Monday, May 30, 2016

நம் உரிமை... நம் கடமை

நான் வாழும் குடியிருப்புப் பகுதியில் பெருங்கோபம் கொண்டு வெடித்திருக்கிறார்கள் மக்கள். அதற்குக் காரணம் இரண்டு வாரம் முன் பெய்த மழைக்கே வீதிகளில், வீட்டுக்குள் நீர் புகுந்ததுதான். சென்னையில் டிசம்பர் மாதம் பெருமழை வந்ததெல்லாம் பெரிய விஷயமில்லை. அப்போது வீதிகளில் நீர் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்தது பெரிய செய்தியில்லை. இரண்டு வாரம் பெய்ததே ஒரு நாள் மழைக்கே நீர் சூழ்ந்து அவதியுற்ற சம்பவம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் சொந்த ஊரானா நூக்கம்பாளையத்தில் (பெரும்பாக்கம்-செம்மஞ்சேரி இடையில்) நடந்தேறியிருக்கிறது.

டாஸ்மாட் கடையில் MRP விலைக்கு மேல் பணம் கேட்டாலும் கொடுத்து சரக்கு வாங்குவது பழகிப் போன நமக்கு அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பிரச்சினையில்லை. நமது அடுத்த வேளை ஜீவனத்திற்குப் பிரச்சினை வரும் வரையில் அமைதியாக ஒதுங்கிப் போவோம். நம்மை கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றினால் பரவாயில்லை. சிறுகச் சிறுக ரத்தத்தை உறிஞ்சினால் பொறுத்துக் கொள்வோம். ஒரேயடியாக பிரச்சினை என்றால் பெருங்கோபம் கொண்டு வெடிப்போம். பிறகு மறந்து விடுவொம். அப்படித்தான் வெடித்திருக்கிறார்கள் எங்கள் ஏரியா மக்கள்.

சொன்ன விஷயங்களைச் செய்து கொடுக்காமல், வாடிக்கையாளர்களை உருட்டி மிரட்டிய பில்டரின் சில்லறைத்தனங்களை எல்லாம் கண்டும் காணாமல் இருந்தவர்கள் இப்போது கொதித்தெழுகிறார்கள். மகிழ்ச்சியாக உள்ளது. நம் கண் முன்னால் நம்மை ஏமாற்ற அனுமதிப்பது ஜனநாயகத்திற்கும், இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் நாம் செய்யும் துரோகம். வருகிறவன், போகிறவன் எல்லாம் நம் மீது ஏறட்டும் என சரணாகதியாகும் அவலம். நம் உரிமைகளுக்கே போராடாத நாம் பாதிக்கப்படும் பிறரின் உரிமைக்காக எப்போது போராடுவோம்?

மாதம் 5 ஆயிரம், 6 ஆயிரம் என maintenance bill போடும் பில்டரை அதற்கு கணக்குக் கொடு என்று கேட்டால், “Are you mad? அதெல்லாம் கேக்காதீங்க. நம்ம பில்டிங் வேல்யூ கொறஞ்சிரும். நெகட்டிவ் நீயூஸ் வெளியே பரவுச்சுன்னா நம்ம கம்யூனிட்டிக்கு கெட்ட பேரு” என்றெல்லாம் நம்மை சமாதானம் சொன்னவர்களில் சிலர் இன்று வீதியில் இறங்கி தர்ணா செய்கிறார்கள். காரில் ஊர்வலம் போகிறார்கள்.

”அதென்ன பாஸ் சனிக்கிழமக ஈவினிங் தர்ணா? முடிஞ்சா திங்கட்கிழமை காலைல சோழிங்கநல்லூர் சிக்னலை மறிச்சு தர்ணா பண்ண வேண்டியதுதானே?” என்றெல்லாம் யாரும் கேட்காதீர்கள். இந்த அளவிற்கு ஒன்று கூடி வந்திருப்பதே பெரிய விஷயம். நான் ஊரில் இல்லை. இருந்தால் நானும் கூடச் சேர்ந்து ஒரு பேனரைப் பிடித்து நின்றிருக்கலாம்.

BSCPL என்ற அந்த பில்டரின் பித்தலாட்டங்களை பட்டியல் போட்டால் பெரிதாகப் போகும். நிறைய எழுத வேண்டியிருக்கும். சுருக்கமாக இந்த இணைப்புகள் உங்களுக்கு.. 


நேரமிருந்தால் பாருங்கள். சென்னையில் வீடு வாங்கியவர்கள், வாங்கப் போகிறவர்கள் அனைவருக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும்.

அந்த பிக்காலி பில்டர் மீது நான் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நாலு வருசம் ஆகிறது. எப்போது கேட்டாலும், ”ஜட்ஜ் லீவ்ல போயிருக்காரு சார்” என்கிறார் என் வக்கீல்.  ”மொதல்ல நீங்க கோர்ட்டுக்குப் போறீங்களா ஸார்?” என்று கேட்க வேண்டும். 


No comments: