Wednesday, April 05, 2017

விவசாயக் கடன்கள் தள்ளுபடி

விவசாயக் கடன்கள் தள்ளுபடி குறித்துப் பேசுவது சிக்கலான விஷயம். முழுமையாக எதிர்க்கவும் முடியாது. அதே நேரம் அப்படியே ஆதரிக்கவும் தயக்கமாக உள்ளது.

மாநிலமெங்கும் கடும் வறட்சி. இந்த கோடை காலத்தில் விதவிதமாக வெள்ளாமை வைத்து சம்பாதித்து விட முடியுமென்று யாரும் முயலவில்லை. கால்நடைகளையும், தென்னை உள்ளிட்ட நீண்ட காலப் பயிர்களையும் காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். எப்போதும் வறட்சியைக் காணாத பொள்ளாச்சியைச் சுற்றி போர்வெல் வண்டிகள் பூமியைத் துளையிட்ட வண்ணம் இருக்கின்றன. எனில் மற்ற பகுதிகளைப் பற்றி யூகித்துக் கொள்ளலாம்.

சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த போது எங்கள் ஊரில் ஒருவர், “ஏப்பா இந்த ஷேர் மார்க்கெட் எல்லாம் சூதாட்டம்னு பேசிக்கறாங்களே?” என்று கேட்டார்.

“நீங்க பண்ற விவசாயத்தை விட பெரிய சூதாட்டம் இல்லீங்க” என்றேன் அவரிடம்.

விவசாயம் அப்படித்தான். வேறு வேலை தெரியாது. கை விடவும் முடியாது. கூட எமோஷனலான விஷய்ம் வேறு. மண்ணை வைத்து செய்யும் வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம்+அதிகாரத்தின் சிறு துளி கூட மண்ணில் வைத்து செய்யும் வேளாண்மையில் கிடைக்காது.

விவசாய நிலங்களின் விலைக்கும், அவை கொடுக்கும் இலாபத்திற்கும் (கணக்குப் பார்த்து அப்படியொன்று இருந்தால்) தொடர்பே இல்லை.  Agricultural lands in India is perhaps the most illiquid & disproportionately overpriced asset class. விவசாய நிலங்களின் விலையை நிர்ணயிக்கும் காரணிகளில் விவசாயம் சார்ந்த காரணிகள் சொற்பமானவை என்பேன்.

விவசாயம் தொழிலாக இல்லை. ஒன்று அது ஓவராக புனிதப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது. அல்லது மிகக் கேவலமாக மலினப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது. அதை ஒரு தொழிலாக, வியாபாரமாகக் கருதி அதை அணுகாத வரைக்கும் அதனை நம்பி வாழ்வது கடினம்.  அதை தொழிலாக அணுகி கடைபிடிக்குமளவுக்கு விவசாயப் பெருங்குடி மக்கள் இன்றைய நவீன பொருளாதாரச் சூழலில் பயிற்றுவிக்கப்படவில்லை.

”காடு வெளஞ்சென்ன மச்சா? நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்?
காடு வெளையட்டும் புள்ளே. நமக்கு காலமிருக்குது பின்னே”

இந்த MGR பாடலில் வருவது போல காடு விளைவதும், அப்படியே விளைந்தாலும் காலம் வருவதும் நிச்சயமற்றவை. நிச்சயமற்ற காரணிகளை சுற்றி நிகழும் ஒவ்வொரு விஷயமும் சூதாட்டமே.

இந்தப் பின்னணியில் தான் விவசாயக் கடன்கள் தள்ளுபடியை நோக்க வேண்டியிருக்கிறது. வறட்சியாக இருக்கட்டும் அல்லது வேறு வகையான இயற்கைப் பேரிடராக இருக்கட்டும். அதனால் ஏற்படும் இழப்பினை உழவன் பெற வேண்டும்.  அதில் துளியும் மாற்றுக் கருத்து கிடையாது. அவன் அடையும் நஷ்டம் கூட்டுறவு வங்கியில் தள்ளுபடியாகும் கடனை விடக் கூடுதலாக இருக்கக் கூடும்.  அதனால் உரிய பயிர் காப்பீடுகளை அனைவ்ருக்கும் கிடைக்கச் செய்தல், அது குறித்த பரப்புரை மேற்கொள்ளுதல், பயிர்க் கடன் வாங்கினால் அந்தக் கடனோடு சேர்த்தே இன்சூரன்ஸும் இருக்க வேண்டும் என்கிற ரீதியிலான கடனகளை உருவாக்குதல் (ஹவுசிங் லோன்களில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது) அவசியம்.

எவ்வித இழப்பையும் சந்திக்காமல் 2-3 இலட்ச ரூபாய் கடன் தள்ளுபடி ஆனவர்கள் இருக்கிறார்கள்.  பயிர்க் கடன் வாங்குவதற்கு அலைய முடியாமல் அக்கம் பக்கத்தில் கைமாத்து வாங்கி அல்லது  நகைக்கடன் பெற்று விவசாயத்தில் நட்டம் அடைந்தவர்களும் இருக்கிறார்கள். அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் வஞ்சிக்கப்படுவோர் இவர்களே. தற்கொலைக்கு தள்ளப்படுவோரில் பெரும்பாலானோரும் இவர்களே !!

Monday, March 27, 2017

அசோகமித்திரன் - Daddy finger

நமது ஊரில் தந்தை-மகள் உறவு குறித்து நெகிழ்ச்சியாக பேச நிறைய உண்டு. ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாக அநேகர் உணர்ந்திருக்கக் கூடும்.

அதே அளவுக்கு அப்பா-மகன் உறவின் நெருக்கம் குறித்து நாம் பேசுவதில்லை.

நானும் என் தந்தையும் அளவோடுதான் பேசிக் கொள்வோம் என்றாலும் இருவருக்கும் இடையே நிலவும் புரிதலும், இணக்கமும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. உடன்படாத விஷயங்கள், முரண்பாடான அணுகுமுறைகள் சிலவற்றைக் கடந்தும் நான் ஒரு நல்ல மகனாகவே நீடிக்கிறேன்.

அதற்கு அவர் ஆகச் சிறந்த தகப்பனாக இருந்தார் என்றெல்லாம் பொருளில்லை. நான் அவரைக் காட்டிலும் சிறந்த தகப்பனாக நான் நடந்து கொள்வதாக நம்பிக்கொண்டிருக்கிறேன். ஒருவன் தன் தந்தையைக் காட்டிலும் நல்ல தகப்பனாக இருப்பது தன் தந்தை தனக்கு வாங்கிக் கொடுத்த பொம்மையை விட கூடுதலாக தன் மகனுக்கு வாங்கிக் கொடுப்பது (மட்டும்) அல்ல என்ற புரிதலோடே இந்த நம்பிக்கையை வளர்த்திருக்கிறேன்.

அவர் என்னைப் போல சிறந்த தகப்பனாக இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் தன் ஆயுள் முழுவதும் நல்ல மகனாக இருந்திருக்கிறார். நான் நல்ல மகனாக இருப்பதற்கு அது முக்கியமான தூண்டுதலாக இருக்கலாம். தன் கணவன் நல்ல மகனாக இருப்பது புரியாமல் அம்மா திட்டிய வண்ணமே இருந்திருக்கிறார். அது புரிவதாலோ என்னவோ (அல்லது இவனைத் திருத்த முடியாது என்பதாலே) என் மனைவி திட்டுவதில்லை.

ஒரு வேளை வருங்காலத்தில் என் மகன் என்னளவில் பாதியாவது நல்ல மகனாக இருக்க நான் என் தந்தையிடம் நடந்து கொள்ளும் போக்கு உதவினால் போதும். அதைக் காட்டிலும் முக்கியமாக என்னை விட நல்ல தகப்பனாக அவன் உருவெடுப்பதும் என் பொறுப்புதானே!!

இன்றோடு நாலு வாரமாக என் மகனைப் பிரிந்திருக்கிறேன். இன்னும் நான்கைந்து நாளில் திரும்பி விடுவேன். அவன் பிறந்த மூன்று வருடத்தில் ஒரு மாதத்திற்கு மேல் அவனைப் பிரிந்திருப்பது இதுவே முதல் முறை..
நேற்று போனில் ”Daddy finger..Daddy finger..Where are you?” என தன்னையும் அறியாமல் உளறுகிறான்.

அதையேதான் இனி ஒரு போதும் பேனாவைப் பிடிக்காத அசோகமித்திரனின் விரல்களுக்கு அஞ்சலியாகப் போட்டேன்..