Saturday, March 28, 2015

கோவையில் கொட்டு மொழக்கு

நாளை கோவை செல்கிறேன்.


இந்த மாதிரியான நிகழ்வுகளில் புதிய நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு உண்டாகும் என்பதுதான் ஆகப் பெரிய சந்தோசம். இதற்காக சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். 

கொட்டு மொழக்கு நாவல் வாசித்த பல பேருக்கு மனதுக்கு நெருக்கமாக இருப்பதைக் காண முடிகிறது. தேவனூர்புதூர் அன்புச்செல்வன் ஃபேஸ்புக்கில் ‘என்னைத் தட்டி நெகிழ்த்திய கொட்டு மொழக்கு’ என அருமையான விமர்சனம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

//என்னைத் தட்டிநெகிழ்த்திய கொட்டுமுழக்கு !!
Ramanathan Palanisamy அவர்களின் பரிந்துரையின்படி 
 "கொட்டுமுழக்கு" VPP யில் வாங்கியிருந்தேன். இதைப்பற்றி நான் நம் மண்ணில் இருந்தபோதே எழுதியிருக்கவேண்டும்...நேரம் கிடைக்கவில்லை. குழந்தைகள் இருவரும் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது கிடைத்த இடைவெளிகளில் படித்து முடித்திருந்தேன். அந்த நாட்களில் நான் "கொட்டுமுழக்கு" நாயகன் "ராசு" வாகவே மாறிப்போயிருந்தேன். கிட்டத்தட்ட எண்பது சதவீதக்கதை என்னைப்பற்றியே இருந்தது. என் இருபத்து ஐந்தாம் வயதுவரை நான் இறந்தவரின் உடலத்தை அருகில் சென்று கண்டதில்லை. ஊருக்குள் வாழ்ந்த பெரியவர் யாரேனும் இறந்துபோனால் "ரவ்வுப் பொணம்" என்று சொல்லி ஓரிருநாள் வைத்திருந்து எல்லாச்சீரும் செய்து, வாத்தியம் போட்டு, தேர்கட்டி எடுப்பார்கள். எளவுக்கு சென்று ஒப்பாரி பாடியழுது தன் மனக்குமுறல்களை எல்லாம் சவத்தின்முன் கொட்டிவிட்டு வந்து அடித்துப்போட்டவர்கள் போல தூங்கியெழும் என் அம்மாவும், ஆத்தாவுமே இந்தக் கதையின் சாட்சிகளாய் நினைக்கிறேன்.

பத்து-இருபது ஆண்டுகளுக்குமுன் என நினைக்கிறேன். ஆம்புலன்சில் சவம் எடுக்கும் முறை வந்ததால் பாதிக்கப்படும் "தேர்கட்டும் தொழிலாளி யின்" வாழ்வியல் அவலத்தைப் படம்பிடிக்கும் "அன்னப்பட்சித் தேர்" என்ற சிறுகதை விகடன் அல்லது இந்தியா டுடே வில் (நினைவில் இல்லை) வெளிவந்திருந்தது. அந்தக் கதையை என் ஆத்தாவுக்குப் படித்துக்காட்டியிருக்கிறேன். அப்போது என் ஆத்தா வீட்டின் செவுத்து ஓரமாய் நீளவாக்கில்க் கட்டித் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு மூங்கில்களைக்காட்டி "இது நாஞ்செத்த பெறகு என்னைய தூக்கிட்டுப்போகறக்கு என்ர காசுல நானே வாங்கிவெச்சிருக்கிற மூங்கலுக" சொன்னதும், அதன்பிறகு அந்தவீட்டைக்கூட விற்றுவிட்டு வேறிடம் போனதும், மாளிகையில் பிறந்த ஐந்தரையடி பொம்பளை ஒன்னரையடியாகக் குறுகி மாடுகட்டும் சாளையில் உயிர் விட்டபோது விரைவில் காடுசேர்த்துவிட ஆம்புலன்சை அழைத்திருந்தார்கள். அவர் வைத்திருந்த ஆயிரம் பொருட்களோடு அந்த இரண்டு மூங்கில்களையும் விற்றிருப்பார்களோ என்று என்னைக் கேட்பதுபோல் இருந்தது ஆம்புலன்ஸில் கிடத்தப்பட்ட என் ஆத்தாவின் சவம். ஆக, அந்தக் கதையின் தாக்கத்திலிருந்தே இன்னும் நான் மீளவில்லை. அதற்குள் "கொட்டுமுழக்கு" என்ற நாவலின் தாக்கத்துக்கு ஆளாயிருக்கிறேன்.

