழுதாமல் உஷாராகத் தவிர்த்திருக்கிறார்.

கிரேட். இந்தப் புத்தகத்தின் மற்ற எந்த இடத்தையும் விட இங்குதான் விநாயக முருகன் தனித்துத் தெரிந்தார் எனக்கு. எதார்த்த நாவல் எழுதும் போது, அதிலும் குறிப்பாக கிராமப் பின்னணியில் எதார்த்த நாவல் எழுதும் போது ஜாதிப் பெயரைக் குறிப்பிடாமலும், அந்த ஊரில் பேசப்ப்படும் வட்டார மொழியில் கதாப் பாத்திரங்கள் பேசாமலும் எழுதினால் முறையாக இருக்காது என்ற நம்பிக்கை எனக்குண்டு. அப்படி எழுதப்படும் பதிவுகளுக்கு சிக்கல் உருவாகும் காலமிது. குறிப்பாக பெருமாள் முருகனின் மாதொரு பாகன் பிரச்சினையை அடுத்து அந்த நம்பிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் போலிருக்கிறது.

இல்லையென்றால் சினிமாவில் வருவது போல ‘பண்ணையார்’ ‘முனியன்’ என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். கீழ் சாதி நாயே என்று எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் குறிப்பிட்ட சாதிப் பெயரைக் கொண்டு எழுதினால் போச்சு. பண்ணையாரின் இளம் மனைவி கீழ்சாதி முனியனோடு மாட்டுக் கொட்டகையில் கள்ள உறவு கொண்டிருந்ததைப் பற்றி எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். பண்ணையாருக்குப் பதில் தேவர், நாயக்கர், நாடார், கவுண்டர், வன்னியர் என்றோ, முனியனுக்குப் பதில் மாதாரி, பள்ளர், பறையர் என்றோ எழுதினால் ஆபத்தினை வலியச் சென்று வரவேற்றதாக ஆகி விடும். தமிழர்கள் எல்லாம் முட்டாள் பசங்க என்று எழுதினால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது - அது உண்மையாகவே இருந்தாலும் சொல்ல முடியாது. எழுத்தாளனே அந்த சாதிக்காரனாக இருந்தாலும் சொல்ல முடியாது. யாருக்கும் தெரியாமல் தனிமையில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

குறிப்பாக பெருமாள் முருகன் நிகழ்வுக்குப் பின்னர் எழுத்தாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். விநாயக முருகனுக்கு அத்தகைய நெருக்கடிகள் இருந்திருக்காது. அதை மனதில் வைத்தும் எழுதியிருக்க மாட்டார். அவரது எழுத்து ஸ்டைலில் அது இயல்பாக வந்திருக்கும் என்றே கருதுகிறேன். எனினும் நுட்பமாகக் கவனிக்க வேண்டியது விஷயமாக அமைகிறது.

ராஜீவ் காந்தி சாலையைப் போலவே சென்னைக்கு மிக அருகிலும் விநாயக முருகனுக்கு போதிய கவனத்தையும், பெயரையும் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக இரண்டு அம்சங்கள்.
1. விநாயக முருகனின் மொழியில் லயித்துப் போன காட்சியொன்றில் வின்செண்டும், நடிகை காவ்யாஸ்ரீயும் கலவி கொள்கிறார்கள்.

“அவர்கள் எவ்வளவு நேரம் ஆடையின்றிக் கிடந்தார்கள், எத்தனை முறை புணர்ந்தார்கள் என்று கணக்கில்லை. ஒரு உடலை உருக்கி இன்னொரு உடலுக்குள் ஊற்றி விளையாடினார்கள். இர்ண்டு உடல்களையும் உருக்கி ஒரே உடலாக மாற்றினார்கள். உலகின் இறுதி நாளன்று சந்தித்துக் கொள்ளும் பாம்புகள் போன்று ஆவேசமாக ப்ரியம் கொண்டார்கள். ப்ரியத்தின் கறை படிந்த படுக்கையைத் தாண்டி மேலே சூழலும் மின்விசிறி உதவியால் அறையெங்கும் ப்ரியத்தின் வாடை வீசிக் கொண்டிருந்தது.”

2. நாவல் இறுதிக் கட்டத்தை அடையும் போது பெரியவர் சித்திரை விவசாய நிலத்தை விற்று வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுத்து விடுகிறார். தனிமையில் வந்து அந்த மண்ணில் அமர்கிறார். அப்போது அவர் மனதில் ஒரு சிந்தனை ஓடுகிறது.
“இந்த வயலாச்சும் சென்னைக்குப் பக்கதுல இருக்கறதால இவ்வளவு பணம் வருது. ஆனா பட்டண வாடையே படாத ஜனங்க இருக்கற சின்னச்சின்ன கிராமங்கள் எத்தனை இருக்கும். அவங்களால வீட்டு மனையாக் கூடப் பிரிக்க முடியாதே. அவங்க எல்லாம் காலம் முச்சூடும் வெம்பி வெம்பித்தான் சாகணுமா? எத்தனை பேர் வெஷத்தைக் குடிச்சுட்டு வயல்ல செத்துப் போறத பேப்பர்ல போடுறாங்க?”

Wednesday, February 11, 2015

ஒரு நல்ல காரியம்

இரண்டாவது நாளாக பெங்களூரில் இருக்கிறேன். பயங்கரமான முதுகு வலி. படுத்தியெடுக்கிறது. குளிர் காலம் வந்தாலே எல்லா வருடமும் அப்படித்தான். ஆனால் இந்த வருடம் சற்று தூக்கலாக இருக்கிறது. அதனால் எங்கும் செல்வதாக உத்தேசமில்லாமல் படுத்து ஓய்வெடுக்க நினைத்திருந்தேன்.

வா.மணிகண்டன் அந்த ஏரியாவில்தான் வசிக்கிறார். பெங்களூர் வந்திருப்பதைச் சொன்னதும், ”நாராயண ஹிருதாலயா வரைக்கும் போய்ட்டு வந்திரலாம். ஒரு செக் குடுத்துட்டு வரணும். வரீங்களா?” என்று கேட்டார்.

டூ வீலரில் சென்றால் முதுகு வலி கூடும். அதனால் முதலில் வேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆறு கிலோ மீட்டர் என்றதும் கூடச் சென்றேன். அதுவும் ஓசூர் ரோடு… மேடு பள்ளம் இருக்காது…

அங்கே போய்ப் பார்த்த பிறகுதான் தெரிந்தது நமக்கிருக்கும் முதுகு வலியெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லையென்று.


போட்டோவில் இருக்கும் இந்தச் சிறுவனின் பெயர் தினேஷ். பெற்றோர் நீலகிரியில் தோட்டத் தொழிலாளர்கள். பையனுக்கு split cord malformation. முதுகிலே ஸ்பீட் பிரேக்கர் மாதிரி இருக்கிறது. இரண்டு அறுவைச் சிகிச்சை தண்டு வடத்திலே செய்ய வேண்டுமாம். அதற்கான மருத்துவ வசதிகள் கோவையில் இல்லாத காரணத்தால் பெங்களூருக்கு வந்திருக்கிறார்கள். ஓசூர் ரோட்டில் உள்ள நாராயண ஹிருதயாலயா மருத்துவமனைக்கு அருகில் ஒரு ஹோமில் தங்கியிருக்கிறார்கள்.

முதலாவது ஆபரேஷனுக்கு சுமார் ஒன்றரை இலட்சம் ஆகுமாம். தனது நிசப்தம் அறக்கட்டளை வாயிலாக தினேஷுக்கு உதவச் செல்லும் போது வா.மணிகண்டன் என்னையும் அழைத்திருந்தார். இந்தப் பையனைப் பற்றி ’மலைச் சொல்’ பால நந்தகுமார் பரிந்துரைத்திருக்கிறார். ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையை மணியின் நண்பர் வழங்க நானும் அருகினில் இருந்தேன். ”மிச்சப் பணத்துக்கு என்ன செய்வீர்கள்?” என்று கேட்டதற்கு, “நெறைய எடத்துல கேட்டிருக்கோம் சார்” என்று மட்டுமே சொன்னார் அந்த எளிய தந்தை.

குருத்தோலை அறக்கட்டளையில் இருந்து பத்து அல்லது இருபதாயிரம் கொடுப்பதாகச் சொல்லி வந்திருக்கிறேன். அது மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்காது. பெங்களூர் நண்பர்கள் யாராவது நேரடியாக உதவ விரும்பினால் தினேஷின் பெற்றோரைச் சந்தித்து உதவுங்கள். வெளியூர் நண்பர்கள் உதவ விரும்பினால் குருத்தோலைஅறக்கட்டளைக்கு அனுப்பினால் ஒட்டு மொத்தமாக சேர்த்துக் கொடுக்கவும் செய்யலாம்.

பணம் அனுப்புகிறவர்கள் தமது பெயரையும், முகவரியையும் மறக்காமல் மின்னஞ்சலில் அனுப்புங்கள்.

Kurutholai Charitable Trust
A/c no: 34309512327
Bank: State Bank of India
Branch: Sholinganallur, Chennai
IFS Code: SBIN0010525


Wednesday, January 21, 2015

மிளிர் கல்

பாண்டிய மன்னனின் மனைவி அணிந்திருந்த சிலம்பில் என்ன கற்கள் இருந்தன? கண்ணகியின் காற்சிலம்பில் என்ன கற்கள் இருந்தன? சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். அதையே இப்போது வேறு விதமாகப் படிப்பதற்கு இதமாக இருக்கிறது.

இரா.முருகவேள் எழுதிய மிளிர் கல் நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். சென்ற ஆண்டின் சிறந்த நாவலாக ஆனந்த விகடனில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சரியான தேர்வு.

மிளிர் கல்.. அதாவது ஜொலிக்கும் கற்கள். அவை எங்கு கிடைக்கும் என்பதைப் பற்றி. குறிப்பாக கொங்கு நாடு பற்றி. கொங்கு நாடு என இன்று அழைக்கப்படும் பகுதி பெரும்பாலும் காட்டுப் பிராந்தியமாக வேடுவர்கள் மட்டுமே அதிகமாக வசித்த பகுதியாகத்தான் விளங்கியிருக்க வேண்டும். காலப் போக்கில் சோழ நாட்டில் இருந்து வேளாளர்களும், ஏனைய சாதியினரும் அங்கே குடியேறியிருக்க வேண்டும். அதைப் பற்றிப் பேசினால் வேறு விதமாகச் சென்று விடும். உதைக்க வருவார்கள் என்பதால் மெயின் மேட்டருக்கு வருவோம்.

இந்தக் கொங்கு நாட்டில், குறிப்பாக காங்கேயம் பகுதியில், விலையுயர்ந்த கற்கள் ஏராளமாக் கிடைத்திருக்கின்றன. அங்கே முறையான குடியேற்றங்கள் இல்லை. பல நாட்டினரும் மிளிர் கற்களுக்காகப் போரிட்டினர். அந்தக் கற்களைத்தான் மேற்கே சேரத் துறைமுகத்திலும், கிழக்கே பூம்புகார்த் துறைமுகத்திலேயும் வாணிகம் செய்தார்கள். நான் சொல்லவில்லை. முருகவேள் சொல்கிறார்.

அத்தகைய கற்கள் இன்னும் காங்கேயம் பகுதியில் கிடைக்கின்றன. அதைப் பற்றி ஆய்வு செய்ய பண்டைய வாணிபத்தின் கூறுகளை அறிந்த ஒரு பேராசிரியரைப் பயன்படுத்துகிறது பிரசித்தி பெற்ற ஒரு டைமண்ட் கம்பெனி. அவரும் பூம்புகாரில் இருந்து கரூர், காங்கேயம், கொடுமணல் வழியாக பண்டைய காலத்தில் புழங்கிய பாதையில் வழியே பயணிக்கிறார்.

இன்னொரு பக்கம் வட நாட்டில் வளர்ந்தாலும் கண்ணகி பாத்திரத்தின் மீது தீராத காதல் கொண்ட ஒரு இளம்பெண். அவள் தனது தோழனுடன் – ஆம் உண்மையிலேயே இடதுசாரிச் சிந்தனை கொண்ட தோழன் – ஆவணப் படம் எடுப்பதற்காக பூம்புகார் வருகிறாள். பூம்புகாரில் இருந்து மதுரைக்கு கண்ணகி சென்ற பாதையிலேயே சென்று படமெடுப்பதற்காக பூம்புகாரில் முகாமிடுகிறாள்.

பேராசிரியரும், இந்த இளைஞர்களும் அறிமுகமாகிறார்கள். புகார் முதல் திருச்சி வரை சேர்ந்து பயணிக்கிறார்கள். இதற்கிடையில் பேராசிரியர் கடத்தப்படுகிறார். யார் கடத்தினார்கள்? அவரை விட்டார்களா? கற்களைப் பற்றிய தகவல்களை அவர் மூலம் அந்த கார்ப்பரேட் நிறுவனம் பெற்றதா? கண்ணகியின் மீது காதல் கொண்ட அந்த இளம்பெண் என்ன கற்றுக் கொண்டாள்? விரிவாகவும், சுவாரசியமாகவும் பேசுகிறது நாவல். விறுவிறுப்பான, அதே நேரம் சிலப்பதிகாரத்தினைப் பற்றி ஆழமாக அலசும், கண்ணகியை ஆராயும் கதை.

திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். ஆன்லைனிலும் வாங்கலாம்.

முருகவேள் கோவையில் வசிக்கிறார். வழக்கறிஞர். இந்தக் கற்களைப் பற்றியும், கண்ணகியைப் பற்றியும் நிறைய ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இது சர்ச்சைகளின் காலம். சர்ச்சைக்குரிய பகுதிகள் என இதில் ஏதுமில்லை. அப்படியே சர்ச்சைகள் எழுந்தாலும் பிரச்சினையில்லை. ஏனென்றால் முருகவேள் வழக்கறிஞரும் கூட. 

Monday, January 12, 2015

மாதொரு பாகன் தொடர்பாக

நான் இன்னும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லவில்லை. ஆனால் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் அமோகமாக விற்பனையாவதாக அறிகிறேன். டிஸ்கவரி புக் பேலஸ் வாசலில் நின்றிருந்த நண்பர் ஒருவர் தான் பார்க்கவே நூறு பிரதிகளாவது விற்றிருக்குமென்றார்.

நான்காண்டுகளுக்கு முன் வெளியான ஒரு நூல் இப்போது இத்தனை கவனம் பெற்றிருப்பது சர்ச்சையினால்! போதுமான அளவுக்கு அதைப் பற்றிப் பேசி விட்டார்கள். இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. திருச்செங்கோடு நகரில் நடந்த ஒரு குறிப்பிட்ட திருவிழாவின் போது எந்தப் பெண் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் படுத்து முயங்கலாம் என அந்த நாவலில் வருகிறது. அதுதான் சர்ச்சை.

நேற்றும், அதற்கு முந்தைய தினமும் நான் ஈரோட்டில் இருந்தேன். பெருமாள் முருகனுக்கு ஆதரவாக அங்கே நடப்பதாக இருந்த ஒரு கூட்டம் ஏதோவொரு காரணத்தினால் நடக்காமல் போயிருக்கிறது. ஆனால் எப்படியும் அவர் மீது FIR பதிவு செய்து நீதி மன்றத்தில் நிறுத்துவார்கள் என்கிறார்கள் சிலர். நிறுத்தியாக வேண்டும் என்கிறார்கள் சிலர். உண்மையிலேயே திருச்செங்கோட்டில் கடையடைப்பு முதலான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நாம் ஃபேஸ்புக்கில் காண்பது போல பெருமாள் முருகனே மருவும், ஒட்டு மீசையும் வைத்துச் சென்று புத்தகத்தைக் கொளுத்திய மாதிரியெல்லாம் தெரியவில்லை.

தனது கொள்கையில் பெருமாள் முருகன் உறுதியாக நின்றிருக்க வேண்டும். லண்டனில் இருந்து யமுனா ராஜேந்திரன் கீழ்க்காணுமாறு எழுதுகிறார்:

”இந்தியச் சூழலில் தமது படைப்புக்கள் மற்றும் கருத்துக்களுக்கான எதிர்ப்பை எம்.எப்.குசைன், ருஸ்டி, வென்டி டோனிக்கர், தஸ்லீமா, யூ.ஆர்.அனந்தமூர்த்தி போன்றவர்கள் எதிர்கொண்ட விதத்தையும், தமிழ்ச்சூழலில் சுந்தர ராமசாமி போன்றவர்களும், ஏன் ஜோ.டி. குருசும் கூட தன் மீதான விமர்சனங்களை எதிர்கொண்ட விதத்தையும் பார்க்கிறபோது, பெருமாள் முருகன் தனது பத்திரிக்கையாளர் அறிக்கையின் வழி இதனை எதிர்கொண்ட விதம் பெருமாள் முருகனுக்கு ஆதரவான இடதுசாரிகளின் இந்துத்துவ எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் அபத்த நாடகமாக ஆக்கிவிட்டது போலத் தோன்றுகிறது.

பெருமாள் முருகனின் சரணடைவு தமிழ்ச் சூழலில் ஒரு மிக மோசமான முன்னுதாரணம் என ஏன் சொல்கிறேன்? இந்த நாவலுக்கான எதிர்ப்பில் இந்துத்துவ சக்திகள், சாதிய சக்திகள், பிஜேபி போன்ற அரசியல் கட்சிகள் பங்கெடுத்துள்ளன. வரலாற்றை மாற்றி எழுதுதல், தமது கலாச்சார மேலாண்மையை நிறுவுதல், தம் மீதான விமர்சனங்களைத் தடுத்தல், நிகழ்ந்ததை மறுத்தல் என்பன இவர்களது அரசியல் திட்டமாக இருக்கிறது.

அடிநிலை மக்களின் மீது மேல்சாதிய, மேல்வர்க்கத்தவர் தொடுத்த வன்முறைகளுக்கான ஆதாரங்கள் வரலாற்றில் அதிகமும் வாய்மொழி ஆதாரங்களாகவே இருத்தல் முடியும். இவை புனைவில் படைக்கப்படும்போது இனிமேல் இந்துத்துவாதிகள் இந்த வெற்றிக் களிப்பில் திரும்பத் திரும்ப இம்மாதிரியான அச்சுறுத்தல்களையும் எரிப்புகளையும் தொடர்ந்து படைப்பாளிகளின் மேல் நிகழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பை பெருமாள் முருகனின் வலுவற்ற வாதங்களும் சரணடைவும் வழிகோலியிருக்கின்றன.”

படத்தை எதிர்ப்பவர்களை இணங்க வைக்க சினிமாக்காரன் சமரம் செய்கிறான். குறிப்பிட்ட காட்சிகளை வெட்டுகிறான். சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கிறான். ஆனால் மாதொரு பாகன் வெட்டப்படாமல் அப்படியேதான் கிடைக்கிறது. இதில் என்ன சரணடைவு என்று தெரியவில்லை. அவர் என்னவோ பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வார்த்தை விளையாட்டு ஆடி விட்டார். இங்கே அவர் செய்தது சரணடைவு என்று கூறுகிறவர்கள் எல்லாம் அவரைப் போலவே அரசுப் பணியில் இருந்து, அந்த அரசுப் பணி பாதிக்கப்படலாம் என்ற நிலை வரும் போது என்ன செய்வோம் என ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும். 

Wednesday, January 07, 2015

நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு

நண்பர் காமேஷ் ஜெயச்சந்திரன் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார்.

“நீங்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவீர்களா? எனது அலுவலகம் கண்காட்சி நடக்கும் வளாகத்துக்கு அருகிலேதான் உள்ளது. முடிந்தால் சந்திக்கலாம்”

நான் மிகவும் ஆச்சரியத்துடன் கவனிக்கும் நபர் காமேஷ். அவரைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

“நிச்சயம் சந்திக்கலாம் காமேஷ். தற்போது வெளியான கொட்டு மொழக்கு நூலில் உங்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறேன்” என்றேன். 

Why you thanked me for the novel? என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். பதில் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக இங்கே எழுதுகிறேன். 

The Science of Stock Market Investment நூலை வெளியிட்ட போது அதற்கு உறுதுணையாக நின்று மெய்ப்புப் பார்த்து மொழியை மேம்படுத்திக் கொடுத்தவர் அவர். நன்றிக் கடனை எப்படித் தீர்க்கப் போகிறேன் எனத் தெரியவில்லை என்று சாட்டில் சொன்னதற்கு, “More such books from you is great way to pay to the whole society” என பதில் அனுப்பினார். நன்றாக நினைவிருக்கிறது,

அப்படித்தான் ஒவ்வொருவரும். கொட்டு மொழக்கு நாவலை ஏற்கனவே நாகப்பன் அவர்களுக்கு, க.சீ.சிவக்குமார் அவர்களுக்கு அர்ப்பணம் செய்தாகி விட்டது. அதையும் தாண்டி சிலருக்கு நன்றி சொல்லியிருக்கிறேன். அதில் காமேஷும் ஒருவர்.

பட்டியல் இதோ..
எஸ்.பி.அண்ணாமலை, முருகேஷ் பாபு, பத்ரி சேஷாத்ரி, பா.ராகவன், மருதன், ஏ.ஆர்.குமார், நா.கதிர்வேலன், வா.மணிகண்டன், மனுஷ்ய புத்திரன், மாலன், அதிஷா, பெ.கருணாகரன், ’மல்லிகை மகள்’ சிவஞானம், ஜானகிராமன் வைத்தியநாதன், செந்தில் குமார், இலக்கியச்செம்மல் வெளங்காதவன், வீடு சுரேஷ்குமார், ’நீயா-நானா’ அந்தோணி, என்.ஸ்ரீராம், வா.மு.கோமு, பெருமாள் முருகன் மற்றும் நண்பர்கள் காமேஷ் ஜெயச்சந்திரன், கரூர் பெருமாள், R.S.பிரபு ஆகியோரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். இன்னும் சிலரை குறிப்பிடத் தவறியிருந்தால் அது ஞாபகம் தப்பிய குற்றந்தவிர வேறெதுவும் இல்லை.

இதில் குறிப்பிடாமல் விட்ட ஒரு பெயர் எதிர் வெளியீடு அனுஷ். ஆனால் அவர் நாவலுக்குள் வருகிறார். இன்னொருவர் பாஸ்கர் சக்தி. அவர் நாவலுக்கு முன் வந்து விட்டார்.

Sunday, January 04, 2015

ஃபெமினா தமிழ் நூல் விமர்சனம் - இரவல் காதலி

ஜூன் 2014 இதழில் வெளியான விமர்சனம்


Saturday, January 03, 2015

தினமலரில் செய்தி

கொட்டு மொழக்கு வெளியீடு குறித்த செய்தி தினமலரில் வந்திருக்கிறது.


எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்க்கண்ட வரிகளை எழுதியிருக்கிறார்.

//செல்லமுத்து குப்புசாமியின் “ கொட்டு மொழக்கு “ நாவலை நான் வெளியிட புகழ் பெற்ற ஓவியர் அச்சுதன் கூடலூர் பெற்றுக் கொண்டார். செல்லமுத்து குப்புசாமி தாராபுரத்தைச் சார்ந்தவர். சென்னையில் அய்.டி.யில் பணிபுரிகிறார்.முதல் நாவல் இ-நாவலாய் ஆங்கிலத்தில் வந்து, பின் தமிழில் வந்தது. ”இரவல் காதலி ” . இரண்டாம் நாவலை வா.மு.கோமு. வெளியிட்டார். கொங்கு மண்சார்ந்த நல்ல நாவல்

” நொய்யல் பிரதேசம் பற்றி இப்படியொரு நாவல் வந்ததில்லை ” என்று எல்லோரிடமும் வா.மு.கோமு சொல்லிக் கொண்டேயிருந்தார்

விழாவில் செல்லமுத்து குப்புசாமியிடம் அய்ஸ்வர்யா

கேள்வி 1:

இணையதளத்துக்காரர்களிடம் மொழி ஆழம் இல்லையே..

பதில்: தொடர்ந்து எழுதுகிறார்கள்.தொடர்ந்து எழுதுகையில் வசப்படும்.

கேள்வி 2: இது உங்களின் மூன்றாவது நாவல் .நீங்கள் பெரிய நாவல் எழுதுவதிலையே

பதில் 200 பக்கத்துக்கு மேல் நாவல் எழுதுகிறவர்களை படிப்பவர்கள் குறைவு. அவை அதிகம் விற்பதுவுமில்லை. பெரிய நாவல் எழுதுகிறவர்களை அண்ணாந்து பார்க்கிறேன்.

செல்லமுத்து குப்புசாமியின் “ மொட்டு மொழக்கு “ பற்றி பாஸ்கர் சக்தி சொன்னது : ”ஏற்கனவே எண்ணற்ற துன்பங்களுக்கு மத்தியில் தான் வாசிக்க வருகிறோம். அப்படி இருக்கையில் வாசிப்பு துன்பத்தை மேலும் கூட்டுவதாக அமையக் கூடாது. வாசித்த பிறகு கிடைக்கும் அனுபவம் அல்லது அதன் மூலம் உணர்கிற விஷயங்கள் துன்புறுத்தலாமே ஒழிய வாசிக்கின்ற நிகழ்வு ஒரு போதும் இம்சிக்கக் கூடாது. அப்படிப்பட்ட வாசிப்பில் இன்பமூட்டும் படைப்பு ’கொட்டு மொழக்கு’//

Friday, January 02, 2015

கொட்டு மொழக்கு வெளியீட்டு விழா

நாவல் வெளியீட்டு விழா நல்லபடியாக நிடந்தேறியது. அண்ணன் பாஸ்கர் சக்தி ‘கொட்டு மொழக்கு’ நாவலைப் பற்றி அறிமுக உரையாற்றினார்.

”புத்தகம் வாசகனைத் துன்புறுத்துவதாக அமையக் கூடாது. ஏனென்றால் ஏற்கனவே எண்ணற்ற துன்பங்களுக்கு மத்தியில் தான் வாசிக்க வருகிறோம். அப்படி இருக்கையில் வாசிப்பு துன்பத்தைக் கூட்டுவதாக அமையக் கூடாது. வாசித்த பிறகு கிடைக்கும் அனுபவம் அல்லது அதன் மூலம் உணர்கிற விஷயங்கள் துன்புறுத்தலாமே ஒழிய வாசிக்கின்ற நிகழ்வு ஒரு போதும் இம்சிக்கக் கூடாது. அப்படிப்பட்ட வாசிப்பில் இன்பமூட்டும் படைப்பு ’கொட்டு மொழக்கு’ என்றார்.

அவர் பேசியதை அப்படியே இங்கே டைப் செய்து போட முடியுமா தெரியவில்லை. தெளிவான அறிமுக உரையாற்றினார் பாஸ்கர். விழாவில் வீடியோவெல்லாம் எடுத்திருக்கிறார்கள். கிடைத்ததும் பகிர்கிறேன்.


சென்ற ஆண்டு போலவே இந்த வருடமும் ஆண்டில் முதல் நாள் நூல் வெளியீட்டு விழாவில் துவங்கியிருக்கிறது. சென்ற ஆண்டு புத்தகத்தை விமர்சனம் செய்த நபரை மட்டும் பேச வைத்திருந்தார் மனுஷ்யபுத்திரன். இயக்குனர் சீனு ராமசாமி மட்டும் இரவல் காதலி குறித்துப் பேசினார். பத்துப் புத்தகங்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்த போது அவ்வளவுதான் செய்ய முடியும். ஆனால் இந்த வருடம் ஐந்து புத்தகங்கள் மட்டுமே வெளியாயின. அதனால் என்னிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க வைத்திருந்தார்.

முன் கூட்டியே தெரிவிக்கப்படாத ஏற்பாடு அது. ஈரோடு புத்தக கண்காட்சியின் போது நடந்த குருத்தோலை வெளியீட்டில் நடுகல் பதிப்பகத்தினர் நிகழ்ச்சி நிரலிலேயே ‘ஏற்புரை: செல்லமுத்து குப்புசாமி’ எனப் போட்டிருந்தனர். ஆனால் நேற்று அப்படியெல்லாம் எவ்விதமான முன்னெச்சரிக்கையும் செய்யவில்லை.

நிகழ்ச்சித் தொகுப்பாளினி, “நீங்க ஏன் ஸார் எப்பவுமே 250 பக்கத்துக்குள்ளயே நாவல் எழுதறீங்க?” என்று கேள்வியை வீசினார். மனுஷ்ய புத்திரனோ, செல்வியோ எழுதிக் கொடுத்திருப்பார்கள். இரண்டாவது கேள்வி: “500 பக்கம், 600 பக்கம் என நாவல் என் எழுதுகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

அதைப் பற்றி முன்னுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

“விருதுகளை வாங்கிய எழுத்தாள நண்பர் ஒருவர் ஐநூறு பக்கங்களுக்குக் குறையாமல் ஒரு நாவலை எழுதுமாறு உரிமையோடு சொன்னார். அவர் குறிப்பிட்ட ’இரவல் காதலி’ மட்டுமல்ல, அவர் ஆலோசனை வழங்கி முடித்த பிறகு எழுதிய ‘ஆத்துக்கால் பண்ணையம்’ ‘குருத்தோலை’ மற்றும் ’கொட்டு மொழக்கு’ ஆகிய அனைத்துமே இருநூறு பக்கத்திற்கு மிகாதவை. கொட்டு மொழக்கு வெளியீட்டு விழாவிற்கு வருமாறு அவரை அழைத்ததற்கு, ”எத்தனை பக்கம்?” என்றுதான் முதலில் கேட்டார். ஐநூறை எட்டவில்லை என்பதில் அவருக்கு ஏமாற்றம். அவ்வாறு தலையணை சைஸில் வெளியாகும் நூல்கள் காலத்தால் அழியாதவையென்றும், அவையே விருதுகளுக்குப் பரிசீலிக்கப்படுமென்றும், அறிவுஜீவிகள் மட்டத்தில் விவாதிக்கப்படுமென்றும் என் மீதான அக்கறையில் அவர் சொல்லி வந்திருக்கிறார்.

வேற்று கிரகத்திற்கு ராக்கெட்டில் செல்கிறவர்களைக் கண்டு கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்வதில் எனக்குத் தயக்கமோ, பொறாமையோ கிடையாது. ஆனால் நானாக வலியச் சென்று அந்த ராக்கெட்டில் ஏறுவேனா என்பது சந்தேகம். அப்படித்தான் ஐநூறு பக்கங்களைக் கடந்து நாவல் எழுதுவது. நம்மால் ஆகாத காரியம் அது. அப்படி செய்வோரை கொட்டு மொழக்கோடு கரவொலியெழுப்பிக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகவே காத்திருக்கிறேன்.”

இதையே வேறு வார்த்தைகளில் பதிலாகச் சொன்னேன்.

வெளியீட்டு நிகழ்வினைப் பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன். நிகழ்வில் சுப்ரபாரதிமணியின் புத்துமண் நூலும், அபிலாஷின் ரசிகன் நூலும், விநாயக முருகனின் சென்னைக்கு அருகில் நூலும் வெளியாயின. கூடவே மலையாளத்தில் ட்டி.டி.ராமகிருஷ்ணன் எழுதிய பிரபலமான நாவல் பிரான்சிஸ் இட்டிக்கோராவின் தமிழாக்கமும் வெளியானது. சிறப்புரையாற்ற அழகிய பெரியவன், முருகேச பாண்டியன், அதிஷா, கல்பற்ற நாராயணன் ஆகியோர் வந்திருந்தனர்.

சுப்ரபாரதி மணியன் மற்றும் அழகிய பெரியவன் ஆகியோரை முதன்முறையாகச் சந்தித்ததில் மகிழ்ச்சி.


கொட்டு மொழக்கு நூலை வலது பக்கமுள்ள புத்தகத்தின் படம் மீது கிளிக் செய்து ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம்.