Wednesday, January 21, 2015

மிளிர் கல்

பாண்டிய மன்னனின் மனைவி அணிந்திருந்த சிலம்பில் என்ன கற்கள் இருந்தன? கண்ணகியின் காற்சிலம்பில் என்ன கற்கள் இருந்தன? சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். அதையே இப்போது வேறு விதமாகப் படிப்பதற்கு இதமாக இருக்கிறது.

இரா.முருகவேள் எழுதிய மிளிர் கல் நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். சென்ற ஆண்டின் சிறந்த நாவலாக ஆனந்த விகடனில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சரியான தேர்வு.

மிளிர் கல்.. அதாவது ஜொலிக்கும் கற்கள். அவை எங்கு கிடைக்கும் என்பதைப் பற்றி. குறிப்பாக கொங்கு நாடு பற்றி. கொங்கு நாடு என இன்று அழைக்கப்படும் பகுதி பெரும்பாலும் காட்டுப் பிராந்தியமாக வேடுவர்கள் மட்டுமே அதிகமாக வசித்த பகுதியாகத்தான் விளங்கியிருக்க வேண்டும். காலப் போக்கில் சோழ நாட்டில் இருந்து வேளாளர்களும், ஏனைய சாதியினரும் அங்கே குடியேறியிருக்க வேண்டும். அதைப் பற்றிப் பேசினால் வேறு விதமாகச் சென்று விடும். உதைக்க வருவார்கள் என்பதால் மெயின் மேட்டருக்கு வருவோம்.

இந்தக் கொங்கு நாட்டில், குறிப்பாக காங்கேயம் பகுதியில், விலையுயர்ந்த கற்கள் ஏராளமாக் கிடைத்திருக்கின்றன. அங்கே முறையான குடியேற்றங்கள் இல்லை. பல நாட்டினரும் மிளிர் கற்களுக்காகப் போரிட்டினர். அந்தக் கற்களைத்தான் மேற்கே சேரத் துறைமுகத்திலும், கிழக்கே பூம்புகார்த் துறைமுகத்திலேயும் வாணிகம் செய்தார்கள். நான் சொல்லவில்லை. முருகவேள் சொல்கிறார்.

அத்தகைய கற்கள் இன்னும் காங்கேயம் பகுதியில் கிடைக்கின்றன. அதைப் பற்றி ஆய்வு செய்ய பண்டைய வாணிபத்தின் கூறுகளை அறிந்த ஒரு பேராசிரியரைப் பயன்படுத்துகிறது பிரசித்தி பெற்ற ஒரு டைமண்ட் கம்பெனி. அவரும் பூம்புகாரில் இருந்து கரூர், காங்கேயம், கொடுமணல் வழியாக பண்டைய காலத்தில் புழங்கிய பாதையில் வழியே பயணிக்கிறார்.

இன்னொரு பக்கம் வட நாட்டில் வளர்ந்தாலும் கண்ணகி பாத்திரத்தின் மீது தீராத காதல் கொண்ட ஒரு இளம்பெண். அவள் தனது தோழனுடன் – ஆம் உண்மையிலேயே இடதுசாரிச் சிந்தனை கொண்ட தோழன் – ஆவணப் படம் எடுப்பதற்காக பூம்புகார் வருகிறாள். பூம்புகாரில் இருந்து மதுரைக்கு கண்ணகி சென்ற பாதையிலேயே சென்று படமெடுப்பதற்காக பூம்புகாரில் முகாமிடுகிறாள்.

பேராசிரியரும், இந்த இளைஞர்களும் அறிமுகமாகிறார்கள். புகார் முதல் திருச்சி வரை சேர்ந்து பயணிக்கிறார்கள். இதற்கிடையில் பேராசிரியர் கடத்தப்படுகிறார். யார் கடத்தினார்கள்? அவரை விட்டார்களா? கற்களைப் பற்றிய தகவல்களை அவர் மூலம் அந்த கார்ப்பரேட் நிறுவனம் பெற்றதா? கண்ணகியின் மீது காதல் கொண்ட அந்த இளம்பெண் என்ன கற்றுக் கொண்டாள்? விரிவாகவும், சுவாரசியமாகவும் பேசுகிறது நாவல். விறுவிறுப்பான, அதே நேரம் சிலப்பதிகாரத்தினைப் பற்றி ஆழமாக அலசும், கண்ணகியை ஆராயும் கதை.

திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். ஆன்லைனிலும் வாங்கலாம்.

முருகவேள் கோவையில் வசிக்கிறார். வழக்கறிஞர். இந்தக் கற்களைப் பற்றியும், கண்ணகியைப் பற்றியும் நிறைய ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இது சர்ச்சைகளின் காலம். சர்ச்சைக்குரிய பகுதிகள் என இதில் ஏதுமில்லை. அப்படியே சர்ச்சைகள் எழுந்தாலும் பிரச்சினையில்லை. ஏனென்றால் முருகவேள் வழக்கறிஞரும் கூட. 

Monday, January 12, 2015

மாதொரு பாகன் தொடர்பாக

நான் இன்னும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லவில்லை. ஆனால் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் அமோகமாக விற்பனையாவதாக அறிகிறேன். டிஸ்கவரி புக் பேலஸ் வாசலில் நின்றிருந்த நண்பர் ஒருவர் தான் பார்க்கவே நூறு பிரதிகளாவது விற்றிருக்குமென்றார்.

நான்காண்டுகளுக்கு முன் வெளியான ஒரு நூல் இப்போது இத்தனை கவனம் பெற்றிருப்பது சர்ச்சையினால்! போதுமான அளவுக்கு அதைப் பற்றிப் பேசி விட்டார்கள். இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. திருச்செங்கோடு நகரில் நடந்த ஒரு குறிப்பிட்ட திருவிழாவின் போது எந்தப் பெண் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் படுத்து முயங்கலாம் என அந்த நாவலில் வருகிறது. அதுதான் சர்ச்சை.

நேற்றும், அதற்கு முந்தைய தினமும் நான் ஈரோட்டில் இருந்தேன். பெருமாள் முருகனுக்கு ஆதரவாக அங்கே நடப்பதாக இருந்த ஒரு கூட்டம் ஏதோவொரு காரணத்தினால் நடக்காமல் போயிருக்கிறது. ஆனால் எப்படியும் அவர் மீது FIR பதிவு செய்து நீதி மன்றத்தில் நிறுத்துவார்கள் என்கிறார்கள் சிலர். நிறுத்தியாக வேண்டும் என்கிறார்கள் சிலர். உண்மையிலேயே திருச்செங்கோட்டில் கடையடைப்பு முதலான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நாம் ஃபேஸ்புக்கில் காண்பது போல பெருமாள் முருகனே மருவும், ஒட்டு மீசையும் வைத்துச் சென்று புத்தகத்தைக் கொளுத்திய மாதிரியெல்லாம் தெரியவில்லை.

தனது கொள்கையில் பெருமாள் முருகன் உறுதியாக நின்றிருக்க வேண்டும். லண்டனில் இருந்து யமுனா ராஜேந்திரன் கீழ்க்காணுமாறு எழுதுகிறார்:

”இந்தியச் சூழலில் தமது படைப்புக்கள் மற்றும் கருத்துக்களுக்கான எதிர்ப்பை எம்.எப்.குசைன், ருஸ்டி, வென்டி டோனிக்கர், தஸ்லீமா, யூ.ஆர்.அனந்தமூர்த்தி போன்றவர்கள் எதிர்கொண்ட விதத்தையும், தமிழ்ச்சூழலில் சுந்தர ராமசாமி போன்றவர்களும், ஏன் ஜோ.டி. குருசும் கூட தன் மீதான விமர்சனங்களை எதிர்கொண்ட விதத்தையும் பார்க்கிறபோது, பெருமாள் முருகன் தனது பத்திரிக்கையாளர் அறிக்கையின் வழி இதனை எதிர்கொண்ட விதம் பெருமாள் முருகனுக்கு ஆதரவான இடதுசாரிகளின் இந்துத்துவ எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் அபத்த நாடகமாக ஆக்கிவிட்டது போலத் தோன்றுகிறது.

பெருமாள் முருகனின் சரணடைவு தமிழ்ச் சூழலில் ஒரு மிக மோசமான முன்னுதாரணம் என ஏன் சொல்கிறேன்? இந்த நாவலுக்கான எதிர்ப்பில் இந்துத்துவ சக்திகள், சாதிய சக்திகள், பிஜேபி போன்ற அரசியல் கட்சிகள் பங்கெடுத்துள்ளன. வரலாற்றை மாற்றி எழுதுதல், தமது கலாச்சார மேலாண்மையை நிறுவுதல், தம் மீதான விமர்சனங்களைத் தடுத்தல், நிகழ்ந்ததை மறுத்தல் என்பன இவர்களது அரசியல் திட்டமாக இருக்கிறது.

அடிநிலை மக்களின் மீது மேல்சாதிய, மேல்வர்க்கத்தவர் தொடுத்த வன்முறைகளுக்கான ஆதாரங்கள் வரலாற்றில் அதிகமும் வாய்மொழி ஆதாரங்களாகவே இருத்தல் முடியும். இவை புனைவில் படைக்கப்படும்போது இனிமேல் இந்துத்துவாதிகள் இந்த வெற்றிக் களிப்பில் திரும்பத் திரும்ப இம்மாதிரியான அச்சுறுத்தல்களையும் எரிப்புகளையும் தொடர்ந்து படைப்பாளிகளின் மேல் நிகழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பை பெருமாள் முருகனின் வலுவற்ற வாதங்களும் சரணடைவும் வழிகோலியிருக்கின்றன.”

படத்தை எதிர்ப்பவர்களை இணங்க வைக்க சினிமாக்காரன் சமரம் செய்கிறான். குறிப்பிட்ட காட்சிகளை வெட்டுகிறான். சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கிறான். ஆனால் மாதொரு பாகன் வெட்டப்படாமல் அப்படியேதான் கிடைக்கிறது. இதில் என்ன சரணடைவு என்று தெரியவில்லை. அவர் என்னவோ பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வார்த்தை விளையாட்டு ஆடி விட்டார். இங்கே அவர் செய்தது சரணடைவு என்று கூறுகிறவர்கள் எல்லாம் அவரைப் போலவே அரசுப் பணியில் இருந்து, அந்த அரசுப் பணி பாதிக்கப்படலாம் என்ற நிலை வரும் போது என்ன செய்வோம் என ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும். 

Wednesday, January 07, 2015

நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு

நண்பர் காமேஷ் ஜெயச்சந்திரன் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார்.

“நீங்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவீர்களா? எனது அலுவலகம் கண்காட்சி நடக்கும் வளாகத்துக்கு அருகிலேதான் உள்ளது. முடிந்தால் சந்திக்கலாம்”

நான் மிகவும் ஆச்சரியத்துடன் கவனிக்கும் நபர் காமேஷ். அவரைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

“நிச்சயம் சந்திக்கலாம் காமேஷ். தற்போது வெளியான கொட்டு மொழக்கு நூலில் உங்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறேன்” என்றேன். 

Why you thanked me for the novel? என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். பதில் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக இங்கே எழுதுகிறேன். 

The Science of Stock Market Investment நூலை வெளியிட்ட போது அதற்கு உறுதுணையாக நின்று மெய்ப்புப் பார்த்து மொழியை மேம்படுத்திக் கொடுத்தவர் அவர். நன்றிக் கடனை எப்படித் தீர்க்கப் போகிறேன் எனத் தெரியவில்லை என்று சாட்டில் சொன்னதற்கு, “More such books from you is great way to pay to the whole society” என பதில் அனுப்பினார். நன்றாக நினைவிருக்கிறது,

அப்படித்தான் ஒவ்வொருவரும். கொட்டு மொழக்கு நாவலை ஏற்கனவே நாகப்பன் அவர்களுக்கு, க.சீ.சிவக்குமார் அவர்களுக்கு அர்ப்பணம் செய்தாகி விட்டது. அதையும் தாண்டி சிலருக்கு நன்றி சொல்லியிருக்கிறேன். அதில் காமேஷும் ஒருவர்.

பட்டியல் இதோ..
எஸ்.பி.அண்ணாமலை, முருகேஷ் பாபு, பத்ரி சேஷாத்ரி, பா.ராகவன், மருதன், ஏ.ஆர்.குமார், நா.கதிர்வேலன், வா.மணிகண்டன், மனுஷ்ய புத்திரன், மாலன், அதிஷா, பெ.கருணாகரன், ’மல்லிகை மகள்’ சிவஞானம், ஜானகிராமன் வைத்தியநாதன், செந்தில் குமார், இலக்கியச்செம்மல் வெளங்காதவன், வீடு சுரேஷ்குமார், ’நீயா-நானா’ அந்தோணி, என்.ஸ்ரீராம், வா.மு.கோமு, பெருமாள் முருகன் மற்றும் நண்பர்கள் காமேஷ் ஜெயச்சந்திரன், கரூர் பெருமாள், R.S.பிரபு ஆகியோரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். இன்னும் சிலரை குறிப்பிடத் தவறியிருந்தால் அது ஞாபகம் தப்பிய குற்றந்தவிர வேறெதுவும் இல்லை.

இதில் குறிப்பிடாமல் விட்ட ஒரு பெயர் எதிர் வெளியீடு அனுஷ். ஆனால் அவர் நாவலுக்குள் வருகிறார். இன்னொருவர் பாஸ்கர் சக்தி. அவர் நாவலுக்கு முன் வந்து விட்டார்.

Sunday, January 04, 2015

ஃபெமினா தமிழ் நூல் விமர்சனம் - இரவல் காதலி

ஜூன் 2014 இதழில் வெளியான விமர்சனம்


Saturday, January 03, 2015

தினமலரில் செய்தி

கொட்டு மொழக்கு வெளியீடு குறித்த செய்தி தினமலரில் வந்திருக்கிறது.


எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்க்கண்ட வரிகளை எழுதியிருக்கிறார்.

//செல்லமுத்து குப்புசாமியின் “ கொட்டு மொழக்கு “ நாவலை நான் வெளியிட புகழ் பெற்ற ஓவியர் அச்சுதன் கூடலூர் பெற்றுக் கொண்டார். செல்லமுத்து குப்புசாமி தாராபுரத்தைச் சார்ந்தவர். சென்னையில் அய்.டி.யில் பணிபுரிகிறார்.முதல் நாவல் இ-நாவலாய் ஆங்கிலத்தில் வந்து, பின் தமிழில் வந்தது. ”இரவல் காதலி ” . இரண்டாம் நாவலை வா.மு.கோமு. வெளியிட்டார். கொங்கு மண்சார்ந்த நல்ல நாவல்

” நொய்யல் பிரதேசம் பற்றி இப்படியொரு நாவல் வந்ததில்லை ” என்று எல்லோரிடமும் வா.மு.கோமு சொல்லிக் கொண்டேயிருந்தார்

விழாவில் செல்லமுத்து குப்புசாமியிடம் அய்ஸ்வர்யா

கேள்வி 1:

இணையதளத்துக்காரர்களிடம் மொழி ஆழம் இல்லையே..

பதில்: தொடர்ந்து எழுதுகிறார்கள்.தொடர்ந்து எழுதுகையில் வசப்படும்.

கேள்வி 2: இது உங்களின் மூன்றாவது நாவல் .நீங்கள் பெரிய நாவல் எழுதுவதிலையே

பதில் 200 பக்கத்துக்கு மேல் நாவல் எழுதுகிறவர்களை படிப்பவர்கள் குறைவு. அவை அதிகம் விற்பதுவுமில்லை. பெரிய நாவல் எழுதுகிறவர்களை அண்ணாந்து பார்க்கிறேன்.

செல்லமுத்து குப்புசாமியின் “ மொட்டு மொழக்கு “ பற்றி பாஸ்கர் சக்தி சொன்னது : ”ஏற்கனவே எண்ணற்ற துன்பங்களுக்கு மத்தியில் தான் வாசிக்க வருகிறோம். அப்படி இருக்கையில் வாசிப்பு துன்பத்தை மேலும் கூட்டுவதாக அமையக் கூடாது. வாசித்த பிறகு கிடைக்கும் அனுபவம் அல்லது அதன் மூலம் உணர்கிற விஷயங்கள் துன்புறுத்தலாமே ஒழிய வாசிக்கின்ற நிகழ்வு ஒரு போதும் இம்சிக்கக் கூடாது. அப்படிப்பட்ட வாசிப்பில் இன்பமூட்டும் படைப்பு ’கொட்டு மொழக்கு’//

Friday, January 02, 2015

கொட்டு மொழக்கு வெளியீட்டு விழா

நாவல் வெளியீட்டு விழா நல்லபடியாக நிடந்தேறியது. அண்ணன் பாஸ்கர் சக்தி ‘கொட்டு மொழக்கு’ நாவலைப் பற்றி அறிமுக உரையாற்றினார்.

”புத்தகம் வாசகனைத் துன்புறுத்துவதாக அமையக் கூடாது. ஏனென்றால் ஏற்கனவே எண்ணற்ற துன்பங்களுக்கு மத்தியில் தான் வாசிக்க வருகிறோம். அப்படி இருக்கையில் வாசிப்பு துன்பத்தைக் கூட்டுவதாக அமையக் கூடாது. வாசித்த பிறகு கிடைக்கும் அனுபவம் அல்லது அதன் மூலம் உணர்கிற விஷயங்கள் துன்புறுத்தலாமே ஒழிய வாசிக்கின்ற நிகழ்வு ஒரு போதும் இம்சிக்கக் கூடாது. அப்படிப்பட்ட வாசிப்பில் இன்பமூட்டும் படைப்பு ’கொட்டு மொழக்கு’ என்றார்.

அவர் பேசியதை அப்படியே இங்கே டைப் செய்து போட முடியுமா தெரியவில்லை. தெளிவான அறிமுக உரையாற்றினார் பாஸ்கர். விழாவில் வீடியோவெல்லாம் எடுத்திருக்கிறார்கள். கிடைத்ததும் பகிர்கிறேன்.


சென்ற ஆண்டு போலவே இந்த வருடமும் ஆண்டில் முதல் நாள் நூல் வெளியீட்டு விழாவில் துவங்கியிருக்கிறது. சென்ற ஆண்டு புத்தகத்தை விமர்சனம் செய்த நபரை மட்டும் பேச வைத்திருந்தார் மனுஷ்யபுத்திரன். இயக்குனர் சீனு ராமசாமி மட்டும் இரவல் காதலி குறித்துப் பேசினார். பத்துப் புத்தகங்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்த போது அவ்வளவுதான் செய்ய முடியும். ஆனால் இந்த வருடம் ஐந்து புத்தகங்கள் மட்டுமே வெளியாயின. அதனால் என்னிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க வைத்திருந்தார்.

முன் கூட்டியே தெரிவிக்கப்படாத ஏற்பாடு அது. ஈரோடு புத்தக கண்காட்சியின் போது நடந்த குருத்தோலை வெளியீட்டில் நடுகல் பதிப்பகத்தினர் நிகழ்ச்சி நிரலிலேயே ‘ஏற்புரை: செல்லமுத்து குப்புசாமி’ எனப் போட்டிருந்தனர். ஆனால் நேற்று அப்படியெல்லாம் எவ்விதமான முன்னெச்சரிக்கையும் செய்யவில்லை.

நிகழ்ச்சித் தொகுப்பாளினி, “நீங்க ஏன் ஸார் எப்பவுமே 250 பக்கத்துக்குள்ளயே நாவல் எழுதறீங்க?” என்று கேள்வியை வீசினார். மனுஷ்ய புத்திரனோ, செல்வியோ எழுதிக் கொடுத்திருப்பார்கள். இரண்டாவது கேள்வி: “500 பக்கம், 600 பக்கம் என நாவல் என் எழுதுகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

அதைப் பற்றி முன்னுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

“விருதுகளை வாங்கிய எழுத்தாள நண்பர் ஒருவர் ஐநூறு பக்கங்களுக்குக் குறையாமல் ஒரு நாவலை எழுதுமாறு உரிமையோடு சொன்னார். அவர் குறிப்பிட்ட ’இரவல் காதலி’ மட்டுமல்ல, அவர் ஆலோசனை வழங்கி முடித்த பிறகு எழுதிய ‘ஆத்துக்கால் பண்ணையம்’ ‘குருத்தோலை’ மற்றும் ’கொட்டு மொழக்கு’ ஆகிய அனைத்துமே இருநூறு பக்கத்திற்கு மிகாதவை. கொட்டு மொழக்கு வெளியீட்டு விழாவிற்கு வருமாறு அவரை அழைத்ததற்கு, ”எத்தனை பக்கம்?” என்றுதான் முதலில் கேட்டார். ஐநூறை எட்டவில்லை என்பதில் அவருக்கு ஏமாற்றம். அவ்வாறு தலையணை சைஸில் வெளியாகும் நூல்கள் காலத்தால் அழியாதவையென்றும், அவையே விருதுகளுக்குப் பரிசீலிக்கப்படுமென்றும், அறிவுஜீவிகள் மட்டத்தில் விவாதிக்கப்படுமென்றும் என் மீதான அக்கறையில் அவர் சொல்லி வந்திருக்கிறார்.

வேற்று கிரகத்திற்கு ராக்கெட்டில் செல்கிறவர்களைக் கண்டு கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்வதில் எனக்குத் தயக்கமோ, பொறாமையோ கிடையாது. ஆனால் நானாக வலியச் சென்று அந்த ராக்கெட்டில் ஏறுவேனா என்பது சந்தேகம். அப்படித்தான் ஐநூறு பக்கங்களைக் கடந்து நாவல் எழுதுவது. நம்மால் ஆகாத காரியம் அது. அப்படி செய்வோரை கொட்டு மொழக்கோடு கரவொலியெழுப்பிக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகவே காத்திருக்கிறேன்.”

இதையே வேறு வார்த்தைகளில் பதிலாகச் சொன்னேன்.

வெளியீட்டு நிகழ்வினைப் பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன். நிகழ்வில் சுப்ரபாரதிமணியின் புத்துமண் நூலும், அபிலாஷின் ரசிகன் நூலும், விநாயக முருகனின் சென்னைக்கு அருகில் நூலும் வெளியாயின. கூடவே மலையாளத்தில் ட்டி.டி.ராமகிருஷ்ணன் எழுதிய பிரபலமான நாவல் பிரான்சிஸ் இட்டிக்கோராவின் தமிழாக்கமும் வெளியானது. சிறப்புரையாற்ற அழகிய பெரியவன், முருகேச பாண்டியன், அதிஷா, கல்பற்ற நாராயணன் ஆகியோர் வந்திருந்தனர்.

சுப்ரபாரதி மணியன் மற்றும் அழகிய பெரியவன் ஆகியோரை முதன்முறையாகச் சந்தித்ததில் மகிழ்ச்சி.


கொட்டு மொழக்கு நூலை வலது பக்கமுள்ள புத்தகத்தின் படம் மீது கிளிக் செய்து ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம்.