முதன்முதலில் என் அய்யனின் இறந்தவுடலைக் காணப்போகிறோம் என்ற பயத்தில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் வேண்டுமென்றே தாமதம் செய்து வீடு வந்து சேர்ந்தபோது என் அய்யனை "சீக்கு ஒடம்பென்று" சீக்கிரமாகவே எடுத்திருந்தார்கள். என் அப்பிச்சி இறக்கும் தருவாய்... என் அம்மத்தா சொல்கிறார்...இன்னைக்கி அப்பிச்சிக்கி நம்ப நல்லா இல்ல..என்று தான் கட்டியிருந்த சிவப்புப் புட்டாப் போட்ட சீலையின் தலைப்பை வாயில் வைத்துக்கொண்டு அழுவதைக் காணச் சகிக்காமல் பயந்த நான் நண்பன் ஒருவன் வீட்டுக்குச்சென்று இருந்துவிட்டு மறுநாள்தான் என் அப்பிச்சி இறந்த எளவுக்குப் போயிருந்தேன். ஊருக்குள்ளே நோம்பி சாட்டியிருந்ததால், சீர் செனத்தி எதுவும் செய்யாமல், கொட்டுமொழக்கு ங்கூட போடாமல் இராத்திரியே எடுத்துவிட்டதாகவும் சொன்னார்கள். நெய் அரப்பும், பச்சைப்பந்தலும், பின்னப்பூவும், நெய்ப்பந்தமும் இதுநாள் வரையிலும் எனக்கு வெறும் கேள்வியறிவாகவே போய்விட்டது என்ற நெருடலில் இருந்து நான் மீளவே இல்லை.

ராசுவின் அம்மாயியின் கால்களை மாதாரிச்சிகள் கட்டி அழுததை படைப்பாளர் விவரிக்கும்போது நான் "ராசு" வாகவே மாறிப்போயிருந்தேன். என் அம்மத்தாவின் காலைக்கட்டி அவர்கள் அழுதபோது எனக்கேற்பட்ட எண்ணங்கள்தான் அவர் எழுத்திலும் மீண்டு எதிரொலித்ததாகவே எண்ணுகிறேன். இடையிடையே ராசு தன் எழுத்தாள நண்பருடன் அலைபேசியில் பேசுவது எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. அவர் போன் பண்ணுகிறார் என்ற வரியை வாசிக்கும்போதே "எளவூட்டில் தென்ன இப்பிடிப் பேச்சு வேண்டிக்கிடக்கிறது?? என்று எரிச்சல் வந்தது..." மற்றபடி எல்லா மாதாரிகளோடும், சீர் செஞ்ச பெரிய பையனோடும், எளவு காண வந்த பண்ணாடிகளோடும், கோடிபோட்ட சீர்க்காரர்களோடும், ஒரு ரெண்டுநாள் இருந்துபோட்டுத்தான் ஊர்வந்து சேர்ந்தேன்... நீங்களும் வாசிச்சுப்பாருங்க...
(ஒரு சிறு தகவல்: பொள்ளாச்சிப் பகுதிகளில் "கொட்டுமுழக்கு" என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் "வாத்தியம் போடுவது" என்றே சொல்வார்கள். ஆனால் உடுமலைக்கு அருகில் உள்ள ஊர்களில் மற்றும் கிழக்கில், "கொட்டுமுழக்கு" என்று சொல் வழக்கம் இருக்கிறது.)//

No comments: