Saturday, February 14, 2015

சென்னைக்கு மிக அருகில்

சென்னை என்பது உண்மையில் என்ன? அது ஊரா, உணர்வா, பிராந்தியமா, அல்லது நாளுக்கு நாள் தனது மாயக் கரங்களை விரித்தபடி ஒரு பலூனைப் போல தன்னைத் தானே ஊதிப் பெருக்கிக் கொள்ளும் ராட்சத உருவமா?

’ரியல் எஸ்டேட் பூம்’!

ஐந்து இலட்சத்துக்கு வாங்கிய இடம் ஐம்பது இலட்சமானது, எட்டு இலட்சத்துக்கு வாங்கிய வீடு எண்பது இலட்சம் ஆனது. 2003 க்கும் 2013 க்கும் இடைப்பட்ட கால கட்டம் ரியல் எஸ்டேட்டின் பொற்காலம். சென்னையில் மட்டுமல்ல. அநேகமாக இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் இதே கதைதான். கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வைத்து செங்கல்பட்டில், மதுராந்தகத்தில், ஸ்ரீபெரும்புதூரில், ஒரகடத்தில், இன்னும் சில புறநகர்ப் பகுதிகளில் வீட்டு மனைகளை வாங்கிப் போட்டபடியே இருக்கிறோம்.

இந்த ரியல் எஸ்டேட் பூமில் நடந்தது என்ன? என்னெண்ண சக்திகள் இதில் இயங்குகின்றன? இடம் வாங்குகிறவனும், விற்கிறவனும் வெறும் பொம்மைகள் மட்டுமே! அவர்களைத் தாண்டி எத்தனை பேர்கள்? எத்தனை கரங்கள்? ஆசைகள்? துரோகங்கள்? போட்டிகள்? பொறாமைகள்?

எல்லா டிவியிலும் மார்க்கெட் போன நடிகர்களை வைத்து ஓணான் கூட முட்டையிடாத பகுதியில் பிரிக்கப்பட்ட மனைகளை எல்லாம் சென்னைக்கு அருகில், சென்னைக்கு மிக அருகில் என்று விளம்பரம் செய்கிறார்கள். அதன் பின்னணியில் விநாயக முருகன் எழுதிய நாவல் ‘சென்னைக்கு மிக அருகில்’.

நாவல் தாம்பரத்துக்கு மேற்கேயுள்ள முடிச்சூர் சாலையில் பிரதானமாகச் சுழல்கிறது. அங்கு காலங்காலமாக விவசாயம் செய்து வந்த சித்திரை என்ற பெரியவர் தனது பேரன், பேத்திகளின் நெருக்குதலின் பேரில் நிலத்தை விற்க விழைவதே கதை. அவரது மனப் போராட்டங்களை வெகு அழகாகப் படம் பிடித்திருக்கிறார் வி.மு.

நித்யானந்தா-ரஞ்சிதா விவகாரம், லஷ்மி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேமா?’டி.வி புரோகிராம், சாதிப் பிரச்சினையில் சிக்குண்ட இளவரசன் - திவ்யா விவகாரம் என கடந்த சில ஆண்டுகளில் நடந்த முதன்மையான current affairs எல்லாம் ஒன்றாகக் கலக்கி, அவற்றை கதையோடு பின்னி அழகாகக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக குருஜி விஷயத்தினை இதில் சேர்த்தது சாரு நிவேதிதாவை மனதில் வைத்தா என்ற சந்தேகம் எழுகிறது. விநாயக முருகனை நேரில் பார்க்கும் போது விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் தேங்காய் பொறுக்கிய பையன் அருள்வாக்குச் சொல்லி பிரபலமான பிறகு பத்திரிக்கைகள் தேடி வந்தன. எழுத்தாளர்கள் புகழ்ந்தனர் என்றெல்லாம் பேசுகிறது நாவல். அந்த எழுத்தாளர் யாராக இருக்குமென்று அவதானித்ததும் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது.

கடந்த காலத்தில் (பெரியார், நேரு, காந்தி) ஒரு அய்யரும், பிள்ளைமாரும் பேசிக் கொள்ளும் போது சாதிய அடையாளங்களோடு உரையாடலைத் தந்திருக்கும் எழுத்தாளர், இடைநிலைச் சாதிப் பெண்ணொருத்தி தாழ்த்தப்பட்ட சாதிப் பையனைக் கல்யாணம் செய்து கொண்டதால் வந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது போது என்ன சாதி என்ற அடையாளங்களைப் பற்றி எழுதாமல் உஷாராகத் தவிர்த்திருக்கிறார்.

கிரேட். இந்தப் புத்தகத்தின் மற்ற எந்த இடத்தையும் விட இங்குதான் விநாயக முருகன் தனித்துத் தெரிந்தார் எனக்கு. எதார்த்த நாவல் எழுதும் போது, அதிலும் குறிப்பாக கிராமப் பின்னணியில் எதார்த்த நாவல் எழுதும் போது ஜாதிப் பெயரைக் குறிப்பிடாமலும், அந்த ஊரில் பேசப்ப்படும் வட்டார மொழியில் கதாப் பாத்திரங்கள் பேசாமலும் எழுதினால் முறையாக இருக்காது என்ற நம்பிக்கை எனக்குண்டு. அப்படி எழுதப்படும் பதிவுகளுக்கு சிக்கல் உருவாகும் காலமிது. குறிப்பாக பெருமாள் முருகனின் மாதொரு பாகன் பிரச்சினையை அடுத்து அந்த நம்பிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் போலிருக்கிறது.

இல்லையென்றால் சினிமாவில் வருவது போல ‘பண்ணையார்’ ‘முனியன்’ என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். கீழ் சாதி நாயே என்று எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் குறிப்பிட்ட சாதிப் பெயரைக் கொண்டு எழுதினால் போச்சு. பண்ணையாரின் இளம் மனைவி கீழ்சாதி முனியனோடு மாட்டுக் கொட்டகையில் கள்ள உறவு கொண்டிருந்ததைப் பற்றி எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். பண்ணையாருக்குப் பதில் தேவர், நாயக்கர், நாடார், கவுண்டர், வன்னியர் என்றோ, முனியனுக்குப் பதில் மாதாரி, பள்ளர், பறையர் என்றோ எழுதினால் ஆபத்தினை வலியச் சென்று வரவேற்றதாக ஆகி விடும். தமிழர்கள் எல்லாம் முட்டாள் பசங்க என்று எழுதினால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது - அது உண்மையாகவே இருந்தாலும் சொல்ல முடியாது. எழுத்தாளனே அந்த சாதிக்காரனாக இருந்தாலும் சொல்ல முடியாது. யாருக்கும் தெரியாமல் தனிமையில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

குறிப்பாக பெருமாள் முருகன் நிகழ்வுக்குப் பின்னர் எழுத்தாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். விநாயக முருகனுக்கு அத்தகைய நெருக்கடிகள் இருந்திருக்காது. அதை மனதில் வைத்தும் எழுதியிருக்க மாட்டார். அவரது எழுத்து ஸ்டைலில் அது இயல்பாக வந்திருக்கும் என்றே கருதுகிறேன். எனினும் நுட்பமாகக் கவனிக்க வேண்டியது விஷயமாக அமைகிறது.

ராஜீவ் காந்தி சாலையைப் போலவே சென்னைக்கு மிக அருகிலும் விநாயக முருகனுக்கு போதிய கவனத்தையும், பெயரையும் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக இரண்டு அம்சங்கள்.
1. விநாயக முருகனின் மொழியில் லயித்துப் போன காட்சியொன்றில் வின்செண்டும், நடிகை காவ்யாஸ்ரீயும் கலவி கொள்கிறார்கள்.

“அவர்கள் எவ்வளவு நேரம் ஆடையின்றிக் கிடந்தார்கள், எத்தனை முறை புணர்ந்தார்கள் என்று கணக்கில்லை. ஒரு உடலை உருக்கி இன்னொரு உடலுக்குள் ஊற்றி விளையாடினார்கள். இர்ண்டு உடல்களையும் உருக்கி ஒரே உடலாக மாற்றினார்கள். உலகின் இறுதி நாளன்று சந்தித்துக் கொள்ளும் பாம்புகள் போன்று ஆவேசமாக ப்ரியம் கொண்டார்கள். ப்ரியத்தின் கறை படிந்த படுக்கையைத் தாண்டி மேலே சூழலும் மின்விசிறி உதவியால் அறையெங்கும் ப்ரியத்தின் வாடை வீசிக் கொண்டிருந்தது.”

2. நாவல் இறுதிக் கட்டத்தை அடையும் போது பெரியவர் சித்திரை விவசாய நிலத்தை விற்று வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுத்து விடுகிறார். தனிமையில் வந்து அந்த மண்ணில் அமர்கிறார். அப்போது அவர் மனதில் ஒரு சிந்தனை ஓடுகிறது.
“இந்த வயலாச்சும் சென்னைக்குப் பக்கதுல இருக்கறதால இவ்வளவு பணம் வருது. ஆனா பட்டண வாடையே படாத ஜனங்க இருக்கற சின்னச்சின்ன கிராமங்கள் எத்தனை இருக்கும். அவங்களால வீட்டு மனையாக் கூடப் பிரிக்க முடியாதே. அவங்க எல்லாம் காலம் முச்சூடும் வெம்பி வெம்பித்தான் சாகணுமா? எத்தனை பேர் வெஷத்தைக் குடிச்சுட்டு வயல்ல செத்துப் போறத பேப்பர்ல போடுறாங்க?”

2 comments:

காவேரிகணேஷ் said...

அருமையான விமர்சனம்

Tamil Selvan said...

இந்த ரியல் எஸ்டேட் பூமில் நடந்தது என்ன? என்னெண்ண சக்திகள் இதில் இயங்குகின்றன? இடம் வாங்குகிறவனும், விற்கிறவனும் வெறும் பொம்மைகள் மட்டுமே! அவர்களைத் தாண்டி எத்தனை பேர்கள்? எத்தனை கரங்கள்? ஆசைகள்? துரோகங்கள்? போட்டிகள்? பொறாமைகள்? - Sir, Can you please explain this further, since we launched a Property Management Company recently - we would like to learn more. Thanks - Tamilselvan