Saturday, May 09, 2015

கொட்டு மொழக்கு - இரு விமர்சனங்கள்

ஈரோடு கதிர் கொட்டு மொழக்கு நூலுக்கு எழுதிய விமர்சனம்.
கூடுவிட்டு கூடு பாய்வது போலே சென்னையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் அமராவதி ஆற்றங்கரை கிராமத்தான் ’ராசு’வாக வாழ்ந்து பார்க்கும் ஒரு அற்புத அனுபவத்தை 155 பக்கங்களில் தந்திருக்கிறார் செல்லமுத்து குப்புசாமி.

சென்னையில் பணி புரியும் ராசுவின் அப்பச்சி (அம்மாவின் அப்பா) கிராமத்தில் இறந்து போகிறார். அந்த மரணச் சேதி என்ன மாதிரியான மன நிலையை ராசுவிற்குத் தருகிறது என்பதில் தொடங்கி இழவு காரியம் முடித்து சென்னை திரும்புவது வரைதான் கதை.
இழவிற்காக ஊர் திரும்பும் ஆயத்தங்களிலேயே நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். அப்பா, அம்மா, தாய்மாமன், அத்தை, அம்மாயி, அப்பச்சி என உள்வட்ட உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வும், இடியாப்பச் சிக்கல்களும் வாழ்க்கையில் நாம் கடந்த விதவிதமான உறவுகளை இழுத்து வந்து நினைவுபடுத்துகின்றது. இரண்டு நாட்கள் இழவு வீட்டுப் பந்தலில் அவன் இருந்தேயாக வேண்டிய சூழல். ராசுவிற்கு உறவுகளோடு முன்பின் ஏற்பட்ட நிகழ்வுகளும், இழவு வீட்டு நிகழ்வுகளுமென கதை வெகு வேகமாய் நம்மை தமக்குள் இழுத்துக் கொள்கிறது. கொங்கு மண்டலத்தின் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து பெரு நகருக்கு நகர்ந்து போனவன், தன் கிராமத்தில் இழவு வீட்டை எதிர்கொள்ளும்போது இருக்கும் கலந்துகட்டிய உணர்வுகளை மிக அழகாய், தெளிவாய் வடித்திருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் நம்மை ராசுவோடு பொருத்திப் பார்த்து ரசிக்கும் சாத்தியங்களுண்டு. இறுதியாய் வரும் கருதன் எண்ணற்ற கேள்விகளை எழுப்பிவிட்டுச் செல்கிறான். அவனுக்கு ராசு தம்மால் ஆன ஒரு பதிலை தந்துவிட்டுப் போகிறான். ஒரு கிராமத்து இழவு வீட்டின் சடங்குகளை ஆவணப்படுத்தும் ஒரு நாவல் என்றும் சொல்லலாம், அதே சமயம் கிராமத்து சாதி அரசியலையும் ஆவணப்படுத்த இது தவறவில்லை.
விவசாயக் குடும்பத்திலிருந்து வெளியேறி நகருக்குள் அடைபுகுந்தவர்கள் அனைவருக்கும் இந்த ”கொட்டு மொழக்கு” நாவலை அன்போடு பரிந்துரைக்கிறேன். வாழ்ந்த அல்லது தொலைத்த வாழ்க்கையை 155 பக்கங்களில் நீங்கள் இன்னுமொருமுறை வாழ்ந்து பார்க்கும் உத்திரவாதம் உண்டு.
*
எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமியை பல வருடங்களாக அறிந்திருந்தாலும், சந்தித்தது கடந்த வாரம்தான், இரண்டு வருடங்களுக்கு முன்பு பங்குச்சந்தை குறித்து அவர் எழுதியிருந்த ஒரு புத்தகத்தை பெரும் பிரயத்தனப்பட்டு என் கைகளில் சேர்த்திருந்தார். வாசித்துவிட்டீர்களா என்றும் அழுத்தம் கொடுத்தார். உண்மையில் இதுவரை அதன் அட்டை கூட நான் திறக்காமலே இருக்கிறேன்.
கடந்தவாரம் வந்தவர் தனது “கொட்டு மொழக்கு” நாவலை அளித்தார். அவருடன் உரையாடியபடியே நடுவாந்தரமாய் புத்தகத்தை விரித்து ஏதோ பக்கத்தை பார்வையால் வருடினேன். அந்த பக்கத்தில் வட்டார மொழியிலிருந்த உரையாடலொன்று மனதிற்குள் குறுகுறுக்கத் தொடங்கியது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என் பார்வை வருடிய பக்கம், பெருமாள் முருகனின் கங்கணம் நாவலை நினைவூட்டியது. ஆனால் இரண்டிற்கும் சற்றும் தொடர்பில்லை.
உடனே படிக்கவேண்டுமெனும் உந்துதலில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். இப்படி ரசித்து, ருசித்து, தீவிரமாக, வாசித்து நீண்ட நாட்களாகிவிட்டன.
வாசித்து முடித்தவுடன் வாசிப்பின் மகிழ்ச்சியை செல்லமுத்து குப்புசாமிக்கு வாட்ஸப்பில் பகிர்ந்த கையோடு, மும்பையில் இருக்கும் என் நண்பருக்கு இந்தப் புத்தகத்தை உடனே அனுப்ப விரும்பி அவரின் முகவரி பெற்று அனுப்பியிருக்கிறேன்.
பாராட்டுகளோடு... அன்பும் நன்றியும் செல்லமுத்து குப்புசாமி!
**********
கோவை ராமநாதன் கீழ்க்கண்ட விமர்சனத்தை கொட்டு மொழக்கு நூலுக்காக ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.

செல்லமுத்து குப்புசாமி அவர்களின் "கொட்டுமொழக்கு" புத்தகத்தை இன்று தான் படிக்க முடிந்தது. சென்னையில் ஆரம்பிக்கும் கதை மூன்றாவது அத்தியாயத்திலேயே தாராபுரம் பக்கம் வந்துவிடுகிறது. கிராமத்தில் பிறந்து வளர்ந்து ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஒருவன் நெருங்கிய உறவில் நடக்கும் ஒரு பெரிய காரியத்துக்கு வருவதும் அதைத்தொடர்ந்து அங்கு நடக்கும் நிகழ்வுகளுமே கதை. கொங்கு பகுதிகளில் எழவு வீட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் அவர்களின் சம்பிரதாயங்களையும் பழக்க வழக்கங்களையும் நகைச்சுவை உணர்வையும் உறவுகளுக்குள் இருக்கும் நெருக்கத்தையும், வன்மத்தையும் அவருக்கே உரிய எழுத்து நடையில் அழகாக எழுதியிருக்கிறார். ராசுவுக்கும் எடிமலைக்கும் நடக்கும் அலைபேசி உரையாடல், எழவு வீட்டில் ராசு துண்டை வாயில் வைத்து ஜெர்க் கொடுப்பது, ராசுவும் ரம்யாவும் காரில் போகும்போது ராசுவின் புத்திசாலித்தனமான பேச்சு போன்ற பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வேண்டியிருக்கிறது. இதை கதை என்பதையும் தாண்டி இந்த பகுதி மக்களின் வாழ்க்கை பதிப்பாகவே நான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி!

No comments: