Sunday, December 09, 2018

ஒரு பொருளாதார அடியாளின் காதல் வாக்குமூலம்

'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்', 'எரியும் பனிக்காடு' ஆகிய புகழ் பெற்ற மொழிபெயர்ப்புகளை ஆக்கியவரும், 'மிளிர் கல்', 'முகிலினி' முதலிய கவனிக்கத்தக்க நாவல்களை எழுதியவருமான எழுத்தாளர் இரா. முருகவேள் அவர்கள் 'இரவல் காதலி' குறித்து

****
செல்லமுத்து குப்புசாமியின் “இரவல் காதலி” நாவல் படித்து இரண்டு மூன்று மாதமிருக்கும். ஒரு சுகமான மணத்தைப் போல, இனிப்பின் சுவையைப் போல நாவல் மனதில் தங்கி விட்டது. அதனால்தானோ என்னவோ எழுத வேண்டும் என்று நினைத்துத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்து விட்டேன்.
இருபத்தி நான்கு மணிநேரமும் வேலையைக் கட்டிக் கொண்டு அலையும் கணவன், போராடித்துப் போயிருக்கும் அழகான மனைவி, சுறுசுறுப்பான புத்திசாலி இளைஞன். கதை புரிகிறது அல்லவா?
ஆனால் ஆ என்று ஆச்சரியப்பட வைக்க ஏராளம் இருக்கிறது நாவலில். SAP IS OIL என்பது எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைக்கான பிரத்யேக மென்பொருள். உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை இந்த நம்பகமான மென்பொருள் மூலமே நடத்துகின்றன. இந்த மென்பொருளை செய்ல்படுத்தும் ஒப்பந்தங்கள் பிக் ஃபைவ் எனப்படும் IBM, Accuenture, Deloite போன்ற கம்பெனிகளுக்கே கிடைக்கும். இதில் சின்னச் சின்ன வேலைகள் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கும் . . . .
இந்த ரீதியில் நகர்கிறது கதை. முதல்பகுதி கஜாக்ஸ்தானில் நடக்கிறது. அசோக் பெரியசாமியும் காய்திரியும் அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள். கஜாக்ஸ்தானின் பனிமூடிய சாலைகள், ஓட்டல்கள், இந்திய சைவ ரெஸ்டாரெண்ட்டுகளில் (நண்பர் சைவத்தை அப்படி நாசுக்காகக் கிண்டல் செய்கிறார். ஹா ஹா ஹா) சந்தர்ப்பங்கள் நெருங்கியும் விலகியும் செல்வதையும் தவிப்பையும் செல்லமுத்து குப்புசாமி வருணிப்பது இருக்கிறதே கவிதை அது. அப்படி ஒரு அழகு.
இரவல் காதலியின் தனித்துவமான தன்மை எனன்வெனில் எழுத்தாளர் செயற்கையாக பெண்ணில் மனதுக்குள் புகுந்து அதைத் தன் மனம்போன போக்கில் புரிந்து கொள்ள முயல்வதில்லை. பெண்கள் முழுக்க முழுக்க ஆணின் பார்வையிலேயே பார்க்கப்படுகிறார்கள்.
சற்றே புதிர்த்தன்மை, அன்பிரிடிக்டபிளிடி(அதாவது ஆண்களுக்கு), அக்கறை, முதிச்சி என்று ரவிவர்மாவின் மோகினியின் வசீகரம் . . . .ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் இப்படியொரு பெண் கட்டாயம் இருந்திருப்பாள். அதை நம்மை உணரவைத்ததுதான் செல்லமுத்து குப்புசாமியின் நடையின் சிறப்பு.
நாவல் முழுவதும் மென்பொருள் துறையின் பதற்றம், அவசரம், நெருக்கடிகள், என்று நாம் அறியாத உலகம் அதன் நுட்பங்களோடு்அற்புதமாக இழையோடுகிறது. பரந்து விரிந்த அனுபவம் கொண்ட எழுத்தாளர்கள் மெலோடிராமாவில் சிக்கிக் கொள்வதில்லையோ? நச்சி எடுக்கும் அதீத துயரம், புலம்பல்கள் இல்லாத ஒருவித நறுக்குத் தெரித்தது போன்ற துள்ளிப் பாயும் நடையை தமிழின் நவீன எழுத்தாளர்களிடையே அடிக்கடி பார்க்கிறேன்.
அந்த ஆன்லைன் உரையாடல் ஒவ்வொரு எழுத்தும் நவீனம், ஸ்டைல், உண்மை. அதன் அதீத உண்மைத்தன்மையே அதை எழுத்தாளரோடு ஒப்பிட்ட வைத்து யார் என்று கேட்டுவிடத் தோன்றும் . . . எழுத்தாளன் எழுதும் ஒவ்வொரு பாத்திரமாகவும் இருக்க முடியாதுதான். இருந்தாலும் வாசகர்கள் அபப்டியொரு ஊகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு நிலைமை வந்தால் என்ஜாய் குப்புசாமி சார்.

பின் குறிப்பு:
இரவல் காதலி நூல் அமேசான் கிண்டில் வடிவில் ebook ஆக கிடைகிறது. https://www.amazon.in/dp/B01N2PEKYR