Tuesday, April 07, 2015

குருத்தோலை ஞாயிறு

குறிப்பாக நான் இலக்கியக் கூட்டங்கள் எதற்கும் செல்வதில்லை. இதில் பெருமையோ, ஆணவமோ இல்லையென்ற போதிலும் முடிவதில்லை. எழுதுவதற்கும், வாசிப்பதற்குமே நிறைய விஷயங்களை சமரசம் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் கூட்டங்களுக்குச் செல்வது கொஞ்சம் சிக்கலான காரியமே.. இது போன்ற கூட்டங்களில் நண்பர்களைச் சந்திக்கவும், சுவாரசியமான கதைகள் பேசவும் சந்தர்ப்பம் ஏற்படும்.. ”ஓ.. நீங்கதானா அது?” என கேட்டுக் கொள்ளலாம்.

அப்படி இரண்டு கூட்டங்களை இரண்டு ஞாயிறுகளில் கடந்து வந்தேன். முதலாவது மார்ச் 26 ஆம் தேதி கோவையில் நடந்தது. கோவை இலக்கிய அமைப்பினர் மாதந்தோறும் கூடி கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று இந்தக் கூட்டத்தை நடத்துகிறார்கள். ஒரு மாதம் முன்னதாகவே சொல்லியிருந்தார்கள். கனவு சுப்ரபாரதிமணியன், “உங்க கொட்டு மொழக்கு நாவலைப் பத்தி நான் பேசப் போறேன்.. நீங்க கட்டாயம் வாங்க” என்று சொல்லியிருந்தார்.

கோவை எக்ஸ்பிரஸ் வடகோவைக்கும், ரயில் நிலையத்திற்கும் இடையில் அரை மணி நேரம் நின்றது. யாருக்காவது போன செய்யத் தோன்றியது. இரா.முருகவேள் நம்பருக்கு கை அனிச்சையாகப் போனது. “உங்க ஊருக்குத்தான் வந்துக்கிட்டு இருக்கேன்...” என்றேன். “நண்பா.. நான் சென்னையில் இருந்து வந்துக்கிட்டு இருக்கேன்.. ஸ்டேஷனுக்கு முன்னால டிரெயின் நிக்குது” என்றார்.

க்க்க்கூ என ரயில் ஊதிய சத்தம் நேரிலும் கேட்டது.  மூன்று பெட்டி தள்ளி போனிலும் கேட்டது. முருகவேள் இடதுசாரி சிந்தனையுடைய வழக்கறிஞர். பரதேசி படத்தில் மூலக்கதையான எரியும் பனிக்காடு நாவலை தமிழாக்கம் செய்தவர். அதே போல ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற புத்தகத்தையும் மொழி பெயர்த்தவர். அதையெல்லாம் கடந்து ‘மிளிர் கல்’ என்ற அருமையான நாவலை எழுதியிருக்கிறார். திருநெல்வேலி மனோன்மனியம் பல்கலைக் கழகத்தில் நேரில் சந்தித்த போது பரிட்சயம்.

சென்னையில் ஒரு கூட்டத்துக்குச் சென்று வருவதாகச் சொன்னார். என்ன அமைப்பு என்ற போது ’கலகம்’ என்றார். கழகமா, கலகமா தெரியவில்லை. தெரிந்து மட்டும் என்னவாகப் போகிறது.. கொம்பனுக்கு பொண்ணுக் கொடுத்த ராஜ்கிரணைப் போல இந்த மாதிரி இடதுசாரிகளுக்கு பெண் கொடுப்பவர்களை வெகுவாக எச்சரிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். வழக்கமாக கோவை இலக்கிய அமைப்பின் கூட்டங்களுக்கு வருவேன் என்றும், இன்று களைப்பாக இருப்பதாகவும் சொன்னார்.

பொதுவாக இலக்கியக் கூட்டங்களில் .. இந்தச் சொல்லே ஒரு நகைமுரண் என்பேன்... அதற்கு ஏன் இலக்கியக் கூட்டம் எனப் பெயர் வைக்கிறார்களோ தெரியவில்லை. என்ன கூட்டம் வருகிறது?? என்னதான் சமோசாவும், மசாலா டீ வாங்கிக் கொடுத்தாலும் ஆள் சேர்ப்பது கடினம். அப்படியும் அந்த நண்பர்கள் 52 மாதங்களாக இந்த நிகழ்வை நடத்தி வருகிறார்கள். மனதுக்கு இதமாக இருந்தது.

நிகழ்வு நடந்த அந்த உயர் நிலைப்பள்ளி அவினாசி ரோடு முடிந்து ரவுண்டானாவில் இருந்து மேற்கே இறங்கியதும் வலது பக்கத்தில் வருகிறது. அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி.. ஆனால் வெறும் அறுபது பேர் மட்டும் படிக்கிறார்களாம். தமிழ் மீடியம் பள்ளிகளின் நிகழ்காலச் சாட்சியாக நின்றது அது. இடம் இருப்பது நகரின் மையத்தில். இடத்தை விற்றால் ஆயிரம் கோடிக்குப் போகும் என நினைக்கிறேன். இன்னும் ஐந்தாண்டுகள் இந்தப் பள்ளி இதே வடிவத்தில் நீடித்தால் ஆச்சரியம்.

தமிழ் மொழியில் எழுதுவது கூட அப்படித்தான் என நினைக்க வேண்டியிருக்கிறது. எதோ ஒரு ஆர்வத்தில் செய்கிறோம்.. எனினும் இந்த மாதிரியான சில ஊக்குவிப்பு முயற்சிகளே தொடர்ந்து செயலாற்றத் தூண்டுகின்றன.

கொட்டு மொழக்கு நாவலை சுரேஷ்வரன் வெளியிடன் நித்திலன் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு சுப்ரபாரதிமணியன் நாவலைக் குறித்து அறிமுக உரையாற்றினார். அவர் அச்சில் வந்த எனது மூன்று நாவல்களைப் பற்றியுமே குறிப்பிட்டுப் பேசினார். முதல் நாவலான இரவல் காதலியில் சென்னையில் ஐ.டி துறையின் மொழியைப் பேசியவர் இரண்டாவது நாவலான குருத்தோலையில் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அமராவதிக் கரைக்கு அருகேயுள்ள கிராமத்திற்கு இடம்மாறி அங்கிருக்கும் மொழியைத் துல்லியமாகப் பேசியது குறித்து ஆச்சரியப்பட்டார். “நான் கூட அவர் கோஸ்ட் ரைட்டர் வெச்சு எழுதிட்டார்னு சந்தேகப்பட்டேன்” என்றார்.

மூன்றாவது நாவலான கொட்டு மொழக்கு பற்றிக் குறிப்பிடுகையில் சென்னையின் ஐடி வாழ்க்கையையும், கிராமிய வாழ்வையும் ஒரே கதையில் வெவ்வேறு தளங்களில் பேசுவதைக் விவரித்தார். மகிழ்வாக இருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஷங்கர நாராயணன், எம்.ஜி.சுரேஷ் ஆகியோர் சென்னையில் இருந்து வந்திருந்தனர். அவர்களைச் சந்திப்பது முதன்முறை. ஆட்டம் எழுதிய சு.வேணுகோபால் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. ஓவியர் ஜீவா, அம்சப்ரியா, அவைநாயகம், மயூரா ரத்தினசாமி, அனாமிகா, ப.தியாகு, யாழி, சோழநிலா, சதீஷ் சங்கவி, ஸ்ரீபதி பத்மநாபா உள்ளிட்ட பலரோடும் உரையாட முடிந்தது.

அடுத்த முறை கோவை சென்றால் கண்டிப்பாக ஒருவரைச் சந்தித்தே தீர வேண்டும்... அவர் கின்னஸில் இடம் பெற்ற ராஜேஷ் குமார்.

No comments: