Thursday, February 26, 2015

புலியூர் முருகேசன் மீதான தாக்குதலைக் கண்டிப்போம்

ஆம்பிரம் என்ற பெயரைக் கேட்டதும் இது என்னடா பெயரென்று எனக்குத் தோன்றியது. இன்னும் சொல்லப் போனால் அவசர அவசரமாகப் படித்ததில் ஆபிரகாம் என்று படித்த்துத் தொலைத்து விட்டேன். கரூரில் இருந்து ’ஆபிரகாம் பதிப்பகம்’ என்ற பெயரில் புதுப் பதிப்பகம் என்றுதான் நினைத்தேன். பிறகு நிதானமாகப் பார்த்த போது ’ஆம்பிரம்’ புலப்பட்டது.

தாம்பரம் போல எதாவது ஒரு பெயராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். பிறகு நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது அது ஒரு முன்னொரு காலத்தில் கரூரில் ஓடிய நதியென்று சொன்னார்கள். இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு அமராவதியைக் கூட அப்படித்தான் சொல்லுவார்கள். அமராவதி அமராவதின்னு கரூர்ல ஒரு ஆறு ஓடுச்சாம் என்று…

சில மனிதர்களுக்கு நதியின் மீதான ஈடுபாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நானும் கூட அப்படிப்பட்ட கிறுக்கன் என அறிவித்துக் கொள்வதில் கூச்சமேதுமில்லை. க.சீ.சிவக்குமார் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். அவரது கதைகளில் அண்டமாநதி என்று அடிக்கடி குறிப்பிடுவார். அந்தப் பெயரில் ஒரு பிரமாண்டம் ஒளிந்திருக்கிறது. அண்டமாநதி… அண்டம் என்றால் உலகம்.. மாநதி என்றால் பேராறு.. நான் அண்டமாநதியை பிரம்மபுத்திராவுக்கும், கங்கைக்கும் நிகராக கற்பனை செய்திருந்தேன். தாராபுரம்-கரூர் சாலையில் கன்னிவாடியைக் கடக்கும் போதெல்லாம் அண்டமாநதியைத் தேடியதுண்டு. ஒரு வேளை அந்தப் பேராறு சாலையைக் கடக்காமல் அதற்கு இணையாக கிழமேற்கில் ஓடுகிறதோ என்னவோ என நினைத்துக் கொள்வேன்.

பிறகு க.சீ.சிவக்குமாரை பெங்களூரில் சந்தித்த போது இது பற்றி வினவினேன். “அதுல எப்பவாவது தண்ணி போகும்” என்றார்.

”நல்லதங்காள் ஓடை மாதிரீங்களா?”

“அய்யோ அத்தாச்சோடு இல்லீங்க.. நல்லதங்கா ஓடை பெருசல்லோ!”

நல்லதங்காள் ஓடையில் ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் ஓடும். அதையே பெரியதென்கிறார் அவர். அப்படியானால் அண்டமாநதி? அது கடந்த காலத்தின் அடையாளம். அதன் மீதான ஈர்ப்பை மனிதனால் இலகுவாக உதற முடிவதில்லை. ஆம்பிரம் கூட அப்படித்தானிருக்கும்.

ஆம்பிரம் பதிப்பகம் நண்பர் புலியூர் முருகேசன் துவங்கினார். பழகுவதற்கினிய நண்பர். பலாப் பழம் போல பார்க்கத்தான் கரடுமுரடான ஆள். மூன்று ரவுண்டுக்கு மேல் குழந்தையாக மாறிவிடும் பச்சை மனதுக்கார். அதிலும் பாடகி ஸ்வர்ணலதாவைப் பற்றிப் பேசினால் அழுது விடுவார்.

அந்த முருகேசனைத்தான் நேற்று கரூரில் காட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு அடித்திருக்கிறார்கள். காவிரிக்கு மேற்கே பிறந்து காவிரிக்குக் கிழக்கே ஒற்றை எம்.எல்.ஏ.வாக தனியரசு நடத்திக் கொண்டு ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் ‘கொங்குச் சிங்கம்’ ஒன்றின் ஆட்கள் இதில் ஈடுப்பட்டுள்ளனர் என்கிறார்கள்.

”எழுத்து என் ஜீவிதம். ஆசிரியப் பணி என் ஜீவனம்” என்று சொன்ன பெருமாள் முருகன் வழக்கு இப்போது சென்னையில் நடக்கும் சூழலில் புலியூர் சம்பவம் கிலியூட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசிய எழுத்தாளர் தேவிபாரதி கூட தனது அடுத்த புத்தகத்தில் பல திருத்தங்கள் செய்த பிறகே வெளியிட வேண்டும் என்று விசனப்பட்டார். இது மிகவும் அபாயகரமான போக்கு.

சென்னைக்கு மிக அருகில் விமர்சனத்தில் குறிப்பிட்டது  போல எழுத்தாளர்கள் தமது கதைகளில் இனி சினிமாவினைப் பின்பற்றி ‘பண்ணையார்’ ‘முனியன்’ என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். கீழ் சாதி நாயே என்று எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் குறிப்பிட்ட சாதிப் பெயரைக் கொண்டு எழுதினால் போச்சு. பண்ணையாரின் இளம் மனைவி கீழ்சாதி முனியனோடு மாட்டுக் கொட்டகையில் கள்ள உறவு கொண்டிருந்ததைப் பற்றி எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். பண்ணையாருக்குப் பதில் தேவர், நாயக்கர், நாடார், கவுண்டர், வன்னியர் என்றோ, முனியனுக்குப் பதில் மாதாரி, பள்ளர், பறையர் என்றோ எழுதினால் ஆபத்தினை வலியச் சென்று வரவேற்றதாக ஆகி விடும். தமிழர்கள் எல்லாம் முட்டாள் பசங்க என்று எழுதினால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது - அது உண்மையாகவே இருந்தாலும் சொல்ல முடியாது. எழுத்தாளனே அந்த சாதிக்காரனாக இருந்தாலும் சொல்ல முடியாது. யாருக்கும் தெரியாமல் தனிமையில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

புலியூர் முருகேசனின் ”எனக்கு பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு” சிறுகதைத் தொகுப்பில் ‘நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்’ என்ற கதைக்கு எதிர்வினையே அவர் மீதான தாக்குதல். அதை ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன்.முடிந்தால் திருச்செங்கோட்டைப் போல கரூரில் கடையடைப்பு நடத்துங்கள்! உலகம் தெரிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பாக அமையட்டும்.

நான் ஏன் புலியூரை ஆதரிக்கிறேன் என்பதற்கான பதில் விரிவாக இந்த இணைப்பில்

3 comments:

Anonymous said...

saringa ilakia vanthi... you have all the rights to write what ever your mind masturbates.

Krishnan Balaa said...

வன்மத்தையும் வன்புணர்வுகளையும் எழுதுகின்ற எவரும் எழுத்தாளனாக முடியாது. எழுத்துக்கென்ற அற உணர்வற்று எதையும் எழுதிப் பணம் பண்ணலாம் என்றிருக்கின்றவ்ர்கள் எழுத்து விபச்சாரிகள். அவர்களைப் பற்றிய நிகழ்வுகளை நாம் மேலும் ஊதிப் பெரிதாக்காமல் இருப்பதே நலம்.

Anonymous said...

சாதிப் பிரச்னை தாண்டி, அடிப்படையில் இதில் சிறுகதை வடிவம் இல்லை. உண்மையில் நாவலாக எழுதியிருந்தால் மட்டுமே அவர் எடுத்துள்ள கருவுக்கு நியாயம் செய்திருக்க முடியும். இப்போதும்கூட ஒரு நாவலின் சுருக்கத்தைப் படிப்பது போலவே உள்ளது. சிறுகதைக்குள் கல்யாணம் பண்ணி குழந்தை பெறுவதெல்லாம் முடியாது! ஒரே ஒரு முக்கிய சம்பவம்தான் இருக்க வேண்டும். ஆனாலும் என்னவோ படித்து முடித்தபோது மனசு வலித்ததுங்க. முழுக்கதையையும் ஸ்கேன் செய்து போட்டிருக்கலாம். 'இதுதான் சர்ச்சைக்குள்ளான பகுதி' என்று கட்டம் கட்டுவது போலப் போடுவது நியாயமல்ல என்று நினைக்கிறேன். எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும் முதலில் படைப்பை முழுதாகப் படித்துவிட்டே அதைச் செய்யட்டுமே.