Friday, February 27, 2015

நான் ஏன் புலியூர் முருகேசன் பக்கம் நிற்கிறேன்?

புலியூர் முருகேசன் மீதான தாக்குதலைக் கண்டிப்போம் என்ற பதிவிற்கு என் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அதில் அநேகம் பேர் கொங்கு மக்கள்.

கொங்கு என்றாலே குறிப்பிட்ட ஒரு சாதியை மட்டும் குறிப்பிடுவதாக இன்றைக்கு மாறியிருக்கிறது. கொங்கு வேளாளர் எனும் கவுண்டர் சமுதாயத்தைக் குறிப்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். நான் கேள்விப்பட்ட மட்டிலும் பதினெட்டு கொங்குச் சாதிகள் உள்ளன. (புலவர் ராசுவின் ஆய்வுகளில் நாற்பத்திச் சொச்சம் சாதியினர் கொங்கு நாட்டில் குடியேறிய வரலாற்றுத் தரவுகளைக் காண்கிறோம்)

கொங்கு என்பது பிராந்தியம். கொங்குச் சீமை கவுண்டர்களுக்கு மட்டுமே உரியதல்ல என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் இருப்பவர்களுக்கு அது தெரிவதில்லை. கொங்குத் தமிழில் எவன் பேசினாலும் அவனைக் கவுண்டனாக முத்திரை குத்தி விடுகிறார்கள். பேசினால் மட்டுமல்ல.. எழுதினாலும் அப்படித்தான்... கொங்கு மொழியில் எழுதுகிற அத்தனை பேர் மீதும் குத்துவதற்கான ஜாதி முத்திரையச் சுமந்தவாறு திரிகிற இலக்கிய உலகின் self appointed தாசில்தாரர்கள் மற்றவர்கள் சாதி வெறியோடு அலைவதாக பொது வெளியில் கூவுகிறார்கள். இந்த தாசில்தார்களுக்கு ஆர்.ஷண்முக சுந்தரம், பெருமாள் முருகன், வா.மு.கோமு, வா.மணிகண்டன், என்.ஸ்ரீராம், க.சீ.சிவக்குமார், தேவிபாரதி, செல்லமுத்து குப்புசாமி என அத்தனை பேரும் ஒரே ஜாதி... கவுண்ட ஜாதி... அப்படி நினைத்திருந்தால் ஸாரி தாசில்தார்..... இந்தப் பட்டியிலில் இருக்கும் சிலர் தங்களுக்குள் நெருக்கமாகப் பழகினாலும் கூட ஒருவரது ஜாதி இன்னவென்று இன்னொருவருக்குத் தெரியாது.. தெரிந்து கொள்ளவும் முயற்சித்ததில்லை. அது தேவையுமில்லை.

புலியூர் முருகேசன் விஷயத்தில் எனது முந்தைய பதிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த அத்தனை பேரும் கொங்குப் பகுதி மக்கள் - அதில் பெரும்பாலனவர்கள் கொங்கு வேளாளர்களாக இருக்க வேண்டும்... (அப்படி இல்லாத சிலரும் உண்டு) இன்னும் சில பேர் வருத்தமடைந்திருக்கலாம்.. பொது வெளியில் எதற்காகப் பேச வேண்டும் என நினைத்து அவர்கள் அமைதியாக இருக்கலாம். முதலில் முருகேசன் தாக்கப்பட்டதை நினைத்து வருந்தியவர்கள் பிறகு கதையை வாசித்த பிறகு மனதை மாற்றிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

சில கமெண்டுகள்:
’நீங்களும் அடி வாங்கி பெரிய மனுஷன் ஆகணும்னு ஆசை படுறீங்க போல இருக்கு..?? ஒரு ஜாதியை குறிப்பிட்டு செக்ஸ் கதை எழுதரவநேல்லாம் படைப்பாளியா..??? நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் காட்சி நினைவுக்கு வருதுங்க சார்..”

”இப்படி எல்லாம் எழுத தொன்றியிருக்குனா (இதையும் சப்போர்ட் பண்ண தொனியிருக்குன்னா) நீங்கலாம் எங்க பிறந்திருப்பீங்க? எங்க வளர்ந்திருப்பீங்க,, பிரமிப்பா இருக்கு சார்..”

“இதுக்குப்பேர்தான் கருத்துச் சுதந்திரமா?பெருமாள் முருகன் கதை வேறு இது வேறு”

“இது உள் நோக்கத்தோடு ஒரு இனத்தின் ஒரு ஊரின் ஒரு பிரிவு மக்களை கேவலப்படுத்துவதர்க்காக எழுதப்பட்டது. பெருமாள் முருகன் கதையுடன் இதை ஒப்பிடுவது சரியாகத் தெரியவில்லை.”

”அடுத்த சாதியை பற்றி இழிவா எழுதுறதுதான் கருத்து சுதந்திரமா?? ஏன் உங்க குடும்பத்தை பத்தி எவ்வளவு கேவலமானதாக எழுதுமுடியுமே , எழுதுங்க நாங்க அதுக்கு போராட மாட்டோம்”

“saringa ilakia vanthi... you have all the rights to write what ever your mind masturbates”

இன்னும் சில எதிர்ப்புகள்..

புலியூர் முருகேசனின் கதை வெகு காத்திரமானது. கொங்கு வேளாளர் சமூகத்தில் பெருங்குடி கூட்டத்தினரைப் பற்றிக் குறிப்பிடாமல் எழுதியிருந்தாலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். பெருங்குடி கூட்டம்(உட்பிரிவு - ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளிகள்.. திருமணம் செய்வதானால் வேற்றுக் கூட்டத்தில் பெண்ணெடுக்க வேண்டும். ஒரே கூட்டத்தில் திருமணம் செய்து கொண்டால் அண்ணன்-தங்கை கட்டிக் கொண்ட கதையாகி விடும்) என்பது கொங்கு மண்டலம் நெடுகிலும் கடவுளாகக் கருதப்பட்டும் வழிபடும் அண்ணமார் சாமிகளான பொன்னர், சங்கர் பிறந்த கூட்டம். அந்த பெருங்குடி கூட்டத்தினைப் பற்றி கதையில் எழுதியதுதான் பிரச்சினையாகிப் போனது.

புலியூர் முருகேசனுக்கு கவுண்டமார்கள் மீது காழ்ப்புணர்ச்சி இருப்பதாக நான் கருதவில்லை. அடிப்படையில் அவர் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட். அதுவும் உள்ளூரில் வசிப்பவர். எல்லா சமூகத்தினரிடமும் நெருக்கமாகப் பழக வேண்டிய நிலையில் இருப்பவர். தீவிர இலக்கியம் படைக்கிற வேகத்தில் உள்ளதை உள்ளபடியே எழுதித் தொலைத்து விட்டால் போல. திருநங்கையாகப் பிறக்க நேர்ந்த ஒருவரின் உண்மையான கதையைத்தான் அவர் எழுதியிருப்பதாக நண்பர் ஒருவர் சொல்கிறார். சிறு பத்திரிக்கைகளில் எழுதும் போது எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அதிகபட்சம் நூறு பேர் வாசிப்பார்கள். மீறினால் ஆயிரம் பேர். அதுவும் இம்மாதிரியான படைப்புகளை அதிகமாக வாசித்துக் கடந்து வந்தவர்களாக இருப்பார்கள். அதனால் பொது மக்களின் ரியாக்‌ஷன் எப்படியிருக்கும் என எழுதுகிறவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

இப்போது தெரிந்திருக்கும். கதையில் குறிப்பிட்ட சில பெயர்கள் உண்மையாகவும் இருக்கலாம். தனிப்பட்ட முறையில் நேரடியாகவே அவர்களைப் புண்படுத்துவதோடு, பெருங்குடி கூட்டத்தினரையும் சினம் கொள்ளச் செய்திருக்கலாம். உள்ளூர் ஆட்கள் வந்து பேசியிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில வார்த்தைகளை மட்டும் அடித்து விட்டு மீதமிருக்கும் பிரதிகளை விற்பதாகவும், அடுத்த பதிப்பில் முற்றிலுமாக நீக்கி விடுவதகாவும் முருகேசன் கூறியிருக்கிறார். (இது வரைக்கும் அதிகபட்சம் நூறு பிரதிகள் விற்றிருக்குமா தெரியாது) பிரச்சினை அத்தோடு முடிந்தது.

ஆனால் பிரச்சினைகள் முடிவதை சிலர் விரும்புவதேயில்லை. அவரைத் தேடி வந்த அரசியல் ரவுடிகள் தாக்கியிருக்கிறார்கள். அதுதான் பிரச்சினையே இப்போது. தெற்குச் சீமை போல, வடக்கு மாவட்டங்களைப் போல மேற்கு மாவட்டங்களில் சாதிச் சண்டை பெரிதாக நடந்தததில்லை. ஓரிரு சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஒடுக்கு முறைகள் இருக்கலாம். தனி நபர் சச்சரவுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பெரிய பிரச்சினைகள் வந்ததில்லை.

புலியூர் முருகேசன் விவகாரம் இயல்பாக அடங்கியிருக்க வேண்டிய ஒன்று. அதைத் தூண்டுவதில் யாருக்கோ ஆதாயம் இருக்கிறது போல. அதுதான் பிரச்சினை. அதைத்தான் கண்டிக்க வேண்டியிருக்கிறது. புலியூர் முருகேசன் மோசமான அருவருப்பான எழுத்தையே எழுதியிருக்கட்டும். அதற்காக கட்டையைத் தூக்கும் அதிகாரத்தை யார் தந்தது? யார் மனதையும் புண்படுத்தாமல் எழுத்தாளனால் எழுதவே முடியாது. காயப்படுத்தாமல் எழுதினால் அது எழுத்தாகவே இருக்காது. எழுத்தாளனின் வேலையே மனிதனைத் தூங்க விடாமல் செய்வதுதான். காயப்படுத்துவதுதான் எழுத்து.

எப்படி பாதுகாப்பாக எழுதினாலும் ஓரிரு வரிகளையாவது மேற்கோள் காட்டி யாரோ ஓருவரைக் காயப்படுத்தியதாகச் சொல்ல முடியும். இப்போது, “பெருமாள் முருகன் மேட்டர் வேறு.. இது வேறு” என்கிறார்கள். திடீரென்று பெருமாள் முருகன் நல்லவர் ஆகி விட்டார். ஆக இந்த அளவுகோலை வைப்பது யார் என்றுதான் தெரியவில்லை. அதுதான் பதட்டமாக உள்ளது. இதே குறிப்பிட்ட சமுதாயத்தின் பெருமையைப் பேசும் படைப்பாக இருந்தால் கொண்டாடுவீர்கள் அல்லவா? “ஏய்.. ஓவரா புகழாதீங்க பாஸ்... இனிமே பிரிண்டுக்கு அனுப்பாதீங்க” என யாரும் சொல்வதில்லை.

புலியூர் முருகேசன் செய்தது தவறாக இருக்கட்டும். முருகேசனே பெருங்குடி கூட்டத்தில் ஒரு ஆளாக இருந்து இன்னொருவர் இப்படி எழுதியிருந்தால் என்ன செய்திருப்பார் எனபது அவருக்குத்தான் தெரியும்.. ஆனால் இந்த ‘நான் ஏன் மிகையலங்காரம் செய்து கொள்கிறேன்’ கதையை எழுதிய போது அது தவறென்று அவருக்குத் தெரிந்திருக்காது. அது நல்ல கதையென்று நினைத்து எழுதியிருக்கலாம். அதை உணர்ந்த பிறகு சரி செய்வதோ, சமரசம் செய்வதோ இயல்பு. பொன்னர்-சங்கர் தொடர் தந்தி தொலைக்காட்சியில் வந்த போது அதற்கு நடிகர் சிவகுமார் முன்னுரை வழங்குவார். அதில் ஓரு பகுதி வேட்டுவ சமூகத்தினரைப் புண்படுத்துவதாகப் போராடியதில் அவரே முன் வந்து வருத்தம் தெரிவித்தாரே! அப்படியானால் அவர் தவறு செய்து விட்டாரா என்ன? .

எழுத்தாளர்களால் பெரிய புரட்சிகளை உண்டாக்கி விட முடியுமென்று நான் நம்பவில்லை. அவனது பணிவு, சமரசம் எல்லாம் பதிப்பாளரிடமே ஆரம்பித்து விடுகிறது. அதன் நீட்சியாக சமூகத்தில் சமரசம் செய்து கொள்ளவும், சமூகத்தின் பொதுவான மதிப்பீடுகளுக்கு உட்பட்டு எழுதவும் அவன் தயங்குவதில்லை - கொஞ்சம் சிரமப்பட்டாலும் கூட. இதுதான் எதார்த்தம்.

நான் இந்த நிகழ்வினை இத்தனை தூரம் எதிர்க்கவும், முருகேசனை தார்மீக ரீதியாக ஆதரிக்கவும் அடிப்படையில் ஒரே காரணம்தான் உள்ளது. அது சுயநலம். இன்றைக்கு அவருக்கு நடப்பது நாளைக்கு நமக்கு நடக்கலாம் என்ற எச்சரிக்கை.

ஒரு பிராந்தியத்தையும், அதன் மொழி மற்றும் வாழ்க்கையும், காலத்தையும் படம் பிடிக்கும் கதைகளில் சாதியும், எள்ளலும் இல்லாமல் எழுத முடியுமா என்று தெரியவில்லை. புலியூர் முருகேசனின் கதை அப்படிப்பட்ட கதையென்று சொல்லவில்லை. ஆனால் இம்மாதிரி நிகழ்வுகள் ஆர்.ஷண்முக சுந்தரம் போட்டுக் கொடுத்த பாதையில் யாரும் நடக்காமல் செய்து விடும் என நினைக்க வருத்தமாக உள்ளது. அது பற்றியெல்லாம் கவலையில்லை... இன்னொரு பா.ம.க.வை கொங்கு நாட்டில் உருவாக்குவேன் என யாரோ நினைப்பதற்கு உடந்தையாக இருப்போம் என நிற்காதீர்கள்.

Thursday, February 26, 2015

புலியூர் முருகேசன் மீதான தாக்குதலைக் கண்டிப்போம்

ஆம்பிரம் என்ற பெயரைக் கேட்டதும் இது என்னடா பெயரென்று எனக்குத் தோன்றியது. இன்னும் சொல்லப் போனால் அவசர அவசரமாகப் படித்ததில் ஆபிரகாம் என்று படித்த்துத் தொலைத்து விட்டேன். கரூரில் இருந்து ’ஆபிரகாம் பதிப்பகம்’ என்ற பெயரில் புதுப் பதிப்பகம் என்றுதான் நினைத்தேன். பிறகு நிதானமாகப் பார்த்த போது ’ஆம்பிரம்’ புலப்பட்டது.

தாம்பரம் போல எதாவது ஒரு பெயராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். பிறகு நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது அது ஒரு முன்னொரு காலத்தில் கரூரில் ஓடிய நதியென்று சொன்னார்கள். இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு அமராவதியைக் கூட அப்படித்தான் சொல்லுவார்கள். அமராவதி அமராவதின்னு கரூர்ல ஒரு ஆறு ஓடுச்சாம் என்று…

சில மனிதர்களுக்கு நதியின் மீதான ஈடுபாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நானும் கூட அப்படிப்பட்ட கிறுக்கன் என அறிவித்துக் கொள்வதில் கூச்சமேதுமில்லை. க.சீ.சிவக்குமார் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். அவரது கதைகளில் அண்டமாநதி என்று அடிக்கடி குறிப்பிடுவார். அந்தப் பெயரில் ஒரு பிரமாண்டம் ஒளிந்திருக்கிறது. அண்டமாநதி… அண்டம் என்றால் உலகம்.. மாநதி என்றால் பேராறு.. நான் அண்டமாநதியை பிரம்மபுத்திராவுக்கும், கங்கைக்கும் நிகராக கற்பனை செய்திருந்தேன். தாராபுரம்-கரூர் சாலையில் கன்னிவாடியைக் கடக்கும் போதெல்லாம் அண்டமாநதியைத் தேடியதுண்டு. ஒரு வேளை அந்தப் பேராறு சாலையைக் கடக்காமல் அதற்கு இணையாக கிழமேற்கில் ஓடுகிறதோ என்னவோ என நினைத்துக் கொள்வேன்.

பிறகு க.சீ.சிவக்குமாரை பெங்களூரில் சந்தித்த போது இது பற்றி வினவினேன். “அதுல எப்பவாவது தண்ணி போகும்” என்றார்.

”நல்லதங்காள் ஓடை மாதிரீங்களா?”

“அய்யோ அத்தாச்சோடு இல்லீங்க.. நல்லதங்கா ஓடை பெருசல்லோ!”

நல்லதங்காள் ஓடையில் ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் ஓடும். அதையே பெரியதென்கிறார் அவர். அப்படியானால் அண்டமாநதி? அது கடந்த காலத்தின் அடையாளம். அதன் மீதான ஈர்ப்பை மனிதனால் இலகுவாக உதற முடிவதில்லை. ஆம்பிரம் கூட அப்படித்தானிருக்கும்.

ஆம்பிரம் பதிப்பகம் நண்பர் புலியூர் முருகேசன் துவங்கினார். பழகுவதற்கினிய நண்பர். பலாப் பழம் போல பார்க்கத்தான் கரடுமுரடான ஆள். மூன்று ரவுண்டுக்கு மேல் குழந்தையாக மாறிவிடும் பச்சை மனதுக்கார். அதிலும் பாடகி ஸ்வர்ணலதாவைப் பற்றிப் பேசினால் அழுது விடுவார்.

அந்த முருகேசனைத்தான் நேற்று கரூரில் காட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு அடித்திருக்கிறார்கள். காவிரிக்கு மேற்கே பிறந்து காவிரிக்குக் கிழக்கே ஒற்றை எம்.எல்.ஏ.வாக தனியரசு நடத்திக் கொண்டு ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் ‘கொங்குச் சிங்கம்’ ஒன்றின் ஆட்கள் இதில் ஈடுப்பட்டுள்ளனர் என்கிறார்கள்.

”எழுத்து என் ஜீவிதம். ஆசிரியப் பணி என் ஜீவனம்” என்று சொன்ன பெருமாள் முருகன் வழக்கு இப்போது சென்னையில் நடக்கும் சூழலில் புலியூர் சம்பவம் கிலியூட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசிய எழுத்தாளர் தேவிபாரதி கூட தனது அடுத்த புத்தகத்தில் பல திருத்தங்கள் செய்த பிறகே வெளியிட வேண்டும் என்று விசனப்பட்டார். இது மிகவும் அபாயகரமான போக்கு.

சென்னைக்கு மிக அருகில் விமர்சனத்தில் குறிப்பிட்டது  போல எழுத்தாளர்கள் தமது கதைகளில் இனி சினிமாவினைப் பின்பற்றி ‘பண்ணையார்’ ‘முனியன்’ என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். கீழ் சாதி நாயே என்று எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் குறிப்பிட்ட சாதிப் பெயரைக் கொண்டு எழுதினால் போச்சு. பண்ணையாரின் இளம் மனைவி கீழ்சாதி முனியனோடு மாட்டுக் கொட்டகையில் கள்ள உறவு கொண்டிருந்ததைப் பற்றி எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். பண்ணையாருக்குப் பதில் தேவர், நாயக்கர், நாடார், கவுண்டர், வன்னியர் என்றோ, முனியனுக்குப் பதில் மாதாரி, பள்ளர், பறையர் என்றோ எழுதினால் ஆபத்தினை வலியச் சென்று வரவேற்றதாக ஆகி விடும். தமிழர்கள் எல்லாம் முட்டாள் பசங்க என்று எழுதினால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது - அது உண்மையாகவே இருந்தாலும் சொல்ல முடியாது. எழுத்தாளனே அந்த சாதிக்காரனாக இருந்தாலும் சொல்ல முடியாது. யாருக்கும் தெரியாமல் தனிமையில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

புலியூர் முருகேசனின் ”எனக்கு பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு” சிறுகதைத் தொகுப்பில் ‘நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்’ என்ற கதைக்கு எதிர்வினையே அவர் மீதான தாக்குதல். அதை ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன்.முடிந்தால் திருச்செங்கோட்டைப் போல கரூரில் கடையடைப்பு நடத்துங்கள்! உலகம் தெரிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பாக அமையட்டும்.

நான் ஏன் புலியூரை ஆதரிக்கிறேன் என்பதற்கான பதில் விரிவாக இந்த இணைப்பில்

Saturday, February 14, 2015

சென்னைக்கு மிக அருகில்

சென்னை என்பது உண்மையில் என்ன? அது ஊரா, உணர்வா, பிராந்தியமா, அல்லது நாளுக்கு நாள் தனது மாயக் கரங்களை விரித்தபடி ஒரு பலூனைப் போல தன்னைத் தானே ஊதிப் பெருக்கிக் கொள்ளும் ராட்சத உருவமா?

’ரியல் எஸ்டேட் பூம்’!

ஐந்து இலட்சத்துக்கு வாங்கிய இடம் ஐம்பது இலட்சமானது, எட்டு இலட்சத்துக்கு வாங்கிய வீடு எண்பது இலட்சம் ஆனது. 2003 க்கும் 2013 க்கும் இடைப்பட்ட கால கட்டம் ரியல் எஸ்டேட்டின் பொற்காலம். சென்னையில் மட்டுமல்ல. அநேகமாக இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் இதே கதைதான். கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வைத்து செங்கல்பட்டில், மதுராந்தகத்தில், ஸ்ரீபெரும்புதூரில், ஒரகடத்தில், இன்னும் சில புறநகர்ப் பகுதிகளில் வீட்டு மனைகளை வாங்கிப் போட்டபடியே இருக்கிறோம்.

இந்த ரியல் எஸ்டேட் பூமில் நடந்தது என்ன? என்னெண்ண சக்திகள் இதில் இயங்குகின்றன? இடம் வாங்குகிறவனும், விற்கிறவனும் வெறும் பொம்மைகள் மட்டுமே! அவர்களைத் தாண்டி எத்தனை பேர்கள்? எத்தனை கரங்கள்? ஆசைகள்? துரோகங்கள்? போட்டிகள்? பொறாமைகள்?

எல்லா டிவியிலும் மார்க்கெட் போன நடிகர்களை வைத்து ஓணான் கூட முட்டையிடாத பகுதியில் பிரிக்கப்பட்ட மனைகளை எல்லாம் சென்னைக்கு அருகில், சென்னைக்கு மிக அருகில் என்று விளம்பரம் செய்கிறார்கள். அதன் பின்னணியில் விநாயக முருகன் எழுதிய நாவல் ‘சென்னைக்கு மிக அருகில்’.

நாவல் தாம்பரத்துக்கு மேற்கேயுள்ள முடிச்சூர் சாலையில் பிரதானமாகச் சுழல்கிறது. அங்கு காலங்காலமாக விவசாயம் செய்து வந்த சித்திரை என்ற பெரியவர் தனது பேரன், பேத்திகளின் நெருக்குதலின் பேரில் நிலத்தை விற்க விழைவதே கதை. அவரது மனப் போராட்டங்களை வெகு அழகாகப் படம் பிடித்திருக்கிறார் வி.மு.

நித்யானந்தா-ரஞ்சிதா விவகாரம், லஷ்மி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேமா?’டி.வி புரோகிராம், சாதிப் பிரச்சினையில் சிக்குண்ட இளவரசன் - திவ்யா விவகாரம் என கடந்த சில ஆண்டுகளில் நடந்த முதன்மையான current affairs எல்லாம் ஒன்றாகக் கலக்கி, அவற்றை கதையோடு பின்னி அழகாகக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக குருஜி விஷயத்தினை இதில் சேர்த்தது சாரு நிவேதிதாவை மனதில் வைத்தா என்ற சந்தேகம் எழுகிறது. விநாயக முருகனை நேரில் பார்க்கும் போது விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் தேங்காய் பொறுக்கிய பையன் அருள்வாக்குச் சொல்லி பிரபலமான பிறகு பத்திரிக்கைகள் தேடி வந்தன. எழுத்தாளர்கள் புகழ்ந்தனர் என்றெல்லாம் பேசுகிறது நாவல். அந்த எழுத்தாளர் யாராக இருக்குமென்று அவதானித்ததும் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது.

கடந்த காலத்தில் (பெரியார், நேரு, காந்தி) ஒரு அய்யரும், பிள்ளைமாரும் பேசிக் கொள்ளும் போது சாதிய அடையாளங்களோடு உரையாடலைத் தந்திருக்கும் எழுத்தாளர், இடைநிலைச் சாதிப் பெண்ணொருத்தி தாழ்த்தப்பட்ட சாதிப் பையனைக் கல்யாணம் செய்து கொண்டதால் வந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது போது என்ன சாதி என்ற அடையாளங்களைப் பற்றி எழுதாமல் உஷாராகத் தவிர்த்திருக்கிறார்.

கிரேட். இந்தப் புத்தகத்தின் மற்ற எந்த இடத்தையும் விட இங்குதான் விநாயக முருகன் தனித்துத் தெரிந்தார் எனக்கு. எதார்த்த நாவல் எழுதும் போது, அதிலும் குறிப்பாக கிராமப் பின்னணியில் எதார்த்த நாவல் எழுதும் போது ஜாதிப் பெயரைக் குறிப்பிடாமலும், அந்த ஊரில் பேசப்ப்படும் வட்டார மொழியில் கதாப் பாத்திரங்கள் பேசாமலும் எழுதினால் முறையாக இருக்காது என்ற நம்பிக்கை எனக்குண்டு. அப்படி எழுதப்படும் பதிவுகளுக்கு சிக்கல் உருவாகும் காலமிது. குறிப்பாக பெருமாள் முருகனின் மாதொரு பாகன் பிரச்சினையை அடுத்து அந்த நம்பிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் போலிருக்கிறது.

இல்லையென்றால் சினிமாவில் வருவது போல ‘பண்ணையார்’ ‘முனியன்’ என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். கீழ் சாதி நாயே என்று எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் குறிப்பிட்ட சாதிப் பெயரைக் கொண்டு எழுதினால் போச்சு. பண்ணையாரின் இளம் மனைவி கீழ்சாதி முனியனோடு மாட்டுக் கொட்டகையில் கள்ள உறவு கொண்டிருந்ததைப் பற்றி எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். பண்ணையாருக்குப் பதில் தேவர், நாயக்கர், நாடார், கவுண்டர், வன்னியர் என்றோ, முனியனுக்குப் பதில் மாதாரி, பள்ளர், பறையர் என்றோ எழுதினால் ஆபத்தினை வலியச் சென்று வரவேற்றதாக ஆகி விடும். தமிழர்கள் எல்லாம் முட்டாள் பசங்க என்று எழுதினால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது - அது உண்மையாகவே இருந்தாலும் சொல்ல முடியாது. எழுத்தாளனே அந்த சாதிக்காரனாக இருந்தாலும் சொல்ல முடியாது. யாருக்கும் தெரியாமல் தனிமையில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

குறிப்பாக பெருமாள் முருகன் நிகழ்வுக்குப் பின்னர் எழுத்தாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். விநாயக முருகனுக்கு அத்தகைய நெருக்கடிகள் இருந்திருக்காது. அதை மனதில் வைத்தும் எழுதியிருக்க மாட்டார். அவரது எழுத்து ஸ்டைலில் அது இயல்பாக வந்திருக்கும் என்றே கருதுகிறேன். எனினும் நுட்பமாகக் கவனிக்க வேண்டியது விஷயமாக அமைகிறது.

ராஜீவ் காந்தி சாலையைப் போலவே சென்னைக்கு மிக அருகிலும் விநாயக முருகனுக்கு போதிய கவனத்தையும், பெயரையும் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக இரண்டு அம்சங்கள்.
1. விநாயக முருகனின் மொழியில் லயித்துப் போன காட்சியொன்றில் வின்செண்டும், நடிகை காவ்யாஸ்ரீயும் கலவி கொள்கிறார்கள்.

“அவர்கள் எவ்வளவு நேரம் ஆடையின்றிக் கிடந்தார்கள், எத்தனை முறை புணர்ந்தார்கள் என்று கணக்கில்லை. ஒரு உடலை உருக்கி இன்னொரு உடலுக்குள் ஊற்றி விளையாடினார்கள். இர்ண்டு உடல்களையும் உருக்கி ஒரே உடலாக மாற்றினார்கள். உலகின் இறுதி நாளன்று சந்தித்துக் கொள்ளும் பாம்புகள் போன்று ஆவேசமாக ப்ரியம் கொண்டார்கள். ப்ரியத்தின் கறை படிந்த படுக்கையைத் தாண்டி மேலே சூழலும் மின்விசிறி உதவியால் அறையெங்கும் ப்ரியத்தின் வாடை வீசிக் கொண்டிருந்தது.”

2. நாவல் இறுதிக் கட்டத்தை அடையும் போது பெரியவர் சித்திரை விவசாய நிலத்தை விற்று வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுத்து விடுகிறார். தனிமையில் வந்து அந்த மண்ணில் அமர்கிறார். அப்போது அவர் மனதில் ஒரு சிந்தனை ஓடுகிறது.
“இந்த வயலாச்சும் சென்னைக்குப் பக்கதுல இருக்கறதால இவ்வளவு பணம் வருது. ஆனா பட்டண வாடையே படாத ஜனங்க இருக்கற சின்னச்சின்ன கிராமங்கள் எத்தனை இருக்கும். அவங்களால வீட்டு மனையாக் கூடப் பிரிக்க முடியாதே. அவங்க எல்லாம் காலம் முச்சூடும் வெம்பி வெம்பித்தான் சாகணுமா? எத்தனை பேர் வெஷத்தைக் குடிச்சுட்டு வயல்ல செத்துப் போறத பேப்பர்ல போடுறாங்க?”

Wednesday, February 11, 2015

ஒரு நல்ல காரியம்

இரண்டாவது நாளாக பெங்களூரில் இருக்கிறேன். பயங்கரமான முதுகு வலி. படுத்தியெடுக்கிறது. குளிர் காலம் வந்தாலே எல்லா வருடமும் அப்படித்தான். ஆனால் இந்த வருடம் சற்று தூக்கலாக இருக்கிறது. அதனால் எங்கும் செல்வதாக உத்தேசமில்லாமல் படுத்து ஓய்வெடுக்க நினைத்திருந்தேன்.

வா.மணிகண்டன் அந்த ஏரியாவில்தான் வசிக்கிறார். பெங்களூர் வந்திருப்பதைச் சொன்னதும், ”நாராயண ஹிருதாலயா வரைக்கும் போய்ட்டு வந்திரலாம். ஒரு செக் குடுத்துட்டு வரணும். வரீங்களா?” என்று கேட்டார்.

டூ வீலரில் சென்றால் முதுகு வலி கூடும். அதனால் முதலில் வேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆறு கிலோ மீட்டர் என்றதும் கூடச் சென்றேன். அதுவும் ஓசூர் ரோடு… மேடு பள்ளம் இருக்காது…

அங்கே போய்ப் பார்த்த பிறகுதான் தெரிந்தது நமக்கிருக்கும் முதுகு வலியெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லையென்று.


போட்டோவில் இருக்கும் இந்தச் சிறுவனின் பெயர் தினேஷ். பெற்றோர் நீலகிரியில் தோட்டத் தொழிலாளர்கள். பையனுக்கு split cord malformation. முதுகிலே ஸ்பீட் பிரேக்கர் மாதிரி இருக்கிறது. இரண்டு அறுவைச் சிகிச்சை தண்டு வடத்திலே செய்ய வேண்டுமாம். அதற்கான மருத்துவ வசதிகள் கோவையில் இல்லாத காரணத்தால் பெங்களூருக்கு வந்திருக்கிறார்கள். ஓசூர் ரோட்டில் உள்ள நாராயண ஹிருதயாலயா மருத்துவமனைக்கு அருகில் ஒரு ஹோமில் தங்கியிருக்கிறார்கள்.

முதலாவது ஆபரேஷனுக்கு சுமார் ஒன்றரை இலட்சம் ஆகுமாம். தனது நிசப்தம் அறக்கட்டளை வாயிலாக தினேஷுக்கு உதவச் செல்லும் போது வா.மணிகண்டன் என்னையும் அழைத்திருந்தார். இந்தப் பையனைப் பற்றி ’மலைச் சொல்’ பால நந்தகுமார் பரிந்துரைத்திருக்கிறார். ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையை மணியின் நண்பர் வழங்க நானும் அருகினில் இருந்தேன். ”மிச்சப் பணத்துக்கு என்ன செய்வீர்கள்?” என்று கேட்டதற்கு, “நெறைய எடத்துல கேட்டிருக்கோம் சார்” என்று மட்டுமே சொன்னார் அந்த எளிய தந்தை.

குருத்தோலை அறக்கட்டளையில் இருந்து பத்து அல்லது இருபதாயிரம் கொடுப்பதாகச் சொல்லி வந்திருக்கிறேன். அது மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்காது. பெங்களூர் நண்பர்கள் யாராவது நேரடியாக உதவ விரும்பினால் தினேஷின் பெற்றோரைச் சந்தித்து உதவுங்கள். வெளியூர் நண்பர்கள் உதவ விரும்பினால் குருத்தோலைஅறக்கட்டளைக்கு அனுப்பினால் ஒட்டு மொத்தமாக சேர்த்துக் கொடுக்கவும் செய்யலாம்.

பணம் அனுப்புகிறவர்கள் தமது பெயரையும், முகவரியையும் மறக்காமல் மின்னஞ்சலில் அனுப்புங்கள்.

Kurutholai Charitable Trust
A/c no: 34309512327
Bank: State Bank of India
Branch: Sholinganallur, Chennai
IFS Code: SBIN0010525